Wednesday, April 25, 2007

கருமாரி அம்மன் பாடல்3


(தொடர்ச்சி...)

அன்புக்கே நானடிமை ஆக வேண்டும்,
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்,
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்,
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்,
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்,
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்,
என் பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்,
என்னோடு நீயென்றும் வாழ வேண்டும் (கற்பூர நாயகியே)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை,
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை,
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை,
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை,
செம்பவள வாயழகி உன்யெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை,
அம்பளவு விழியாளே உன்னை என்றும்!
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை (கற்பூர நாயகியே)

காற்றாகி கனலாகி கடலாகினாய்,
கருவாகி உயிராகி உடலாகினாய்,
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்,
நிலமாகி பயிராகி உணவாகினாய்,
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்,
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்,
போற்றாத நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை. (கற்பூர நாயகியே)


முற்றும்)

7 comments:

  1. ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டு, அந்த 40 நாட்களும் பூஜையில் தவறாது பாடும் பாடல் இது.

    அதுவும், சிறப்பு பூஜை நாட்களில் அனைவராலும் விரும்பிக் கேட்டு என்னால் பாடப்படும் பாடல் இது.

    இந்த 'அன்புக்கே'எனத் தொடங்கி வேண்டும் வேண்டும் எனப் பாடும் போது கண்களில் நீர் வராமல் இருக்காது!

    மிக நன்றி, அன்ன்புத்தோழி!

    ReplyDelete
  2. இந்த பாடலின் வரிகள் அப்படியே அம்மனிடம் நேராக நின்று பேசுவது போல தோன்றும். அதனால் இந்த பாட்டைப் பாடும் போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கும். நன்றி திரு வி எஸ் கே அய்யா

    ReplyDelete
  3. //தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்//

    துன்பத்திலும் இன்பத்திலும் இப்பாட்டைப் பாடும் போது கூட கண் கலங்கும்!

    //தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
    போற்றாத நாளில்லை தாயே உன்னை//

    எல்லாம் நீ தான் என்ற பரிபூர்ண சரணாகதி அல்லவா தெரிகிறது!

    முத்தான பாடலை மூன்றாய் இட்ட நண்பர் அன்புத் தோழிக்கு நன்றி!

    ReplyDelete
  4. நல்ல பாட்டு. நவராத்திரியிலும் சிவராத்திரியிலும் எங்கள் பகுதியில் உள்ள கோவிலில் பாடப்படும் பாடல்.

    நன்றி.

    ReplyDelete
  5. கல் மனத்தையும் உருக்கி கனிய வைக்கும் பாடல். ஆடி மாத பாடல் இது.மாம்பலம் முப்பாத்தம்ன் கோவிலில் நான் அடிக்கடி சொல்லும் பாடல் இது. தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  6. காற்றாகி கனலாகி கடலாகினாய் என்று தொடங்கும் போது ஐம்புலன்களும் ஒன்றி நிற்பதைப் பலமுறைக் கவனித்திருக்கிறேன். நல்ல பாடல். நல்ல பாடல்.

    ReplyDelete