உன் நினைவே நெய்யாக
உன் நாமம் திரியாக
முக மதியே சுடராக
விளக்கேற்றினேன், அம்மா
என் மனமாம் கோவிலிலே
ஒளியேற்றினேன்
கதிரவனைக் கண்டாலுன்
கண்ணொளியே தோணுதடி
நிலவொளியின் தண்மையிலுன்
கருணை முகம் காணுதடி
தென்றல் காற்றின் தழுவல் போல
உன்பார்வை என்னைத் தழுவுதடி
அலைகள் பேசும் ரகசியமாய்
மேகக் கூந்தல் அலையுதடி
சலசலக்கும் நதியைப் போல
கால் கொலுசு குலுங்குதடி
களிச் சிரிப்பைப் போல வளையல்
கலகலத்துப் தோற்குதடி
அம்மா உன் அழகைச் சொல்ல
சிறு பெண்ணால் ஆகிடுமோ?
வைத்த விழி வாங்காமல்
பார்த்தாலும் (ஆவல்) தீர்ந்திடுமோ?
--கவிநயா