"மாரியம்மன் தாலாட்டு" -- 21 [551-589]
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்
"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 551- 589]
[இத்தனை வாத்தியங்கள் இசைத்தும் அம்மன் வரவில்லை!
உருகி அழைக்கிறார்!
அம்மனை அல்ல!
அவளை வரவழைக்கக்கூடிய பரிவார தேவதைகளை! ]
பார்த்துக் குளிருமம்மா பாங்கான உன்மனது
கண்டு குளிருமம்மா கல்லான உன்மனது
எப்படி யாகிலுந்தான் ஏழைகளுமீ டேற
கண்பாரும் பாருமம்மா காரண சவுந்தரியே
இந்திரனுக் கொப்பா யிலங்குமக மாரியரே
கும்பத் தழகியம்மா கொலுமுகத்து ராஜகன்னி
சகலகுற்றம் சகலபிழை தாயாரே நீ பொறுப்பாய்
வணங்குகிற மக்களுக்கு வாழ்வு மிக அளிப்பாய்
ஓங்கார ரூபியென்று உன்னையே தோத்தரிக்க
படவேட்டில் வீற்றிருக்கும் பரஞ்சோதி தாயாரே [560]
ஆரறிவா ருன்மகிமை ஆணிமுத்து தாயாரே
அண்ட புவனமெல்லாம் அம்மா வுனைத் தொழுவார்
தேசங்க ளெங்கும் தேவியைத் தோத்தரிப்பார்
எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தசக்தி
எங்கும் நிறைந்தவளே எல்லார்க்குந் தாயாரே
அஞ்சலென்ற அஸ்தமொடு அடியார் தமைக்காக்க
வேப்பிலை யுங்கையில் விபூதியெங்குந் தூளிதமும்
கருணாகடாக்ஷம்வைத்து காக்கு மகமாயிவுந்தன்
சரணார விந்தமதைத் தந்தருளு மாரிமுத்தே
உன்பேர் நினைத்தால் பில்லிபிசாசு பறந்தோடுமம்மா [570]
சூனியமும் வைப்பும் சுழன்றலைந் தோடிவிடும்
பாதாள வஞ்சனமும் பறந்துவிடும் உன்பேர்நினைத்தால்
சத்தகன்னி மாதாவே சங்கரியே மனோன்மணியே
கரகத்தில் வீற்றிருக்கும் கன்னனூர் மாரிமுத்தே
சூலங் கபாலமுடன் துய்ய டமருகமும்
ஓங்கார ரூபமம்மா ஒருவ ரறிவாரோ
மகிமை யறிவாரோ மானிடர்கள் யாவருந்தான்
அடியார் தமைக்காக்கும் மந்திர நிரந்தரியே
அடியார்கள் செய்தபிழை ஆச்சியரே நீ பொறுப்பாய்
கோயி லடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி [580]
சன்னதி பிள்ளையைத்தான் தற்காரும் பெற்றவளே
உன்னையல்லால் வேறுதுணை ஒருவரையுங் காணேனம்மா
வருந்துவார் பங்கில் வளமாய்க் குடியிருப்பாய்
பாவாடைக் காரியம்மா பராபரியே அங்குகண்ணே
உண்ணுகின்ற தேவதைகள் உடுத்துகின்ற தேவதைகள்
கட்டுப்பட்ட தேவதைகள் கார்க்கின்ற தேவதைகள்
இந்த மனையிடத்தி லிருந்துண்ணும் தேவதைகள்
சாம்பிராணி தூபத்திற் குட்பட்ட தேவதைகள்
அனைவோரும் வந்திருந்து அடியாரைக் காக்கவேணும் [589]
[காப்பதற்கு அம்மன் இதோ வருகிறாள்!]
ஆரறிவார் உன்மகிமை ஆணிமுத்து மாரியம்மா
ReplyDeleteஅறிந்தோர் உளமுருகி அகிலத்தை மறந்திடுவார்
மருத்து்வம் படித்தவரும் மனதைத் தந்திடுவார்
மறுக்காமல் வந்திடுக மக்கள்நலம்
காப்பதற்கு!
எப் பையன் கூப்பிட்டாலும்
ReplyDeleteஇங்கே நீ வந்திடுவாய்-இப்போது
சுப்பையன் கூப்பிடுகிறார்
வாராமல் இருப்பாயோ!
படிப்படியாக ஏறி இப்போது அன்னை வருகிறாள்!
ReplyDeleteபார்த்து மகிழுங்கள்!
எப்பையன் கூப்பிட்டாலும்
ReplyDeleteஇங்கே நீ வந்திடுவாய்-இப்போது
சுப்பையன் கூப்பிடுகிறார்
வாராமல் இருப்பாயோ! - என்று
அன்பு மிகுதியாயால்
அடியவன்சிறியேனை உயர்த்தி
மருத்துவர் அய்யா
மனமகிழ்ந்து எழுதிவிட்டார்
அவரினும் உயர்ந்தபக்தர் - உன்
அடியார்களில் எவருளர்?
அவரழைப்பிற்கு நீவந்தால்போதும்
அதுதான் உன்மீது
அவர்கொண்ட பக்திக்குப்பெருமை!
அம்மாவுன் சக்திக்கும்பெருமை!
அறிகதேவி! வருகஉடனே!
தருகதேவி! உன்மனதிலோரிடம்!
ந்ல்லவரை அவரறிவார்
ந்லம்பெறுவோம் நாங்கள்!