Monday, October 28, 2013

நான்மாடக் கூடலின் நாயகிசுப்பு தாத்தா அப்போதே அருமையாகப் பாடி அனுப்பி விட்டார்... சில சொந்த பிரச்சனைகளால் உடனடியாக இட முடியவில்லை... மன்னியுங்கள். மிக்க நன்றி தாத்தா!நயன தீக்ஷை அருள்பவளாம் நங்கை மீனாக்ஷி
நான்மாடக் கூடலிலே நாயகி ஆட்சி
(நயன)

சுந்தரனைச் சொந்தங் கொண்ட சுந்தரியாம்
மந்திரமாய் மனங் கவர்ந்த மாதங்கியாம்
கடம்ப வனம் வாழுகின்ற கற்பகமாம்
விடமுண்ட கண்டன் போற்றும் அற்புதமாம்
(நயன)

கிளி கொஞ்சும் மொழியுடைய பெண்ணிவளாம்
கிளி தாங்கி நிற்கும் எழிற் கன்னியளாம்
வாள் சுழற்றும் வீறு கொண்ட மங்கையளாம், விழி
மீன் சுழற்றி நம்மைக் காக்கும் கண்ணியளாம்
(நயன)


--கவிநயா

Monday, October 21, 2013

குமரியம்மா!

சுப்பு தாத்தா காம்போதியில் உருகியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா.சிற்றாடைப் பெண்ணாகச் சிரித்தபடி காத்திருக்கும்
சிங்காரச் சீமாட்டியே!
வற்றாத அருட்பாவை வாஞ்சைமிகு கன்னியுன்னை
வாழ்த்த வந்தேன் பாராட்டியே!

தவக்கோலம் கொண்டிங்கு சிவனுக்காய்க் காத்திருக்கும்
எழிற்கோலச் செல்லப் பெண்ணே!
விழிக்கோலம் கண்டபின்னே வேதனைகள் ஏதிங்கு
களிக்கோலக் கன்னிப் பெண்ணே!

வண்டாடும் விழியிரண்டும் வாசல்தனைப் பார்த்தபடி
அரன்வரவைப் பார்த்திருக்கும்!
கொண்டாடும் பக்தரையோ கோதையுன்றன் விழியிரண்டும்
கருணையுடன் காத்திருக்கும்!

முத்தான மூக்கினிலே மின்னுகின்ற மூக்குத்தி
பித்தனுக்கு வழி காட்டவோ?
சக்தியுன்றன் கரங்களிலே தவழுகின்ற ஜபமாலை
பக்தருக்கு வழி காட்டவோ?

காலங்கள் சென்றாலும் சிவனேதான் சதமென்று
காத்திருக்கும் கன்னி மயிலே!
கோலமயில் உன்னுறுதி எனக்கும் வரவேணுமடி
கருணைசெய்வாய் வஞ்சி எழிலே!

உன்பதமே சதமென்று உன்னடிகள் பற்றிவிட்டேன்
எனைக் காக்க வேணுமம்மா!
உறுத்துவரும் வினைகளெனைத் துரத்திவந்து எரித்தாலும்
புகல் நீயே தரணுமம்மா!


--கவிநயா 


படத்துக்கு நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Devi_Kanya_Kumari.jpg

Monday, October 14, 2013

அம்பா ஜகதம்பா...சுப்பு தாத்தா அடானாவில் பாடி அசத்தியிருப்பது இங்கே...அவர் சேர்த்திருக்கும் அழகிய படங்களையும் கண்டு களியுங்கள். மிக்க நன்றி தாத்தா!அம்பா ஜகதாம்பா
அம்பலவாணன்இடம் அமர்ந்தருள் புரிகின்ற
(அம்பா ஜகதாம்பா)

அரனுடன் திருநடம் புரிந்திடுவாள்
பரமென்ற பேருக்கு புகல் தருவாள்
(அம்பா ஜகதாம்பா)

தேவரெல்லாம் சூழ
முனிவரெல்லாம் பணிய
பக்தரெல்லாம் கூட
முத்தமிழில் புகழ் பாட...

ஜல் ஜல் ஜல்லென சலங்கைகள் குலுங்கிட சிவை எழில் நடமிடவே
கல் கல் கல்லென கழல்கள் ஒலித்திட சிவன் உடன் நடமிடவே
தீம் தீம் தீமென திசைகள் அதிர்ந்திட இருவரும் நடமிடவே
ஓம் ஓம் ஓமெனும் நாதம் ஒலித்திட நானிலம் வணங்கிடவே

அம்பா ஜகதம்பா
அரனுடன் திருநடம் புரிந்திடுவாள்
பரமென்ற பேருக்கு புகல் தருவாள்
(அம்பா ஜகதம்பா)


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://thirisoolam.blogspot.com/2013/07/14072013.html


Sunday, October 13, 2013

காளையர்க்கு ஒரு ராத்திரி! கன்னியர்க்கு நவ ராத்திரி!

ஒன்பது இரவுகளின் நிறைவாக...
அன்னைக்கு..
நிறைவான குரலில், நிறைவான மாலை = சுசீலா மாலை!

நவராத்திரி என்றே படம்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் = ஒன்பது பாத்திரங்களில் ஒளிர்ந்த திரைக் காவியம்!

இயக்குநர் AP நாகராஜன் கை வண்ணத்தில்...
*நடிகையர் திலகம் சாவித்ரி, ஒவ்வொரு இரவாக, காட்சி நகர்ந்து..
*ஒன்பதாம் நாள் நிறைவில்...
*காதல் கொண்டவனையே மணக்கும் காவியம்!

நவரசங்களும், ஒவ்வோர் இரவு நிகழ்ந்து...
1. வியப்பு
2. பயம்
3. கருணை
4. கோபம்
5. சிரிப்பு
6. அருவருப்பு
7. வெட்கம்
8. வீரம்
9. (அமைதி)
மனம் போல் திருமணம் இனிதே நிகழும் கதை!

நவராத்திரியில், "கல்யாண வல்லி"யாகக் கொலுவிருக்கும் அன்னையை..
அவ்வண்ணமே வேண்டுவோம்!நவராத்திரி சுப ராத்திரி
நவராத்திரி சுப ராத்திரி

அலைமகளும் கலைமகளும்
கொலுவிருக்கும் ராத்திரி
மலைமகளும் சேர்ந்து நம்மை
மகிழ வைக்கும் ராத்திரி

கவிஞர் நெஞ்சில் கற்பனைகள் ஊறுவதும் ராத்திரி
கலைஞர் எல்லாம் அரங்கத்திலே சேருவதும் ராத்திரி
நாள் முடிந்து தொடங்கும் இடம் நடு ராத்திரி - இள
நங்கையர்கள் போற்றுவதும் நவராத்திரி
(நவராத்திரி சுப ராத்திரி)

தூக்கமில்லா மனிதரையும் தூங்க வைக்கும் ராத்திரி
சுழன்று வரும் பூமிக்கெல்லாம் அமைதி தரும் ராத்திரி
காளையர்க்கு ஓர் இரவு சிவ ராத்திரி - ஆனால்
கன்னியர்க்கு ஒன்பது நாள் நவ ராத்திரி
(நவராத்திரி சுப ராத்திரி)


குரல்: பி.சுசீலா
வரி: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
படம்: நவராத்திரி


Saturday, October 12, 2013

இசையின் எழிலுருவே!


இசையின் எழிலுருவே!
( song in kala's sweet voice : http://ammanpaattu.blogspot.in/2013/02/blog-post.html )

ஏழுசுர இசையின் எழிலுருவே !உமையே!
"வாழி நீ!"என வாழ்த்தி வணங்குகிறோம் உனையே.


சகலகலாவல்லி!சர்வாணி!சிவானி!
சட்ஜம சங்கீத சுக சாகரம் நீ !
ரிசபேசன் ரமணி!ரஞ்சனி!ருத்ராணி!
ரிதனில் ரீங்காரம் செய்திடும் ராகினி!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

கஜமுக ஜனனி!கௌரி!காத்யாயினி!
காந்தார சுரத்தின் கானாம்ருதம் நீ!
மாதங்கி!மதசாலினி!மனோன்மணி!
மத்யமசுரமதன் மங்கலகீதம் நீ!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

பவதாரிணி!பஞ்சபாணி!பவானி!
பஞ்சமம் பொழியும் பண்களின் இனிமை நீ!
தர்மசம்வர்த்தினி! தேவி !தாக்ஷாயினி!
தைவத சுரந்தரும் தேமதுர தொனி நீ!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

நிதம் நினைவினில் நிறை நித்ய கல்யாணியே !
நிஷாதம் நல்கிடும் நல்லிசை நாயகியே !
ஏழுசுர இசையின் எழிலுருவே !உமையே!
"வாழி நீ!"என வாழ்த்தி வணங்குகிறோம் உனையே.

Thursday, October 10, 2013

Morning Raga மீனாட்சி! (மாதே!)

நவராத்திரி:  நேற்று, இளையராஜா-MSV கூட்டுப் பாட்டு பார்த்தோம் - தாய் மூகாம்பிகை படத்தில் இருந்து;
இன்னிக்கு Morning Raga என்ற அழகிய படத்தில், ஒரு மீனாட்சி பாட்டு பார்ப்போமா?

(என்னடா, இந்த ரவி, நவராத்திரி அதுவுமா, அம்பாளுக்குச் சினிமாப் பாட்டா போடுறான்? -ன்னு யாராச்சும் முனகறீங்களா என்ன???:)))


இந்தப் படத்துக்கு இசை = மணி சர்மா;
போக்கிரி, திருப்பாச்சி, ஆஞ்சனேயா, தாஜ் மகால் போன்ற பல விஜய்/ அஜீத் படங்களுக்கு இசையமைத்தவர்!

தாஜ் மகாலில் வரும் "மின்னலைப் பிடித்து, மின்னலைப் பிடித்து" காதல் பாட்டுக்கு, நான் பெரும் அடிமை!:)


மாதே! மலையத் துவஜ பாண்டிய சஞ்சாதே -ன்னு வடமொழிப் பாடல்!
= அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர் எழுதியது!

இதுவொரு பத வர்ணம்!
அப்படின்னா என்ன? -ன்னு லுக்கு விடாதீக:) ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லுறேன்; அறிஞர்கள் வந்து திருத்தவும்!

வழக்கமான கர்நாடக இசைப் பாடல்கள்....
எடுப்பு - தொடுப்பு - முடிப்பு (பல்லவி-அனுபல்லவி-சரணம்) -ன்னு முடிஞ்சீரும்!

ஆனால் பத வர்ணத்தில், வரிகளுக்கு நடுவே, ஜதியும் கலந்து வரும்! (தாம்-தீம்-தொம் etc)
அதனால் பரத நாட்டியத்துக்கு மிகவும் பயன்படுத்துவார்கள்!

Morning Raga படத்தில்... இந்த "சாஸ்த்ரீயமான" பாட்டை...
Drums, Guitar, Violin, மிருதங்கம், கடம், சதங்கை -ன்னு அத்தனைக் கருவிகளும்...
நடுவில் கிராமத்துப் பெண்ணின் சிரிப்பே சங்கீதமாக:))

ஆனால் மேற்கத்தியப் படுத்தாமல், மேன்மைப் படுத்தி உள்ளார்கள்!
So called புனிதம் கெடாமல், இசையைத் துள்ளலாக, கர்நாடக இசை அறியாதவர்க்கும் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்!
கேட்டுப் பாருங்க! உங்களுக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிப் போகும்:))

கேட்டுக்கிட்டே பதிவை வாசிங்க!
அப்பறம் முடிஞ்சா Morning Raga முழுப் படமும் பாருங்க!:)


மாதே, மலையத் துவஜ பாண்டிய சம்ஜாதே
மாதங்க வதன குக, மாதே!

சாகோதரி சங்கரி சாமுண்டீஸ்வரி
சந்திர கலாதரி தாயே கெளரி
-----------------
தாதா - சகல கலா நிபுண ச-துரா
தாதா - சுலப ஹ்ருதய மதுர வ-சனா
தாதா - சரச ருசிர தர ஸ்வர - லய கீதா 
சுகத - நிஜ பவ ரசிக வர - தாதா

மகிஷா சுர வத நள வதி ஸ்ரீ..
கிருஷ்ண ராஜேந்திர தயே
சதா பொரே மஹித - ஹரி கேச மனோகரே - சதய

(மாதே, மலையத் துவஜ பாண்டிய சம்ஜாதே)
-----------------
ஷ்யாமே 
சகல புவன சார்வ பெளமே 
சசி மண்டல மத்யக
(மாதே, மலையத் துவஜ பாண்டிய சம்ஜாதே)
-----------------

பொருள்:

*மாதே = அம்மா
*மலையத் துவஜ பாண்டிய சம்ஜாதே = மலையத்துவச பாண்டியனின் செல்ல மகளே

*மாதங்க வதன = பச்சை மேனி கொண்டவளே
*குக... மாதே = குகப் பெருமான் / என் முருகனுக்குத் தாயே!

*சாகோதரி = பச்சை மாமலை போல் மேனியான், எந்தை அரங்கனுக்குச் சகோதரியே!

*சங்கரி = சங்கரனின் சங்கரி!

*சாமுண்டீஸ்வரி = சாமுண்டீஸ்வரி தாயே!
*சந்திர கலாதரி = பிறைச் சந்தரனைச் சூடியவளே!
*தாயே கெளரி = அம்மா கெளரி!

அம்மா, மக-மாயி, என் குக-தாயீ
மீனாட்சீ.. ஒன் முருகப் பிள்ளையையே நம்பி வந்தேன்; நின் தாள் சரண்!


வரி: அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர்
ராகம்: கமாஸ்
குரல்: சுதா ரகுநாதன்
இசை: மணி சர்மா
படம்: Morning Raga
---------

*இதே பாடலை MS Amma பாடுறதை, இங்கு கேட்கலாம்!
*வீணை இசையில், இந்தப் பாட்டு, இங்கே!
*நடிகை ஷோபனா, இந்தப் பாட்டுக்கு ஆடும் நடனம் இங்கே!

அனைவருக்கும் இனிய நவராத்திரி (ஒன்பதிரா) வணக்கம்!
முடிந்தால், நாளையும் ஒரு பாடல் இடுகிறேன்
- Amman Songs Head Master கவிநயா அக்கா -ன்னா.. எனக்கு எப்பமே ஒரு பயம்:))

Wednesday, October 9, 2013

தாயே மூகாம்பிகே!

இனிய நவராத்திரி (ஒன்பதிரா) வாழ்த்துக்கள்!

இன்று, For a change, ஒரு நல்ல சினிமாப் பாட்டைக் கேட்போம்..
அம்மன் பாட்டு தான், பயப்படாதீங்க:)

சினிமாப் பாட்டு-ன்னாலே பயந்து ஒதுக்கத் தேவையில்லை:)
ஸ்லோகப் பாடல்கள் போல், சினிமாப் பாடல்களும் அன்னைக்கு அணிகலனே!!

இந்தப் பாடல் = மூவர் பாடும் பாடல்!
= முத் தேவியர்க்கு!
1. பாலமுரளி கிருஷ்ணா 2. MSV 3. சீர்காழி கோவிந்தாராஜன்
மூவரும், இளையராஜா இசையில்!

பின்பு, ஜானகியும் பாடி நிறைத்து வைப்பார்
மூவரும் ஒருவரான மூகாம்பிகை அன்னையை!

பாடல் காணொளி கீழே; ஒலிச்சுட்டி மட்டும் வேணும்-ன்னா = இங்கே!


தாயே மூகாம்பிகே, ஜெகன்
மாயே லோகாம்பிகே!

தேவியர் மூவரும் மேவிய உருவே - அருள்
தண் நிழல் வழங்கிடும் புண்ணியத் தருவே!
(தாயே மூகாம்பிகே)

பாலமுரளி: (கலைமகள்)

நான்முகன் தேவி நா மகளே, 
நான்மறை ஏத்தும் பா மகளே,
ஞான மழை முகிலே!

தாமரைப் பூவில் பாவலர் நாவில்,
அமர்ந்தவளே அருள் வீணை மீட்டும்
ஞான மழை முகிலே!

மூடர்கள் வாக்கும், ஊமைகள் நாக்கும்,
கவித்துவம் கொண்டாடுவதும்,
மகத்துவம் கண்டாடுவதும்,

உனதருள் பார்வை உதவிய வாழ்க்கை
மேலாம் கல்வி வழங்கிடும் செல்வி
ஞான மழை முகிலே!

பிரம்ம லோகத்திலே, கர்ம யோகத்திலே,
ஞான பீடத்திலே, மேவும் காயத்ரியே!
வேத கோஷப் ப்ரியே, சங்கீத நாதப் ப்ரியே!
தர்ம சாஸ்திரப் ப்ரியே, தர்க்க நியாயப் ப்ரியே!

திரையிசைச் சக்கரவர்த்தி MSV: (அலைமகள்)

நாரணன் தேவி திருமகளே,
நவநிதி யாவும் தரும் மகளே!

ஆனந்த வாழ்வின் ஆதாரம் நீயே!
அருள் உள்ளம் வாய்ந்த பொருள் வெள்ளமே!

பெருமானும் கொஞ்சும் ஒரு மானும் நீயே,
திருமார்பில் வாழும் மகாலக்ஷ்மியே!

வறுமைப் பிணியின் வருத்தம் தணிய உதவும் மருந்தே
பொன்னும் பொருளும் மண்ணும் புகழும்
நிதம் நினது பதம் பணியத் தரும் திருவே!

ஆனந்த வாழ்வில் ஆதாரம் நீயே!
அருள் உள்ளம் வாய்ந்த பொருள் வெள்ளமே!

சீர்காழி கோவிந்தராஜன்: (மலைமகள்)

மலை மகள் நீயே மாகாளியே!
உமையவள் நீயே ஓம்காரியே!

திரிபுர சுந்தரியே, திரிசூலி நிரந்தரியே,
தாமரைக் கழல், தளிர் நடை இட
பூவிழிக் கனல் பொழி மழை என
சுடர் விட, இடர் விட, நடமிடும்..
(திரிபுர சுந்தரியே)

கருங்குழல் மலராட, கனியிதழ் நகையாட,
அருமறை துதி பாட, அரவுகள் படமாட,
எட்டுத் திசை சிதற, சுட்டும் விழி பதற,
தத்தோம் நடை அதிர, தண்டை மணி உதிர


தாம் கிட, தரி கிட, தை என ஒலித்திட
தீம் கிட, திமி கிட, தோம் என நடமிடும்
ஓம் சக்தி - ஓம் சக்தி - ஓம் சக்தி - ஓம் சக்தி - ஓம்!
--------------------------------------

எஸ். ஜானகி: (மூவரும் ஒருவரான மூகாம்பிகை)

அம்மா அம்மா 
அம்மா அம்மா

தாயே மூகாம்பிகே, ஜெகன்
மாயே லோகாம்பிகே!

இரு மலரடி தொழும் - ஒரு மகள் மீது
இரு விழி மலராதோ?
இரு விழி அது தரும் - அருள் ஒளியாலே
இரவுகள் புலராதோ?
வாழும் வழி காட்டு, போதும் விளையாட்டு!

வாய் இன்றி நான் அன்று, 
தாய் வேண்டினேன் - அந்தத்
தாய்க்கு இன்று மொழி சேர்க்க 
வாய் வேண்டினேன்

விஷமுண்ட பெருமானின் ஒரு பாதியே - இங்கு
விஷம் கொண்ட ஒரு பெண்ணின் உயிர் காக்கவே

ஓசை விளைந்திட உதடுகள் மொழிந்திட
பேசத் திருமலை அருளே
மோதும் விஷமது விலகிட உதவிடு
ஓதும் மறைகளின் பொருளே

கதிரே கனலே கருணைப் புனலே - அருட்
கனியே மணியே கற்பின் அணியே
அபயம் அபயம் 
சரணம் சரணம்

அந்தரி சுந்தரி சங்கரி சாம்பவி
ஆதி பயங்கரி அபயம்
பைரவி பார்கவி மோகினி யோகினி
மாலினி சூலினி சரணம்

(தாயே மூகாம்பிகே)


குரல்: பாலமுரளி, MSV, சீர்காழி, ஜானகி
வரி: வாலி
இசை: இளையராஜா
படம்: தாய் மூகாம்பிகை

Monday, October 7, 2013

காளி சரணம்!


சுப்பு தாத்தா மோஹனத்தில் அன்பு சொட்டப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா.கருநீல மேகத்தில் காளியுனைக் கண்டேன்
காட்டாற்று வெள்ளம் போல் உன்கருணை கண்டேன்
வெண்ணிலவின் தண்மையினில் உன்தன்மை கண்டேன்
விண்போல உனதன்பு விரிந்திருக்கக் கண்டேன்!

கருங்கூந்தல் கலைந்தோடி காரிருளை விரட்டும்
கரந்தாங்கும் சூலமெங்கள் கர்மவினை விரட்டும்
நீண்டுதொங்கும் நாவெங்கள் நீள்துன்பம் விரட்டும்
நெருப்பாகச் சிவந்தகண்கள் நெருங்கும்பகை விரட்டும்!

காலத்தை வென்றவளின் பாதங்கள் சரணம்
கோபத்தால் நீதிநிலை நாட்டும்அன்னை சரணம்
பிள்ளையென உன்பதங்கள் பணிந்துவிட்டோம் சரணம்
அன்னையெனக் காத்தருள உடன்வருவாய் சரணம்!


--கவிநயா

Thursday, October 3, 2013

" நவமியில் அருளுவள்."

அனைவருக்கும் இனிய நவராத்திரி நல் வாழ்த்துகள்!

கீழே உள்ள பாடல், நவராத்திரிக்கெனெ VSK என்னும் திரு.டாக்டர்.சங்கர்குமார் அவர்கள் எழுதித் தந்தது. நன்றி அண்ணா.


நவமிவள் நலமிவள் நமக்கென வருபவள்
தவமிவள் தலமிவள் தனக்கிணை இலதிவள்
பவமிவள் பரமிவள் பரமனின் இடமிவள்
சிவமிவள் சுகமிவள் நவமியில் அருளுவள். 1

அருளிவள் அழகிவள் அகமிவள் அமிழ்திவள்
திருவிவள்  துணிவிவள் திறமிவள் திட‌மிவள்
கருவிவள் கதியிவள் கருத்தினில் உறைபவள்
குருவிவள் குலமிவள் நவமியில் அருளுவள். 2

மனமிவள் மகிழ்விவள் மலரிவள்  மறையிவள்
தனமிவள் துணையிவள் துயரிவள் களைபவள்
நனவிவள் நினைவிவள் நிகழ்விவள் நிலமிவள்
எனதிவள் எழிலிவள் நவமியில் அருளுவள். 3

உருவிவள் உலகிவள் உயர்விவள் உயிரிவள்
பெருவிவள் பெயரிலள் பெரிதினும் பெரியவள்
மருவிவள் மதியிவள் முகிழ்விவள்  மிகையி
ள்
இருளிவள் பகலிவள் நவமியில் அருளுவள். 4

முதலிவள் முடிவிவள் முதலெழுத் தானவள்
பதமிவள் புதியவள் பொலிவிவள் புகழிவள்
இதமிவள் இனியவள் இசையிவள்
இசைவிவள்
சதமிவள் துதியிவள் நவமியில் அருளுவள். 5

செயலிவள் செகமிவள் செயமிவள் சுயமிவள்
தயவிவள் தகவிவ‌ள் திசையிவள் தெரிவிலள்
பயமிவள் தீர்ப்பவள் பலமிவள் தருபவள்
அயமிவள் அசைவிவள் நவமியில் அருளுவள்  . 6

குணமிவள் குறைவிலள் களியிவள் கருத்திவள்
உணவிவள் உடையிவள் உரமிவள் உணர்விவள்
மணமிவள் மலைமகள் மல‌ரினும் மெலியவள்
கணமிவள் கனியிவள் நவமியில் அருளுவள். 7

வேரிவள் வலியிவள் வகையிவள் வழியிவள்
தேரிவள் ஏறுவள் சூரிவள் அழிப்பவள்
கூரிவள் தாங்குவள் பாரிவள் காப்பவள்
போரிவள் வெல்பவள் நவமியில் அருளுவள். 8

ஒன்றிவள் இரண்டிவள் மூன்றிவள் மலைமகள்
நான்கிவள் ஐந்திவள் ஆறிவள் அலைமகள்
ஏழிவள் எட்டிவள் நவமிவள் துர்க்கையள்
ஊழிவள் உமையவள் உருவினள் லலிதையள். 9


வானிவள் மழையிவள் பொழிவதில் மகிழ்பவள்
தானிவள் தருபவள் தருவதில் மகிழ்பவள்
நானிவள் பதமலர்ப் பணிந்திட மகிழ்பவள்
காணிவள் சீரெலாம் கூறுதற் கரியதே!  10.


ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நம:

வாழ்க சீரடியாரெல்லாம்.
முருகனருள் முன்னிற்கும்.


மிகை, v. n. & s. abundance
தகவு
(p. 471) [ takavu ] , v. n. (from தகு), fitness, தகுதி.
அயம் (p. 25) [ ayam ] {*},  festival; & good luck, favourable, fortune caused by deeds in former births, நல்வினை.