Thursday, July 5, 2007

"மாரியம்மன் தாலாட்டு" 17 [421-450]


"மாரியம்மன் தாலாட்டு" 17 [421-450]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்


"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 421-450]



கங்கை முழுகியம்மா கிளிமொழியே தவமிருந்தாய்

வைகை மூழ்கியம்மா வனமயிலே தவமிருந்தாய்

தவத்தில் மிகுந்தவளே சத்தகன்னி தாயாரே

ஆற்று மணலெடுத்து அரனாரை யுண்டுபண்ணாய்

சேற்று மணலெடுத்துச் சிவனாரை யுண்டுபண்ணாய்

கம்பை நதியிலே காமாட்சி தவமிருந்தாய்

இருநூற்றுக் காதவழி திருநீற்றால் கோட்டையிட்டாய்

திருநீற்றால் கோட்டையிட்டாய் திகம்பரியே மாரிமுத்தே

அருணா சலந்தனிலே ஈசான்ய மூலையிலே

திருவண்ணா மலையிலேதான் தேவிதவமிருந்தாய் [430]


அருணா சலந்தனிலே ஆத்தாள் தவமிருந்தாய்

ஈசான்ய மூலையிலே இருந்தாய் பெருந் தபசு

இருந்தாய் பெருந் தபசு இடப்பாகம் பேறு பெற்றாய்

இடப்பாகம் பேறுபெற்றாய் ஈஸ்வரியே மாதாவே

காக முதுகினில் கதம்பப்பொடி பூசிவைத்தால்

காக மறியுமோதான் கதம்பப்பொடி வாசனையை

கொக்கு முதுகினிற் கோமேதகங் கட்டிவைத்தால்

கொக்கு மறியுமோதான் கோமேதகத்தி னொளியை

மூலக் கனலின் முதன்மையாய் நின்ற சக்தி

பாலனுக்கு வந்த பார எரிச்சல்களில் [440]


காலெரிவு கையெரிவு கட்டழகி வாங்குமம்மா

குத்தல் குடைச்சல் குலைமாரிடி நோவு

மண்டை குடைச்சலோடு மாரடைப்பு தலைநோவு

வாத பித்த சீதசுரம் வல்பிணியைக் காருமம்மா

இடுப்புக் குடைச்சலைத்தான் ஈஸ்வரியே வாங்குமம்மா

பித்த யெரிவுகளைப் பெற்றவளே வாங்குமம்மா

கழுத்து வலியதனைக் கட்டழகி வாங்குமம்மா

பத்திரியால் தான்தடவி பாரமுத் தழித்துவிடு

விபூதியைப் போட்டு இறக்கிவிடு முத்திரையை

வேப்பிலை பட்டவிடம் வினைகள் பறந்தோடுமம்மா [450]


[வினைகள் பறந்தோடச் செய்ய அன்னை வருவாள்]



3 comments:

  1. அந்த அம்பாளுக்கே, தன் இடபாகத்தை தர சிவன் தவம் செய்ய வைத்தார். ஆனால் பக்தர்களுக்கு, தன் மனதிலே நினைத்தாலே முக்தி தரும் இடமாக திருவண்ணாமலையை வைத்தார். அவர் கருணையே கருணை தான். ஆனால் அடிக்கடி அம்பாளை பூலோகத்திற்கு அனுப்பி விடுகிறார். இது தான் எனக்கு ஒரே வருத்தம். பாட்டு நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. ஐயா நீங்களும், KRS ம் கேட்ட எட்டுக்கு, நான் எட்டு போட்டிருக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நான் சிறிது நாள் முன்பு தான், நீங்கள் எட்டுக்கு கூப்பிட்டதை பார்த்தேன்.

    ReplyDelete
  3. //ஆனால் அடிக்கடி அம்பாளை பூலோகத்திற்கு அனுப்பி விடுகிறார். இது தான் எனக்கு ஒரே வருத்தம். பாட்டு நன்றாக உள்ளது. //

    இதில் வருத்தம் என்ன அன்புத்தோழியே!

    அப்போதுதானே, அதைச் சாக்காக வைத்து அவரும் பூமிக்கு வந்து அருள் பாலிக்க முடியும்.

    இல்லாவிட்டால், எல்லாரும் மனதில் நினைத்துக் கொண்டே அவரிடம் போய்ச் சேர்ந்து விடுவார்களே!
    :))

    "எட்டு" போட்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete