Thursday, April 5, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 5

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் 5

பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்தும் நான்
பேரான ஸ்தலமும் அறியேன்


பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் நான்
போற்றிக் கொண்டாடி அறியேன்


வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி
வாயினாற் பாடி அறியேன்


மாதா பிதாவினது பாதத்தை
வணங்கி ஒருநாளுமே அறியேன்


சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச்
சரணங்கள் செய்தும் அறியேன்


சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்டன் அறியேன்


ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன்
ஆச்சி நீ கண்டதுண்டோ?


அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [5]

[வாமி= சிவனின் ஒரு அம்சமாய் அவனது இடப்பாகத்தில் இருப்பவள்; சிவகாமி= சிவனுக்கு மிகவும் பிரியமானவள்; சதுரர்= நல்வழியில் நடப்பவர்; விந்தம்= தாமரை, விந்திய மலை; சாஷ்டாங்க தெண்டன்= உடலின் எல்லாப் பகுதிகளும் பூமியில் படுமாறு வணங்குதல்]

ஜெய ஜெய காமாக்ஷி!

8 comments:

  1. அழகான, சுவை நிரம்பிய பாடல்களை படிக்க தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. ஜெய ஜெய காமாக்ஷி!

    ReplyDelete
  3. உங்களுக்கும் பிடித்திருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது, பத்மா!!

    ReplyDelete
  4. //ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன்
    ஆச்சி நீ கண்டதுண்டோ?//

    அச்சோ, அப்படியே பெற்ற தாயிடம் பேசுவது போலவே உள்ளதே!

    ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி விட்டு, கடைசியில் ஒன்றும் மிஞ்சாது, பெத்த தாயிடம் ஓடி வந்து, "அம்மா பசிக்குதே! இந்தப் பாவிக்கும் கொஞ்சம் சோறு போடுவியா?" என்று கேட்பது போல் இருக்கு!

    ஆச்சி என்றும் பேச்சி என்றும் விளிக்கும் போது அப்படியே மனம் குழைகிறது, SK ஐயா!

    ReplyDelete
  5. இன்னும் இருக்கிறது திரு. ரவி.

    கல்லையும் கரைய வைக்கும் பதிகங்கள் இவை.

    அதனால்தான் துணிந்து பதிவைப் பறிமுதல் செய்தேன்!

    ReplyDelete
  6. ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் சிறப்பாக உள்ளது
    எஸ்.கே சார்! இன்றுதான் இந்த 5ம் பகுதியை படிக்கும் பேறு பெற்றேன்
    முன் பதிவுகளியும் படித்துவிடுகிறேன்

    ந்ன்றி! உங்கள் இறைப்பணி சிறக்க வாழத்துக்கள்!
    -------------------------------------------------------------------------------

    என்னகவி பாடினால் உன்மனது மாறுமோ
    என் மீது கருணை வருமோ

    எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்
    எளிதாக நிறைவேறுமோ

    சொன்னபடி கேளாமல் துயர்செய்யும் என்மனம்
    தூய்மைபெற வழியுமுண்டோ

    சோதித்து வாட்டுவது போதுமென் உன்னிடம்
    சொல்லுபவர் யாருமிலையே

    சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்
    செய்துவரும் மலரல்லவோ

    செப்புவது பிழைபடினும் செவி இன்பம் தரவல்ல
    சேய்மழலை மொழியல்லவோ

    இன்னபடி நான்பெற்ற பிள்ளை துயர் எய்துகையில்
    இளகாத தாயுமுண்டோ

    இறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேச்வரி
    இமயமலை வாழும் உமையே!

    - அருட்கவி கு.செ. ராமசாமி
    முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்
    மன்னர் கல்லூரி சிவ்கெங்கை

    (இதுபோன்று 8 x 30 வரிகள் கொண்ட உமையவள் பாமாலை
    என்ற் அவருடைய பாடல நினைவிற்கு வந்தது எஸ்.கே சார்
    அதனால்தான் அதையும் உங்கள் பார்வைக்குக் கொடுத்தேன்
    ஒன்றைத்தான் கொடுத்துள்ளேன். மீதி உள்ளவற்றை
    நீங்கள் படித்து மகிழப் பிறகு அனுப்பிவைக்கிறேன்)

    ReplyDelete
  7. கோவியார் கூட னாகை மாரியம்மன்மீது இது போன்ற ஒரு பாடல அவார் தந்தையார் பாடிப் பரவசப்படுத்தியதாகச் சொல்லியிருந்தார்.

    இந்த காமாக்ஷி அம்மன் விருத்தம் மிகவும் பழைமையானது.

    இதை ஒட்டி பல அம்மன்களைப் பற்றி இருப்பதாக அறிகிறேன்.

    மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  8. அம்மாடி. முறையாகச் செய்ய வேண்டியவை இவ்வளவு இருக்கிறதா? ஒன்றிரண்டு தானே, அதுவும் அரை மனத்துடன் தான் செய்திருக்கிறேன். ஆச்சி நானும் மூடன் தான். என்னையும் கண்டு கொள் அம்மா.

    ReplyDelete