Thursday, July 12, 2007

"மாரியம்மன் தாலாட்டு" 24 [641-684]

"மாரியம்மன் தாலாட்டு" -- 24 [641-684]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள்[641-684]


தேவேந்திரன் புத்திரனார் தேர்விஜயன் தாமிருந்தார்

நகுல சகாதேவர் நலமாய்க் கொலுவிருந்தார்

கானக் குயிலழகர் கட்டழகர் வீற்றிருந்தார்

ஐவர்களுங் கூடி அன்பாய்க் கொலுவிருந்தார்

பட்டத் தரசி பைங்கிளி சுபத்திரையும்

ஆயன் சகோதரியா ளாரணங்கு வீற்றிருந்தாள்

நல்லதங்காள் வீரதங்காள் நல்லசங் கோதியம்மாள்

அந்தமுள்ள சுந்தரியா ளாரணங்கு வீற்றிருந்தாள்

மலையனூர் தானமர்ந்த மாரிக் கொலுவிருந்தாள்

கைச்சூலங் கப்பறையுங் கையிற் கபாலமுடன் [650]


பச்செலும்பு தின்றால் பாலொழுகுமென்று சொல்லி

சுட்டெலும்பு தின்றவளே சுடலைவனங் காத்தவளே

அக்காளுந் தங்கையரும் ஐந்திரண்டேழு பேரும்

ஐந்திரண்டேழு பேரும் அங்கே கொலுவிருந்தார்

தங்காது பேய்பில்லிதன் பேரைச் சொன்னவுடன்

அங்காள ஈஸ்வரியும் அமர்ந்து கொலுவிருந்தார்

தொல்வினை நீக்கிச் சுகுணமதை யளிக்கும்

எல்லைப் பிடாரியரும் இங்கே கொலுவிருந்தார்

காவலர்கள் தான்புகழக் கனகசிம் மாதனத்தில்

காவ லதிகாரி கட்டழகி வீற்றிருந்தாள்
[660]


இந்தமனைமுதலா ஏழுமனை யுன்காவல்

சந்தத முன்காவல் சாதுகுண மாரியரே

காவல் கவனமம்மா கட்டழகி மாரிமுத்தே

காவலுக் குள்ளே களவுவரப் போகுதம்மா

பார சவுக்கிட்டுப் பத்திரமாய்க் காருமம்மா

தீரா வினைகளைத்தான் தீர்க்கும் பராபரியே

தாழும் பதிகளைத்தான் தற்காத்து ரட்சியம்மா

ஏழு பிடாரியும் இசைந்து கொலுவிருந்தார்

முத்தலு ராவுத்தன் முனையுள்ள சேவகரும்

முற்றத்தில் வந்து முனைந்து கொலுவிருந்தார் [670]


பூவாடை கங்கையென்று பூரித்துக் காத்திருக்கும்

பாவாடை ராயனும் பக்கங் கொலுவிருந்தார்

தாட்சியில்லா சிவசங்கரியா ளென்றுசொல்லும்

ஆச்சியுடன் கொலுவில் அமர்ந்து கொலுவிருந்தார்

தேவித் திருக்கொலுவில் சேர்ந்து கொலுவிருந்தார்

ஆயித் திருக்கொலுவில் அனைவரும் கொலுவிருந்தார்

மாரிக் கொலுவில் மனமகிழ்ச்சி யாயிருந்தார்

வீரியக் கொலுவில் வீற்றிருந்தா ரெல்லோரும்

ஆலித்துத் தானிருந்தார் அம்மைத் திருக்கொலுவில்

பாலித்துத் தானிருந்தார் பராபரியாள் தன் கொலுவில் [680]


கூடிக் கொலுவிருந்தார் கொம்பனையாள் தன் கொலுவில்

நாடிக் கொலுவிருந்தார் நாரணியாள் தன்கொலுவில்

சந்தேகம் போக்கிச் சாயுச் சியமடைய

சந்தோஷமாகத் தாமிருந்தா ரெல்லோரும் [684]



[சந்தோஷமாயிருந்தவர் எல்லோரும் என்ன சொல்லப்போகிறார்கள்? நாளைய இறுதிப் பதிவில் காண்போம்!!இதுவரை வராதவர்களையும் அழைத்து வாருங்கள்! ]

4 comments:

  1. ////ஆலித்துத் தானிருந்தார் அம்மைத் திருக்கொலுவில்
    பாலித்துத் தானிருந்தார் பராபரியாள் தன் கொலுவில்
    கூடிக் கொலுவிருந்தார் கொம்பனையாள் தன் கொலுவில்
    நாடிக் கொலுவிருந்தார் நாரணியாள் தன்கொலுவில்///

    arumai
    thaalattup paaadal enru saathaaraNamaaka winaththuvidamudiyaatha
    soRp piravaakam - uNmaiyil mey silirkka vaikkiRathu!

    ReplyDelete
  2. மடை திறந்த வெள்ள்ளம் போல் வரும் சொற்கள் நீங்கள் சொல்வது போல் மெய்சிலிர்க்கத்தான் வைக்கிறது ஐயா!

    நன்றி!

    ReplyDelete
  3. //thaalattup paaadal enru saathaaraNamaaka winaththuvidamudiyaatha//

    மிகவும் உண்மை வாத்தியார் ஐயா!
    அன்னை கொலுவிருக்கும் ஒவ்வொரு உற்சவத்திலும் பாடலாம் போல், அவ்வளவு அருமையாக உள்ளது!

    //முத்தலு ராவுத்தன் முனையுள்ள சேவகரும்//

    SK...ராவுத்தன் என்று வருகிறதே!
    பாடல் நாயக்கர் காலம், இல்லை அதற்குப் பிந்தி இருக்குமோ?

    என்ன நாளை இறுதிப் பதிவா? அதற்குள் தாலாட்டு நிறைவுறுகிறதா என்ன? அவசியம் ஆஜராகிறோம்! :-)

    ReplyDelete
  4. இதற்கே இப்படி சொல்கிறீர்களே, ரவி!

    நிறைவுப் பதிவில் விடை இன்னும் தெளிவாக இருக்கும்!!

    கண்டுபிட்த்து விடுவீர்கள்!

    இது ஒரு நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட பதிவென்றே நம்புகிறேன்.

    இதில் வரும் சில கதைகள் எல்லாம் இக்காலகட்டத்தில் நடந்தவையாக அறிகிறேன்.

    அம்மன் இன்றும் அருள் பாலிப்பதற்கு இது ஒரு சிறப்பான சான்றாகத் திகழ்கிறது.

    நிறைவுப் பதிவும் போட்டாகி விட்டது!

    உதவிக்கு மிக்க நன்றி!

    ReplyDelete