Monday, April 9, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" [9]

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [9]

முன்னையோர் ஜென்மாந்திரம் என்னென்ன பாவங்கள்
மூடன் நான் செய்தனம்மா

மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி
மோசங்கள் பண்ணினேனோ

என்னமோ தெரியாது இக்க்ஷணம்தனிலே
இக்கட்டு வந்ததம்மா

ஏழை நான் செய்த தாய் பிழைத்து அருள் தந்து
என் கவலை தீருமம்மா

சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணம் ஆகுதம்மா

சிந்தனைகள் என் மீது வைத்து நீ நல்பாக்கியம் அருள்
சிவசக்தி காமாக்ஷி நீ

அன்ன வாஹனமேறி ஆனந்தமாக அடியேன்
என் முன் வந்து நிற்பாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே [9]


[சண்டை போட்டுக் களைத்துவிட்டான் பக்தன்! வெட்கமாக இருக்கிறது தெருவில் புரண்டு சண்டை போட்டதற்கு! 'எல்லாம் என் பாவம்தான்! ஆனாலும், உனக்கு வெட்கமாயில்லை?' எனத் தாயைப் பார்த்துக் கேட்கிறான்! 'சரி, சரி! நடந்தவை நடந்தவையாகாவே இருக்கட்டும்1 நீ உன் அன்ன வாஹனத்தில் ஏறி சீக்கிரமாக வா!' எனக் கட்டளை வேறு! தாயிடம் அல்லாமல் வேறு எங்கு இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்ள முடியும்!!]

"ஜெய ஜெய காமாக்ஷி!"

3 comments:

  1. //அன்ன வாஹனமேறி//

    பாலும் நீரும் கலப்படமாய் இருந்தாலும் மொத்தமும் தள்ளி விடாது, நீரை மட்டும் தள்ளிப் பாலை மட்டும் கொள்ளும் அன்னம்.

    அது போல், அடியேன் பாவங்களை மட்டும் தள்ளி, அன்பை மட்டும் கொள்பவள் அன்னை அல்லவா!
    அன்னை=அன்னம்

    அதான் போலும் சிம்ம வாகனம் சொல்லாது, அன்ன வாகனம் ஏறி வரச் சொல்கிறார். அருமையான பாடல் SK ஐயா!

    ReplyDelete
  2. பின்னே?

    எவ்வளவு திட்டி இருக்கிறார் இவர் அன்னையை!

    இதற்கப்புறமும் சிம்ம வாஹனத்தில் வரச் சொல்லுமளவிற்கு அவர் என்ன பைத்தியமா?

    அன்னையவள் விட்டாலும், சிம்மம் விடுமா?

    அதனால்தான் அன்னத்தில் வரச் சொல்லுகிறார்.

    அப்படியே, கத்திக் கத்தி பசி[அன்னம்] எடுத்து விட்டது என்பதை நினைவும்படுத்தி!

    உங்களது சிறப்பு விளக்கங்கள் மிகவும் சுவை, ரவி!

    ReplyDelete
  3. என் வேண்டுகோளுக்கு தாங்கள் செவி சாய்த்ததிற்கு நன்றி். இனி மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் நலமாக இருக்கும். என் இணையத்தின் விலாசம் anbuthozhi.blog@gmail.com.

    அன்புத்தோழி

    ReplyDelete