Monday, March 30, 2020

ஓம் சக்தி




சுப்புத்தாத்தா வின் இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா! மிகவும் அருமை தாத்தா.

தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன னன்ன தனனன
தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன னன்ன தனனன

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி

சித்தமெங்கும் உன்னை வைத்து நித்தம் நித்தம் தொழுதிட
பக்தி உன்னிடத்தில் வைத்து சித்த சுத்தி செய்திட
சத்தியத்தின் தோற்றம் நீயென் புத்தியின் உள் நின்றிட
சக்தி சக்தி சக்தி யென்று சக்தி உன்னைப் பாடுவோம்

முற்பிறப்பில் சேர்த்து வைத்த வல்வினைகள் எத்தனை
இப்பிறப்பிலே அடுக்கும் பாவ புண்யம் எத்தனை
எப்பிறப்பு எடுத்த போதும் உன்னை என்னுள் வைத்திட
சக்தி சக்தி சக்தி என்று சக்தி உன்னைப் பாடுவோம்

பால்மணம் மாறாத பிள்ளை பாலையாக வந்தவள்
கன்னியாகக் குமரியாக குமரி முனையில் நின்றவள்
அன்னையாக அரவணைத்து அன்பு செய்யும் தாயவள்
அண்டமெல்லாம் ஆக்கி வைத்து அரசியாக ஆள்பவள்

அலையும் கடலைப் போல அலையும் உள்ளம் உள்ளே அடங்கவும்
ஐம் புலன் களும் ஒடுங்கி ஆசைத் துன்பம் அழியவும்
அன்னை உன்றன் நினைவு மட்டும் நெஞ்சின் உள்ளே நிறையவும்
அன்னை அன்னை அன்னை என்று அன்னை உன்னை பாடுவோம்

வாழும் போதும் வாடும் போதும் பாட வேண்டும் உன்னையே
துள்ளும் போதும் துவளும் போதும் தேட வேண்டும் உன்னையே
புகழும் போதும் இகழும் போதும் நாட வேண்டும் உன்னையே
அன்னை அன்னை அன்னை என்று சேர வேண்டும் உன்னையே

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி


--கவிநயா


Tuesday, March 24, 2020

உலகத்தைக் காப்பாற்று



உன்னால் ஆகாததும் உண்டோ?
உமையவளே, என்றன் இமையவளே, என்றும்
(உன்னால்)

நிலம் நீர் நெருப்பாகி காற்றும் வெளியுமானாய்
ஐந்து பெரும் பூதங்களாய் எங்கும் விரிந்து நின்றாய்
இயற்கை எனும் பேரில் எங்கும் நிறைந்திருப்பாய்

அன்னையின் வடிவினிலே அரவணைத்துக் காப்பாய்
(உன்னால்)

உலகத்தின் துயர் தீர்ப்பாய் உன்றன் பிள்ளைகளைக் காப்பாய்
குற்றங்களை மறந்திடுவாய்குறைகளெல்லாம் களைவாய்
பெற்றவள் நீயல்லால் பிள்ளைகளுக்கேது கதி?
உற்றவள் நீயன்றோ, உணர்ந்துனை அழைக்கின்றோம்
(உன்னால்)


--கவிநயா

Monday, March 16, 2020

வர வேணும்; தர வேணும்

இந்த கரோனாவிலிருந்து மக்கள் அனைவரையும் காளி தேவி காக்கட்டும். அனைவரும் நலமுடன் இருக்க அம்மாவை வேண்டிக்கிறேன்.



தமிழாலே புகழ் பாடி
தினந்தோறும் உனைத் தேடி
அலைகின்றேன் அம்மா நீ வர வேணுமே, நான்
கடைத்தேற கடைப் பார்வை தர வேணுமே

நாவிலுன் நாமம் வாழ
நீ என்றன் இதயம் ஆள
அம்மா நீ வரமொன்று தர வேணுமே
என்னோடு உடன் என்றும் வர வேணுமே

ஆனைமுகன் ஆறுமுகன் என
அருமையான பிள்ளைகள் பெற்றாய்
நானும் உன் பிள்ளையன்றோ பாராய் அம்மா
சற்றே நீ என்றன் குரலைக் கேளாய் அம்மா

உன்னை எண்ணி வாழுதல் அன்றி
வாழும் வகை அறியேன் அம்மா
என் பாடல் உனக்காகத் தானே அம்மா, நீ
எனக்காக ஒரு வார்த்தை கூறாய் அம்மா

திருவடியின் நிழலைச் சேர
துயரமெல்லாம் தூசாய் ஆக
அம்மா உன் அருள் எனக்குத் தர வேணுமே
அதற்காய் நீ மனம் வைத்து வர வேணுமே


--கவிநயா

Monday, March 9, 2020

கலக்கம் ஏன்?



இன்பமென்ன துன்பமென்ன உலக வாழ்விலே
அன்னையவள் அன்பு உனக்கு இருக்கும் போதிலே?
(இன்பம்)

பக்தியுடன் பணிந்தால் அவள் நிச்சயம் வருவாள்
உள சுத்தியுடன் தொழுதால் அவள் அனைத்தும் தருவாள்
(இன்பம்)

சித்தமெல்லாம் கலங்கும், எனில் நீ கலங்காதே
புத்தியெல்லாம் மயங்கும், எனில் நீ மயங்காதே
தங்க மலர்ப் பாதம் உண்டு, இறுகப் பற்றிக் கொள்
தங்க நிழல் அவள் தருவாள், மனதில் உறுதி கொள்
(இன்பம்)

--கவிநயா

Monday, March 2, 2020

உலகம் உனது


மனதுக்கு இதமான தாயே, என்
குரலுக்கு வருவாயோ நீயே?
(மனதுக்கு)

உலகமெல்லாம் உனது
உன் இல்லம் என் மனது
இதயத்தில் நீ இருந்தால்
இன்பமெல்லாம் எனது
(மனதுக்கு)

வில்லெனும் புருவம் வளைத்திடுவாய்
விழியெனும் அம்பினைத் தொடுத்திடுவாய்
மும்மலங்களையும் அழித்திடுவாய்
மலரடியென் சென்னியில் பதித்திடுவாய்
(மனதுக்கு)



--கவிநயா