Monday, June 29, 2009
கண்மணியே கதிரொளியே...!
கண்மணியே கதிரொளியே
கருணைமிகும் கற்பகமே
பொன்னொளியே புதுமலரே
புவிமயங்கும் பூமயிலே!
வெண்ணிலவே தண்ணமுதே
விகசிக்கும் ஒளியழகே
பெண்ணெழிலே பெட்டகமே
புன்னகைக்கும் பூச்சரமே!
கனிமொழியே செழுமலரே
கண்கவரும் ஓவியமே
பனிமழையே பைந்தமிழே
பண்வளரும் காவியமே!
தேனே என்திரவியமே
தேசொளிரும் தேவதையே
மானே மின்னெழிற்கொடியே
நேசம்மிகும் நித்திலமே!
நான்மறையின் நாயகியே
நான்வணங்கும் நிரந்தரியே
வான்போற்றும் காரிகையே
நான்போற்ற வரணுமம்மா!!
--கவிநயா
Monday, June 22, 2009
அம்மா எனக்கொரு வரம் வேணும்...
அம்மா எனக்கொரு வரம் வேணும் - மறுக்
காமல் நீ அதைத் தர வேணும் - உன்
னடியே கதி என வந்து விட்டேன்
நீதான் அடைக்கலம் தர வேணும்
கல்லால் உன்னைச் செய்தாலும் - உன்
கருணை ஒன்றும் குறைவதில்லை
மண்ணால் உன்னைச் செய்தாலும்
மாதா உன்னருள் மறைவதில்லை
பளிங்கால் உன்னைச் செய்தாலும் - உனைப்
பற்றிய வரைக்கை விடுவதில்லை
எப்படி உன்னைச் செய்தாலும்
என்அன்னை உன்அன்பில் மாற்றமில்லை
அதுபோல் எனக்குன் பொன்னடியில்
மாறா அன்பைத் தர வேணும்
எது வந்த போதிலும் கலங்காமல்
உனைப்பற் றிக்கொள்ளும் நிலை வேணும்
--கவிநயா
சுப்பு தாத்தாவின் குரலில்...
Monday, June 15, 2009
ஏந்திழையே வாராயோ???
உள்ளேதான் இருக்கின்றாள்
உற்றுப்பார் என்கின்றார்
உள்ளிருக்கும் தேவதையே,
கண்ணில்பட மாட்டாயோ?
கள்ளிருக்கும் மலர்போலே
கருத்தினிலே இனிக்கின்றாய்
சொல்லோடு பொருள்போலே
சேர்ந்துசுவைத் திருக்கின்றாய்
சின்னஞ்சிறு குழந்தையைப் போலே
உன்னைமடி ஏந்திக் கொள்வேன்
உந்தன் மலர்அடிகள் எடுத்து
என்கூந்தல் சூடிக் கொள்வேன்
பண்ணெடுத்து பாட்டுச் சொல்லி
பத்திரமாய்ப் பார்த்துக் கொள்வேன்
என்னிடத்தில் இரக்கம் வைத்து
ஏந்திழையே வாராயோ???
--கவிநயா
Monday, June 8, 2009
அறியாயோ?
சின்னச்சிட்டுக் குருவி ஒண்ணு
பெருங்கடலின் ஓரம் நின்னு
ஒருதுளிக்கு ஏங்குவதை
அறியாயோ - அம்மா
ஒருதுளிக்கு ஏங்குவதை அறியாயோ?
ஒத்தக்கன்னுக் குட்டி ஒண்ணு
சுத்திப்பாத்து தெகச்சு நின்னு
பசுவுக்கென ஏங்குவதை
அறியாயோ - அம்மா
பசுவுக்கென ஏங்குவதை அறியாயோ?
கன்னஞ் செவந்த மொட்டு
கண்ணீர ஏந்திக்கிட்டு
சூரியனுக் கேங்குவதை
அறியாயோ - அம்மா
சூரியனுக் கேங்குவதை அறியாயோ?
அமாவாச வானம் அது
இருட்டப் பாத்து பயந்துக்கிட்டு
முழுநெலவுக் கேங்குவதை
அறியாயோ - அம்மா
முழுநெலவுக் கேங்குவதை அறியாயோ?
--கவிநயா
Monday, June 1, 2009
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே !
இந்த முறை ஊருக்கு போன போது திருவேற்காடு போயிருந்தேன். தற்செயலாக அம்மாவை தங்கரதத்தில் பார்க்க கிடைச்சது. ஊஞ்சலிலும் அம்மா அற்புதமான அலங்காரத்தோட எழுந்தருளி இருந்தா :)
(மறுநாளே வடபழனியில் அவள் பிள்ளையையும் தங்கரதத்தில் காண முடிஞ்ச அதிர்ஷ்டத்தை என்னன்னு சொல்றது! அதுமட்டுமில்லாம சந்தனக் காப்போட ராஜ அலங்காரம் வேற :)
(மறுநாளே வடபழனியில் அவள் பிள்ளையையும் தங்கரதத்தில் காண முடிஞ்ச அதிர்ஷ்டத்தை என்னன்னு சொல்றது! அதுமட்டுமில்லாம சந்தனக் காப்போட ராஜ அலங்காரம் வேற :)
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா நீயும் ஆடுகவே!
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அன்பே அழகே ஆடுகவே!
அகிலம் யாவும் அகம் மகிழ
ஆனந்தத் தில்மனம் மிகக் குளிர
பரவசத் தில்இரு விழி கசிய
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!
'ஓம் ஓம் ஓம்' என்று உரைத்திடவே
உலகெங்கும் உன்பெயர் ஒலித்திடவே
உள்ளத்தை உன்னொளி நிறைத்திடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!
ஜரிகைப் பட்டாடைகள் அலங்கரிக்க
முத்துமணி ஆரங்கள் ஜொலிஜோலிக்க
நறுமண மாலைகள் இசைந்தசைய
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!
மூவரும் தேவரும் பணிந்திடவே
மூவுலகும் உனை ஏற்றிடவே
முத்தமிழால் தினம் போற்றிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா நீயும் ஆடுகவே!
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அன்பே அழகே ஆடுகவே!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://sakthiyathirai.blogspot.com/2008/12/blog-post.html
Subscribe to:
Posts (Atom)