Tuesday, April 3, 2007

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 3

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 3

பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது
பாடகம் தண்டை கொலுஸும்

பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட
பாதச் சிலம்பினொளியும்

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோஹன மாலை அழகும்

முழுவதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்
முடிந்திட்ட தாலி அழகும்

சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும்
செங்கையில் பொன் கங்கணமும்

ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்ற
சிறுகாது கொப்பின் அழகும்

அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனால் சொல்ல திறமோ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே! [2]

அம்மனின் அழகை வர்ணிக்கிறார் இங்கு!
இதற்கு விளக்கமே தேவையில்லை!

7 comments:

  1. வி.எஸ்கே ஐயா,

    தினமும் ஒரு பாடலா ?

    இதுவும் என் அப்பா பரவசத்துடன் பாடும் பாடல்... எனக்கும் நன்கு தெரிந்த பாடல்... அம்மன் விருத்தம் என்ற தொகுப்பில் உள்ள பாடல்கள் இவை உங்களுக்கும் தெரிந்திருப்பது வியப்பளிக்கிறது.

    அப்பாவை நினைவுபடுத்தும் உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. பாதாதி கேச வர்ணனை - அடி முடி அழகு! அருமையாக இருக்கு SK ஐயா!

    //பாதச் சிலம்பினொளியும்//
    ஒலி என்னாது ஒளி என்னும்படிக்கு!

    இங்கே மற்ற அங்க அணிகள் எல்லாம் பச்சை, முத்து, ரத்தினம், வைடூர்யம், புட்பராகம் என்று மின்ன, திருப்பாதம் மட்டும் ஒலி தானா? அதனால் தான் சிலம்பின் "ஒளி" என்றாரோ!

    //ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்ற
    சிறுகாது கொப்பின் அழகும்//

    இந்த இடம் - சூப்பர் கவிதை!
    ஜெகமெலாம் விலையாய் பெற்ற முகம்.
    அந்த முகமெலாம் டால் அடிக்கும் காதணி

    ReplyDelete
  3. உங்களுக்குத் தெரிந்த ஒன்று எனக்கும் தெரிந்திருப்பது....

    முருகனருள் முன்னிற்கும்.....

    கோவியாரே!

    :))

    ReplyDelete
  4. அடடா!
    ரவி வந்து இதை சிறப்பிப்பது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது!

    நவரத்தினமும் தன்னுள் வைத்து தன்னால் இவ்வுலகும் ஒளிரச் செய்யும் அம்மையை இப்படி வர்ணித்துப் பாட ஒரு தவம் செய்திருக்க வேண்டும் ஐயா!

    உங்கள் வர்ணனையைப் படிக்கையில், கண்ணில் நீர் துளித்ததென்னவோ நிஜம்!

    ReplyDelete
  5. அருந்தவத்தோர் அனைவரும்
    அருந்தவம் இயற்றி
    அருமருந்தாய் இவ்வுலகில்
    அருமையாய் வந்த முகம்!

    அவளது சிறுகாதின் கொப்பு அசைகின்ற
    அழகினைப் பார்த்ததும்
    அப்படியே திகைத்து நிற்கிறார்
    அடியேனால் சொல்லத்திறமோவென!

    நன்றி ரவி!

    ReplyDelete
  6. நிதானமாகவே படிக்கிறேன்.
    அனுபவிக்க மிகவும் ஆசையாக இருப்பதால்.

    அம்மாவின் பாடல்கள் அப்படியே நேரே பார்ப்பது போல இருக்கிறது.

    ReplyDelete
  7. அம்மையின் அழகை நன்கு வருணித்திருக்கிறார்கள் இந்தப் பாடலில் எஸ்.கே.

    ReplyDelete