Thursday, April 5, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 4

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 4


கெதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்
குறைகளைச் சொல்லி நின்றும்

கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ
குழப்பமாய் இருப்பதேனோ

சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்
சதமாக நம்பினேனே

சற்றாகிலும் மனது வைத்து எனை ரக்ஷிக்க
சாதகம் உனக்கில்லையோ

மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய
மதகஜனை ஈன்ற தாயே

மாயனுடை தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற உமையே

அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்
அன்பு வைத்து எனை ஆள்வாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [4]


[மதகஜன்= ஆனைமுகன்; விநாயகர்; மாயன்= திருமால்; பரமன்= சிவன்]

4 comments:

  1. ஜெய ஜெய காமாக்ஷி!

    ReplyDelete
  2. தாயிடம் நன்றாக உரிமை எடுத்துக் கொள்கிறார் பாடலாசிரியர்.

    ReplyDelete
  3. //சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்
    சதமாக நம்பினேனே//

    மேலோட்டமாகப் பார்க்கையில், வறுமையைத் தீர்க்காத அம்பாளை, உரிமையுடன் வைவது போல் இருக்கு!
    அந்த உரிமை கூட ஒரு சுகம் தான்!

    ஆனால் இப்படியும் பாருங்கள்.
    சதி=பார்வதி
    காரி=கருப்பானவள்
    இப்படிக் கருத்துப் போய் இருக்கும் பார்வதீ, உன்னைப் போய் நம்பினேனே! பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ என்று அதிகாரமாய் கேட்கிறார் கவிஞர்.

    அம்பாளைக் கோபிப்பதில் கூட ஒரு தமிழ்ச்சுவை ஒளிந்து தான் உள்ளது!

    ReplyDelete
  4. நான் முன்பே சொல்லியதுபோல, இந்தப் பாடல்களில் மிளிரும் உரிமையை நான் வேறெங்கும் அதிகம் கண்டதில்லை, குமரன், ரவி!!

    அதுவே என்னை ஈர்த்தது!

    ஒரு சுந்தரர் பாடல் ஈசன் மேல் இது போல வரும்.

    வாய்ப்பிருந்தால் பின்னர் இடுகிறேன் அதை!

    நன்றி.

    சதிகாரிக்கு நீங்கள் சொன்ன விளக்கம் அருமை.

    இன்னும் சற்று ஆழமாகச் சிந்தித்தால்,
    "நீயோ சதிகாரிதான்.
    உன் உடலில் பாதியாய் விளங்கும் ஈசனை மறந்து, உன்னை மட்டுமே சதமாக நம்பினேனே, என்னைச் சொல்லவேண்டும்,"
    என்று கோபிப்பதாகக் கூட எண்ணலாம்.

    இதைக் கேட்டதும், கருணையே உருவான ஈசன் இரங்கி வர மாட்டானா என்ன?

    வலது காது அவனது தானே!
    :))

    ReplyDelete