Wednesday, July 18, 2007

லலிதா நவரத்தின மாலை 3


இப்பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்
{தொடர்ச்சி}


7. கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மரமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேபூமியில் பிறந்த நான் புரியும் எல்லா செயல்களும் எந்த வித குறைகளும் இல்லாமல் எல்லா பயன்களும் குறைவின்றி கிடைக்கும் வரமும், தியிலிட்டுப் பொசுக்கினாலும் 'ஜெய சக்தி' என்று உன் அருளில் உறுதி கொண்டு அடியேன் சொல்லும் வீரமும், தாயே நீ வந்து தருவாய். மோமேதகமே! குளிர் வான் நிலவே! குழலைப் போல் இனிய வாய்மொழியைக் கொண்டவளே! மாமேரு மலையில் வாழும் கிளியே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

8. பது மராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவிகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேஇன்பம் அருள்பவளே! இன்ப வடிவே! அழகிய கண்கள் உடையவளே! பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே! அம்மா! நிலையில்லா மன நோய்களை நீக்குபவளே! அனைத்துக் கலைகளையும் அறிந்தவளே! சம்புவின் சக்தியே! நிலவை அணிந்தவளே! தலைவியே! கருநிறத் திருமேனியைக் கொண்டவளே! எல்லா வித அணிகலன்களும் அணிந்திருப்பவளே! மரணமிலா பெருவாழ்வின் உருவே! என்றும் மங்கலகரமானவளே! அழகிய மேருமலை சிகரத்தில் நிலைத்து வசிப்பவளே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

9. வைடூர்யம்

வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாரொலி யொத்த விதால்
நிலையற் றெளியேன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற் றநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேநான் செய்த முன்வினைப்பயன்களோ வலையை ஒத்தது. என் மனமோ மானைப் போன்றது. அந்த மான் மருளும் படி அறையும் பறை போன்றவை உலக இன்ப துன்பங்கள். இப்படி வினை வயப்பட்டு இன்ப துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டு மானைப் போல் என் மனம் நிலையற்று எளியேன் அழிந்துப் போகலாமோ? இது தகுமோ? இவையெல்லாம் தூளாகப் போகும் படி வரம் தருவாய். அலைவற்று அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியார்களின் திருமுடியில் வாழும் வைடூரியமே! மலையத்துவச பாண்டியன் மகளே! மீனாட்சியே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

பயன்

எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வா ரவரே (மாதா)


{முற்றும்}

8 comments:

 1. வலையொத்த வினை கலையொத்த மனம் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. பல முறை தனிமையில் இருக்கும் போது பாடிக் கொண்டிருக்கும் பாடல் இது.

  ReplyDelete
 2. அம்பாளின் நவரத்தின மாலையை ஆடியில் அளித்த அன்புத்தோழிக்கு நன்றி!

  ரஞ்சனி நந்தினி அங்கணி பாடல் வடமொழி அடுக்கி அழகாக வரும்!
  வலையொத்த வினை கலையொத்த பாடல் தமிழ் அடுக்கி அழகாக வரும்!

  இப்படி இரண்டும் சேர்ந்த மாலை மிகவும் சிறப்பாக அன்னையை அலங்கரிக்கிறதே! அழகோ அழகு!

  மலையத்துவசன் மகளே வருவாய்
  மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
  மலையத்துவசன் பெற்ற பெரு
  வாழ்வே வருக வருகவே!

  ReplyDelete
 3. இரண்டாம் பதிவு இன்னமும் வெளியிடாமல் இருக்கிறதே!

  ReplyDelete
 4. மிக அருமையாக பொருள் விளக்கம் தந்த திரு குமரன் அவர்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 5. அந்த இரண்டு பாட்டில் உள்ள வேறு மொழி பற்றி விளக்கி சொன்னது பற்றி மிகவும் சந்தோஷம் திரு ரவி. வாழ்த்துக்கு நன்றி திரு ரவி.

  ReplyDelete
 6. இரண்டாம் பாகம் இப்பொழுது வந்துவிட்டது திரு வி எஸ் கே அய்யா.

  ReplyDelete
 7. இரண்டாம் பகுதியை அடியேன் தான் தவறுதலாக அழித்துவிட்டேன். அன்புத்தோழி மீண்டும் அந்தப் பகுதியை இட்டுவிட்டார். நானும் பொருளை எழுதிவிட்டேன் எஸ்.கே.

  ReplyDelete
 8. மூன்று பதிவுகளையும் ஒருங்கே படித்து முடித்தேன்....இந்நாளை நன்னாளாக்கியதற்கு நன்றி அன்புத்தோழி.....

  ReplyDelete