Wednesday, April 25, 2007

கருமாரி அம்மன் பாடல்3


(தொடர்ச்சி...)

அன்புக்கே நானடிமை ஆக வேண்டும்,
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்,
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்,
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்,
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்,
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்,
என் பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்,
என்னோடு நீயென்றும் வாழ வேண்டும் (கற்பூர நாயகியே)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை,
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை,
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை,
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை,
செம்பவள வாயழகி உன்யெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை,
அம்பளவு விழியாளே உன்னை என்றும்!
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை (கற்பூர நாயகியே)

காற்றாகி கனலாகி கடலாகினாய்,
கருவாகி உயிராகி உடலாகினாய்,
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்,
நிலமாகி பயிராகி உணவாகினாய்,
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்,
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்,
போற்றாத நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை. (கற்பூர நாயகியே)


முற்றும்)

Tuesday, April 24, 2007

கருமாரி அம்மன் பாடல்2


கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்,
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்,
பண்ணமைக்கும் நா உன்னயே பாட வேண்டும்,
பக்தியோடு கை உனையே கூட வேண்டும்,
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்,
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்,
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா,
மக்களுடைய குறைகளையும் தீருமம்மா ( கற்பூர நாயகியே)

நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும்,
நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்,
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்,
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்,
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்,
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்,
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லாமா?
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா? ( கற்பூர நாயகியே)

அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டோ?
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமையின்றி காவலுண்டோ?
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ?
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ?
என்றைக்கும் நான் உந்தன் பிள்ளையன்றோ? ( கற்பூர நாயகியே)

(தொடரும்)

Monday, April 23, 2007

கருமாரி அம்மன் பாடல்1


எனக்கு பிடித்த இந்த கருமாரி அம்மன் பாடலிலுள்ள ஒன்பது பத்தியில் மூன்று மூன்றாக மூன்று நாட்கள் எழுதவிருக்கிறேன்.

நன்றி


கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,
விற்கோல வேதவல்லி விசாலாட்சி,
விழிகோல மாமதுரை மீனாட்சி,
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே)

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி,
நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி,
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி,
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி,
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி,
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி,
உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி (கற்பூர நாயகியே)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே ! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற,
அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா,
கண்ணீரை துடைத்து விட ஓடிவாம்மா,
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா,
சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு,
சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு (கற்பூர நாயகியே)

Sunday, April 22, 2007

ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!

இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?

தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்!
அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார் :-)

கல்யாணியைப் பற்றி கல்யாணி ராகத்தில்.
இளையராஜாவுடன், சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி உடன் பாடுகிறார்கள்!

சரி, இந்தப் பாடலை ஏன் நாம், இன்று கேட்க வேண்டும்?
இன்று சங்கர ஜெயந்தி!

இந்து மதம் தழைக்க வந்த இரு பெரும் பேராசிரியர்கள் - ஜகத் குருக்கள் - ஆச்சாரியர்கள் ஸ்ரீ ராமானுசர், ஆதி சங்கரர்
- இருவரின் அவதார நாளும் இன்று தான்! சித்திரைத் திருவாதிரை நன்னாள்! (Apr 22, 2007)

இப்படி, பிறந்த நாளே ஒன்றாகி, சைவமும் வைணவமும் ஒன்றாகத் தழைப்பது எவ்வளவு இனிய காட்சி!


ஆதிசங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி தோத்திரத்தின் முதல் சுலோகத்துடன் பாடல் துவங்குகிறது!

(சிவ, சக்த்யா யுக்தெள,
யதி பவதி, சக்த ப்ரபவிதும்,
ந சேத் ஏவம், தேவோ ந கலு
குசலஹ ஸ்பந்திதும் அபி!

அதஸ் த்வாம், ஆராத்யாம்,
ஹரி, ஹர, விரிஞ்ச, ஆதி பிர் அபி,
பிரணந்தும், ஸ்தோதும் வா,
கதம் அக்ருத புண்யப் ப்ரபவதீ?)

ஜனனி ஜனனி - ஜகம் நீ அகம் நீ
ஜகத்-காரணி நீ பரி-பூரணி நீ


ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே


ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி  

ஜனனி  ஜனனி ...

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே


அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி 

ஜனனி ஜனனி...

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்(து) ஏத்துவதும் மணி நேத்திரங்கள்


சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..

ஒவ்வொரு கச்சேரியிலும், ராஜா
ஜனனி ஜனனி என்று பாடித் தான் துவக்குகிறார்!
இதோ, அவர் கச்சேரி ஒன்றிலிருந்து!
அப்பாவும், மகனும் சேர்ந்து பாடுகிறார்கள்.
அன்னை மீனாட்சியின் சித்திரைத் திருவிழா துவங்கி விட்டதல்லவா?
இந்தத் தருணத்தில், ஜகத்குரு ஆதி சங்கரர் அவர்களை நினைந்து வணங்கி, அவர் போற்றிய அன்னையின் பாதம் பணிவோம்!
ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!!

Tuesday, April 17, 2007

மதுரை மீனாட்சி


கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே,
சுந்தரேசர் மகிழும்... மயிலே
கதம்ப...வனக்குயிலே
மாதவர் போற்றும் எழிலே
பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே


கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......மதுரையிலே
மதுரையிலே......மதுரையிலே

வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்
மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)

தேனமர் சோலையாம் கதம்பவனம்
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)


இந்த பாடலை கேட்டு மகிழ இங்கே சொடுக்கவும்


குறிப்பு: இந்த பாடலை பதிய விரும்பிய ஹேமபிரியா விற்கும், அதை பதிய வாயப்பளித்த திரு குமரன் அவர்களுக்கும் நன்றி.

Monday, April 16, 2007

அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக


ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி
பஞ்சுத்திரி போட்டு பசும் நெய்தனை ஊற்றி
குங்குமத்தில் பொட்டிட்டு கோலமஞ்சள் தானமிட்டு
பூமாலை சூட்டி வைத்து பூஜிப்போம் உன்னை திருமகளே

திருவிளக்கை ஏற்றிவைத்தோம் திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக ( திருவிளக்கை )

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம் (அலைமகளே வருக)

மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓர் வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்

சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
சகலவரம் தருவாய் நமஸ்காரம்
பத்ம பீட தேவி நமஸ்காரம்
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்

இந்த பாட்டை கேட்டு மகிழ இங்கேசொடுக்கவும்

Thursday, April 12, 2007

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா




ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா

மங்கள வாரம் சொல்லிட வேண்டும், மங்கள கன்னிகை ஸ்லோகம்;
இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் ( ரக்ஷ ரக்ஷ )

படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி,
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி,
ஜய ஜய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி,
சிவ சிவ சங்கரி சக்திமஹேஸ்வரி,
திருவருள் தருவாள் தேவி
திருவருள் தருவாள் தேவி (ரக்ஷ ரக்ஷ )

கருணையில் கங்கை, கண்ணனின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்,
வல்வினை ஓடும், பலவினை ஓடும் அருள் மழை பொழிபவள் நாளும்,
நீலநிறத்தோடு ஞாலம் அளித்தவள், காளி எனத் திரிசூலம் எடுத்தவள்,
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்,
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள் (ரக்ஷ ரக்ஷ )


இந்தப் பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

Tuesday, April 10, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 12



"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 12

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னிலம்மா

இனியாகிலும் கிருபை வைத்து ரக்ஷியும் இனி
ஜெனனம் எடுத்திடாமல்

முத்தி தர வேணும் என்றுன்னையே தொழுது நான்
முக்காலும் நம்பினேனே

முன்பின்னும் தோணாத மனிதரைப் போலவே நீ
முழித்திருக்காதேயம்மா

வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் யான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்

விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தை
விமலனர் ஏசப்போறார்

அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும்
குறையைத் தீருமம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே.
12

[இதுவரை பாடிய [காப்பு+] பத்து பாடல்களின் சுவையையும் பிழிந்து, கலந்து, ஒரு சாறாக்கித் தருகிறார் இப்பாடலில்! கொஞ்சம் புகழ்ச்சி, திட்டல், ஏளனம், கெஞ்சல், வேண்டல், அப்பாவுக்குத் தெரியாமல் கொடுக்கச் சொல்லும் கள்ளத்தனம், எல்லாம் சேர்ந்து அளிக்கிறார்.
பொறுமையாக இதுவரை காத்திருந்த ஏனைய அனைவர்க்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி!!]

"ஜெய ஜெய காமாக்ஷி!"
[அனுஷாவுக்காகப் பிரார்த்தியுங்கள்]

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 11



"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 11

பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப்
பாங்குடன் ரக்ஷிக்கவும்

பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்த
பாலருக்கு அருள் புரியவும்

சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலியன் அணுகாமலும்

சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று
வாழ்ந்து வரவும்

பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல்
பிரியமாய்க் காத்திடம்மா

பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன
கவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி

"ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த
என் அன்னை ஏகாம்பரி நீயே"

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 11

[அம்மனைப் பார்த்து விட்டார்! அடுக்கடுக்காய் வரங்கள் கேட்க ஆரம்பிக்கிறார்! கூடவே, இதுவரை எந்த இலக்கணமும், சீர்மையும் இல்லாமல் பாடியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறார்.]

"ஜெய ஜெய காமாக்ஷி!"

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 10

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 10

எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தவர்கள்
இன்பமாய் வாழ்ந்திருக்க

யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா

உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதம் சாக்ஷியாக

உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன்
உலகந்தனில் எந்தனுக்குப்

பின்னையென்று நீ சொல்லாமல் வறுமை போக்கடித்து
என்னை ரக்ஷி பூலோகம் மெச்சவே

பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க்
காத்திடம்மா

அன்னையே இன்னமும் அடியேனை ரக்ஷிக்க
அட்டி செய்யாதேயம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 10

[செய்வதெல்லாம் செய்துவிட்டு, சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு, இப்போது மிகவும் நல்ல பிள்ளை போல, "எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா? நான் உன்னோட பிள்ளை இல்லையா? நீதானே மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தாய்! அது போல என்னையும் காப்பாய்! படுத்தாதே!" என மன்றாடுகிறார்!
மீதியை ரவி வந்து சொல்லுவார்!!]

"ஜெய ஜெய காமாக்ஷி!"

Monday, April 9, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" [9]

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [9]

முன்னையோர் ஜென்மாந்திரம் என்னென்ன பாவங்கள்
மூடன் நான் செய்தனம்மா

மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி
மோசங்கள் பண்ணினேனோ

என்னமோ தெரியாது இக்க்ஷணம்தனிலே
இக்கட்டு வந்ததம்மா

ஏழை நான் செய்த தாய் பிழைத்து அருள் தந்து
என் கவலை தீருமம்மா

சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணம் ஆகுதம்மா

சிந்தனைகள் என் மீது வைத்து நீ நல்பாக்கியம் அருள்
சிவசக்தி காமாக்ஷி நீ

அன்ன வாஹனமேறி ஆனந்தமாக அடியேன்
என் முன் வந்து நிற்பாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே [9]


[சண்டை போட்டுக் களைத்துவிட்டான் பக்தன்! வெட்கமாக இருக்கிறது தெருவில் புரண்டு சண்டை போட்டதற்கு! 'எல்லாம் என் பாவம்தான்! ஆனாலும், உனக்கு வெட்கமாயில்லை?' எனத் தாயைப் பார்த்துக் கேட்கிறான்! 'சரி, சரி! நடந்தவை நடந்தவையாகாவே இருக்கட்டும்1 நீ உன் அன்ன வாஹனத்தில் ஏறி சீக்கிரமாக வா!' எனக் கட்டளை வேறு! தாயிடம் அல்லாமல் வேறு எங்கு இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்ள முடியும்!!]

"ஜெய ஜெய காமாக்ஷி!"

Sunday, April 8, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்"-- 8

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 8

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ

பேய்பிள்ளையானாலும் தான் பெற்றபிள்ளையைப்
பிரியமாய் வளர்க்கவில்லையோ

கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாடும் கதறி
நான் அழுத குரலில்

கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும்
காதினில் நுழைந்ததில்லையோ

இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா
இனி விடுவதில்லை சும்மா

இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும்
இது தருமம் இல்லையம்மா

எல்லோரும் உன்னையே சொல்லி ஏசுவார்
இது நீதி அல்லவம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [8]

[என்ன சொல்லியும் அன்னை வருவதாயில்லை. இவருக்கோ துக்கமும், ஆத்திரமும் பொத்துக் கொண்டு வருகிறது.
"என்ன தாய் நீ? என் புலம்பலின் ஒரு சிறு சத்தம் கூடவா உனக்குக் கேட்கவில்லை?இப்போதும் நீ வரவில்லையெனில் இருவரும் தெருவில் புரண்டு சண்டை போடுவதைத் தவிர, வேறு வழியில்லை! அப்போதும் உன்னைத் தான் பழி சொல்லுவார்கள்!"
என வாதிடுகிறார்!]


"ஜெய ஜெய காமாக்ஷி!"

Saturday, April 7, 2007

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [7]

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [7]


மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்த்ரகாரி நீயே

மாயாசொரூபி நீ மகேஷ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ

தாயே மீனாக்ஷி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாக்ஷியும் நீ

தாரணியில் பெயர் பெற்ற
பெரியநாயகியும் நீ

அத்தனிட பாகமதில் பேறு பெற
வளர்ந்தவளும் நீ

ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ

ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [7]


[அதிகமாகத் திட்டிவிட்டதாக எண்ணி இப்போது பிள்ளை கொஞ்சம் 'ஐஸ்' வைக்க ஆரம்பிக்கிறார்! அவள் பெயரையெல்லாம் சொல்லிப் போற்றுகிறார்!]

"ஜெய ஜெய காமாக்ஷி!"

Friday, April 6, 2007

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 6

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [6]

பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான்
பிரியனாய் இருந்தனம்மா

பித்தலாட்டக்காரி நீ என்று அறியாது உன்
புருஷனை மறந்தனம்மா

பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல்
பராமுகம் பார்த்திருந்தால்

பாலன் நான் எப்படி விசனமில்லாமல்
பாங்குடனே இருப்பதம்மா

இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது
இது தருமம் அல்லவம்மா

எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகள் இல்லையோ
இது நீதியல்லவம்மா

அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ
அதை எனக்கு அருள்புரிகுவாய்.

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [5]


[ஆத்திரம், ஆங்காரம், பொறாமை, புலம்பல், சந்தேகம் அத்தனையும் துளிர்க்கிறது இப்போது!]

ஜெய ஜெய காமாக்ஷி!!

Thursday, April 5, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 5

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் 5

பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்தும் நான்
பேரான ஸ்தலமும் அறியேன்


பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் நான்
போற்றிக் கொண்டாடி அறியேன்


வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி
வாயினாற் பாடி அறியேன்


மாதா பிதாவினது பாதத்தை
வணங்கி ஒருநாளுமே அறியேன்


சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச்
சரணங்கள் செய்தும் அறியேன்


சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்டன் அறியேன்


ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன்
ஆச்சி நீ கண்டதுண்டோ?


அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [5]

[வாமி= சிவனின் ஒரு அம்சமாய் அவனது இடப்பாகத்தில் இருப்பவள்; சிவகாமி= சிவனுக்கு மிகவும் பிரியமானவள்; சதுரர்= நல்வழியில் நடப்பவர்; விந்தம்= தாமரை, விந்திய மலை; சாஷ்டாங்க தெண்டன்= உடலின் எல்லாப் பகுதிகளும் பூமியில் படுமாறு வணங்குதல்]

ஜெய ஜெய காமாக்ஷி!

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 4

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 4


கெதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்
குறைகளைச் சொல்லி நின்றும்

கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ
குழப்பமாய் இருப்பதேனோ

சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்
சதமாக நம்பினேனே

சற்றாகிலும் மனது வைத்து எனை ரக்ஷிக்க
சாதகம் உனக்கில்லையோ

மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய
மதகஜனை ஈன்ற தாயே

மாயனுடை தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற உமையே

அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்
அன்பு வைத்து எனை ஆள்வாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [4]


[மதகஜன்= ஆனைமுகன்; விநாயகர்; மாயன்= திருமால்; பரமன்= சிவன்]

Tuesday, April 3, 2007

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 3

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 3

பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது
பாடகம் தண்டை கொலுஸும்

பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட
பாதச் சிலம்பினொளியும்

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோஹன மாலை அழகும்

முழுவதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்
முடிந்திட்ட தாலி அழகும்

சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும்
செங்கையில் பொன் கங்கணமும்

ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்ற
சிறுகாது கொப்பின் அழகும்

அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனால் சொல்ல திறமோ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே! [2]

அம்மனின் அழகை வர்ணிக்கிறார் இங்கு!
இதற்கு விளக்கமே தேவையில்லை!

Monday, April 2, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 2

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் --2

சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
ஜோதியாய் நின்ற உமையே

சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கிவிடுவாய்

சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தைப் மாற்றிவிடுவாய்

ஜெகமெலாம் உன் மாயை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திடாது

சொந்தவுன் மைந்தனாம் எந்தனை ரக்ஷிக்க
சிறிய கடன் உன்னதம்மா

சிவசிவ மஹேஷ்வரி பரமனிட ஈஷ்வரி
சிரோன்மணி மனோன்மணியும் நீ

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
அனாத ரக்ஷகியும் நீ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [2]

{நிரந்தரி= எப்போதும் இருப்பவள்; துரந்தரி= அனைத்தையும் கடந்தவள்; சுக்கிரவாரம்= வெள்ளிகிழமை; சிரோன்மணி= உயர்ந்தவள்; மனோன்மணி= மனதிற்கு உகந்தவள்; அந்தரி= எல்லைகளைக் கடந்தவள், எப்போதும் இருப்பவள்; பரம்பரி= எனதாக இருப்பவள்; அனாத ரக்ஷகி= எளியவரைக் காப்பவள்}

ஜெய ஜெய காமாக்ஷி!!

Sunday, April 1, 2007

"காமாக்ஷி அம்மன் விருத்தம்" -1


இன்று பங்குனி உத்தர நன்நாள்~!

காஞ்சியில் மாமரத்தடியில் அமர்ந்து, மண்ணால் சிவலிங்கம் பிடித்துப் பூசித்த காமாக்ஷி அம்மனை, கச்சி ஏகம்பன் கைப்பிடித்த திருநாள்!

இன்று தொடங்கி அடுத்த 11 நாட்களுக்கு காஞ்சி காமாக்ஷி அம்மன் விருத்தம் எனும் தெள்ளுதமிழ் பாசுரம் தினம் ஒன்றாக வெளியிடப்படும்.

இதற்கு விளக்கமே தேவையிருக்காது![என நம்புகிறேன்!]. தேவைப்படும் போது வரும்!

மற்றவர்கள் மன்னிக்க!
:)

காமாக்ஷி அம்மன் விருத்தம்

கணபதி காப்பு

மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாக்ஷி மிசை
துங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்
புயமருவும் பணி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்
கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு.



[துங்கம்= உயர்ச்சி, பெருமை]; திங்கள்= நிலவு; பணி= பாம்பு; கயமுகன்= ஆனை முகத்தோன்; ஐங்கரன்= துதிக்கையுடன் சேர்ந்து ஐந்து கைகளுடைய பிள்ளையார்]

பதிகம்:

நாளை வரும்!

ஜெய ஜெய காமாக்ஷி!