Monday, July 16, 2007

லலிதா நவரத்தின மாலை 1

நான் இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாளுக்கு ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை எழுதலாம் என்றிருக்கிறேன். இந்த பாட்டு அம்மனை 9 நவரத்தினங்களாக வர்னித்து, பிறகு இந்த பாடலின் பயனையும் குறிக்கிறது. இந்த பாட்டை மூன்று மூன்றாக பிரித்து எழுதலாம் என்றிருக்கிறேன். இந்த பாட்டை தினமும் வீட்டில் பாடினால் அவ்வளவு நல்லது. அதுவும் அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் பாடினால் மிகவும் நல்லது. இப்பாடலுக்கு விளக்கம் அளித்த திரு குமரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த பாடலை சுசீலா அழகாக பாடியிக்கிறார்கள். இப்பாடலே கேட்க இங்கே சொடுக்கவும்.

ஞான கணேசா சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரோ சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே

ஐந்து அறங்களையும் நன்கு புரியும் நலம் பூக்கும் சிரிப்பினையுடைய புவனேஸ்வரியின் மேல் இயற்றப்படும் இந்த நவரத்தின மாலை நூல் நன்கு அமைய கணநாயகனான யானை காக்குமே.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. வைரம்

கற்றும் தெளியார் காடேகதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கற்க வேண்டிய நூற்கள் பலவும் கசடறக் கற்றப் பின்னும் அப்படிக் கற்றவர் தெளிவு பெறவில்லையாம். உலக இன்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று அதுவே கதியாய் இருந்து கண் மூடி நீண்ட நாட்கள் பெருந்தவம் செய்து தவவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லையாம். அவர்கள் நிலையே அப்படி இருக்க மிகத் தாழ்ந்த பிழைகள் பலவும் புரியும் ஏதாவது பேசவும் முடியுமோ? வயிரத்தால் செய்த படைவாளினை மிக வலிமை மிக்க பகைவர்களுக்கு எமனாகப் பற்றி எடுத்தவளே. அடியவர்களுக்கு என்றும் வற்றாத சுனையைப் போல் அருள் புரிபவளே. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

2. நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மூலாதாரமெனும் சக்கரத்தில் ஒளிரும் குண்டலினி எனும் தீயே சரணம் சரணம். முடிவும் முதலும் ஆனவளே; முடிவும் முதலும் அற்றவளே சரணம் சரணம். அழகிய கிளியே சரணம் சரணம். என்றும் குறையாத ஒளிக்கூட்டமே சரணம். உன்னுடைய நீலத் திருமேனியையே தியானித்து மற்ற நினைவுகளே இன்றி அடியேன் நின்றேன். பாலா திரிபுரசுந்தரி எனும் வாலைக்குமரியே என் முன் வருவாய் வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

3. முத்து

முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

முப்பெரும் தேவர்களும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களும் குறைவறச் செய்யும் வண்ணம் அவர்களுக்கு அருளும் முதல்வியே சரணம். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் விதையானவளே; அந்த விதையிலிருந்து விளைந்த எல்லாமும் எல்லாரும் ஆனவளே; சரணம் சரணம். வேதங்களின் முடிவான வேதாந்தமாம் உபநிடதங்களில் நிலைத்து வாழ்பவளே. உன்னிடம் தஞ்சம் என்று அடைந்த நான் உன் மகன்; நீ என் தாய். என்றும் அழியாத வரத்தை எனக்கருளவே வருவாய். மத்தில் அகப்பட்ட தயிரைப் போல் நான் அங்கும் இங்குமாக அலையும் வாழ்வை அடையாமல் என்றும் அழியாத வாழ்வை அருள்வாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

தத்தேறிய நான் - உன்னிடம் தத்தாக வந்த நான்; தஞ்சமாக வந்த நான்.

(தொடரும்)

11 comments:

  1. அன்புத்தோழி. இந்தப் பாடல் மிக எளிமையான பாடல். முக்கால் வாசி எளிதாகப் புரிகிறது. சில இடங்களில் தான் புரியவில்லை. தத்தேறிய நான் என்ற இடத்திலும் மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன் என்ற இடத்திலும் பொருள் புரியவில்லை.

    ReplyDelete
  2. ஐந்தறனாற்ற [ஐந்தரனாற்ற]
    [ஐந்து அறன்களையும் ஆற்றுகின்ற நலங்களை]
    பூக்கும் நகையாள் [நகையால்]

    நினைவற்றெளியேன் [நினைவெற்றொளியேன்]

    துதிக்கினை [தத்திக்கினை]

    'மற்று ஏறு துதிக்கினை' என்பது சந்தத்திற்காக, 'மத்தேறு துதிக்கினை' என வந்தது.
    'மற்ற எவரைத் துதித்தாலும் எனக்கு வாழ்வு இல்லை' எனும் பொருளில்.

    ReplyDelete
  3. தத் ஏறிய நான்= நான் என்னும் அகம் ஏறிய நான்

    ReplyDelete
  4. ஆடி மாதம் அருமையான தொடக்கம், அன்புத்தோழீ!

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே என்று ஒவ்வொரு நவரத்தினத்திலும், ரத்தினம் ஜொலிக்க வில்லை!
    அவளே ஜொலிக்கிறாள்!

    //தத்து ஏறிய//
    SK விளக்கமும் இனிமை தான்!
    தத்து = அலை பாயும், தாவும் மனோ நிலை!
    தத்துறுவதை ஒழி நீ என்று கம்பர் பாடுவார், தயரதன் மனநிலையை!

    தத்து பித்துன்னு பேசாதே என்று சொல்கிறோமே பேச்சு வழக்கில்! அது போல...

    //மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்//

    அன்புத்தோழிக்கு எல்லோரும் வெயிட்டிங்!

    ReplyDelete
  5. //மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்//

    எனக்கு தெரிந்த வரையில், உன்னையல்லால் வேறு தெய்வத்தை நான் வணங்க மாட்டேன் என்றும், அப்படி வணங்கினால் எனக்கு வாழ்வேது என்றும் பொருள் தருவதாக நினைக்கிறேன். தவறாக இருந்தால் அனைவரும் மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. தவறான சொற்களை மாற்றிவிட்டேன். எடுத்து கூறியதற்கு நன்றி திரு வி எஸ் கே அய்யா.

    ReplyDelete
  7. இன்று காலையில் எழும் போது அரைகுறைத் தூக்கத்தில் தோன்றிய பொருள்: மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்: மத்தில் அகப்பட்ட ததிக்கு (தயிருக்கு) இணையான வாழ்வை அடையேன்; இங்கும் அங்கும் அலையும் வாழ்வு அடையேன்; மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு என்ற படியான வாழ்வை அடையேன். சரியென்று தோன்றுகிறதா நண்பர்களே?!

    அன்புத்தோழி. லலிதா நவரத்தின மாலைப் பாடல்களுக்கு அந்தப் பாடல்களின் கீழேயே பொருளுரையையும் சேர்த்து எழுதலாம் என்றிருக்கிறேன். இடுகைகளில் பொருளையும் சேர்த்துவிட உங்கள் அனுமதி வேண்டும்.

    ReplyDelete
  8. இந்தப்பாடலை சிறுவயதில் அம்மாவோடு சேர்ந்து கொலுமுன்னால் பாடிமகிழ்ந்திருக்கிறேன்...மிக பிடித்தமான பாடல் கூட. நன்றி..அன்புத்தோழி.

    ReplyDelete
  9. இந்த பொருள் கூட பொருத்தமாகத் தான் இருக்கிறது. எனக்கு அவ்வளவாக பொருள் கூற தெரியாதததால், நான் பொருள் சேர்க்கவில்லை. இந்த நல்ல செயலை நீங்கள் செய்வதற்கு என் அனுமதி எதற்கு. நீங்கள் தாராளமாக பொருள் எழுதலாம், அதில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஆலோசனைக்கும், அர்த்தத்திற்கும் என் நன்றிகள் திரு குமரன் அவர்களே.

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி. இந்த ஆடி மாதம் முழுவதும் பாடினால் மிகவும் விசேஷம். வீட்டிற்கும் நல்லது. அதனால் கண்டிப்பபாக இப்பாடலை பாடுங்கள் முத்துலெட்சுமி.

    ReplyDelete
  11. அன்புத்தோழி & நண்பர்களே. இந்த மூன்று பாடல்களுக்கும் பொருளினை எழுதி இடுகையில் சேர்த்திருக்கிறேன்.

    ReplyDelete