Friday, April 30, 2010

இளையராஜா: மாசறு பொன்னே வருக!

தேவர் மகன் படத்தில் வரும் அம்மன் பாட்டினை இன்றைய வெள்ளிக்கிழமை இங்கிட்டு காண்போம்!
இன்னும் ஒரு சில இடுகைகள் தான்!
அப்பறம் ஆன்மீக பாடல் வலைப்பூக்களிலேயே முதல் முறையாக, அம்மன் பாட்டு - 200! :)

மாசறு பொன்னே வருக-ங்கிற பாட்டு படத்தில் எப்போ வரும்? ரேவதி முழுகாம இருக்கும் சந்தோஷச் சேதியில், கமல் மகிழ்ந்து சிரிக்க....
ஊரின் தேர் திருவிழாவுக்கு, ரேவதி கண்டாங்கிச் சேலை கட்டிக்கிட்டு, நெற்றியில் விபூதிக் கீற்றும் குங்குமமுமாய், கிராமத்துப் பொண்ணாய், அழகா வருவாங்க!

தேர் நகர நகர, பாட்டும் நகரும்!


சினிமாவில் முழுப் பாடலும் காட்ட மாட்டாங்க! ஏன்-ன்னா தேரில் தான் படத்தின் க்ளைமாக்ஸே இருக்கு!
அதனால், நாம அங்கு செல்லாமல், பாடலை மட்டும் சுவைப்போம்!
படத்தில் அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்துக் கொடுத்துள்ளேன்!
கண்டு, கேட்டு மகிழுங்கள்!
இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில், மாய மாளவ கெளளை ராகத்தில் கெளரியின் பாட்டு, இதோ:





மாசறு பொன்னே வருக! - திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக! - மணிரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!

கோல முகமும் குறுநகையும் - குளிர்நிலவென
நீலவிழியும் பிறைநுதலும் - விளங்கிடும் எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு பொன்னே வருக)

நீர் வானம், நிலம் காற்று - நெருப்பான ஐம்பூதம்
உனது ஆணை தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம் - ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே, உன் பதம் போற்றுதே!

திரிசூலம் கரம் ஏந்தும் - மாகாளி உமையே!
கருமாரி மகமாயி - காப்பாற்று எனையே!

பாவம் விலகும், வினையகலும் - உனைத் துதித்திட
ஞானம் விளையும், நலம் பெருகும் - இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்...
(மாசறு பொன்னே வருக)

வரிகள்: வாலி
குரல்: பலர்
இசை: இளையராஜா
படம்: தேவர் மகன்


மாசறு பொன்னே வருக = மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே தேனே-ன்னு, கற்புக்கரசியான கண்ணகியைச் சிலப்பதிகாரம் போற்றும்! அதே போல் பாட்டும், மாசறு பொன்னே-ன்னு துவங்குகிறது!

திரிபுரம் எரித்த ஈசனின் பங்கே வருக = திரிபுரத்தை ஈசன் தன் சிரிப்பாலேயே எரித்தான் என்று சொல்வதுண்டு! பொதுவாக, கோபமும் தியானமும் மிகுந்து காணலாகும் ஈசன்! அவனின் சிரிப்புக்கு யார் காரணம்? அவன் இனிய காதல் பைங்கொடி, இவள் தானே!
அதனால் திரிபுரத்தை ஈசன் எரிக்கவில்லை! அவன் சிரிப்பான அன்னை எரித்தாள் என்று ஆகி விடுகிறது! அதான் திரிபுரம் எரித்த ஈசனின் பங்கே என்று கவிஞர் விளிக்கிறார் போலும்! எப்படி ஆகிலும் ஈசனின் சம-பங்கு, இடப் பாக இனியது கேட்பாள், இவள் தானே!

மாதவன் தங்காய் வருக = மாயோன் பெருமாளின் தங்கையானவளும் இவளே! மாயோள்! ரெண்டு பேரும் ஒரே நிறம் தான்! குடும்பக் கலர்! :)

மணிரதம் அதில் உலவ, வாசலில் இங்கே வருக!! = மாணிக்கத் தேரேறி, நம் வீட்டு வாசலுக்கே வருகிறாள்! வாடியம்மா ராசாத்தி!


கோல முகமும் குறு நகையும் = அழகு முகம், குறுஞ் சிரிப்பு! ஹா ஹா ஹா-ன்னு பயங்கரமான சிரிப்பு இல்ல! குறுஞ் சிரிப்பு!
குளிர்நிலவென நீலவிழியும் = விழி நீலமா இருக்கு! அதாச்சும் விழிக்கரு நீலம்! அதனை ஒட்டிய வெண்பகுதியோ குளிர் நிலவான வெண்மை!

பிறைநுதலும் = மூன்றாம் பிறையைக் கவிழ்த்துப் போட்டாப் போல் நெற்றி!
விளங்கிடும் எழில் = இப்படி ஒரு முக அழகு!
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் = அது என்ன நீலி? சூலி-ன்னா சூலம் ஏந்துபவள்! நீலி-ன்னு ஏன் சொல்லணும்! பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!

நீர் வானம், நிலம் காற்று, நெருப்பான ஐம்பூதம் = இந்த ஐம்பூதங்களும்
உனது ஆணை தனையேற்றுப் பணியாற்றுதே = இவள் ஆணையால் தான் தங்கள் பணியைச் செய்கின்றன!
பார் போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம், இவையாவும் எழிலே, உன் பதம் போற்றுதே! = நாயன்மார்களின் தேவாரமும், ஆழ்வார் பாசுரங்களும், அன்னை உமையாளைப் பாடிச் சிறப்பிக்கின்றன! தேவாரம் அன்னையைப் போற்றுவதில் வியப்பில்லை - சைவ இலக்கியம்! ஆனால் ஆழ்வார் பாசுரங்களும் அன்னையைப் போற்றுகின்றனவா?

அன்னையைப் பற்றிய குறிப்புகள், பாசுரங்களிலும் வரும்! கோதைக்கு அவள் திருமணக் கனவில், கூறைப் புடைவையும் மணமாலையும் போட்டு விடுவதே, அன்னை தான்! இன்றும் திருக்கோவிலூர் பெருமாள் கோயிலில், பூங்கோவல் நாச்சியார் அருகே, துர்க்கை அம்மனுக்குத் தனிச் சன்னிதி உண்டு!


திரிசூலம் கரம் ஏந்தும் - மாகாளி உமையே = அவனுக்கும், அவளுக்கும் ஒரே ஆயுதம் தான் = திரிசூலம்! குடும்பம்-ன்னா இப்படி இருக்கணும்! என்னா ஒற்றுமை பாருங்க! எதுக்குத் தனித்தனியா ரெண்டு? எல்லாத்தையும் Share பண்ணிக்க வேணாமா? :)

கருமாரி மகமாயி - காப்பாற்று எனையே = மாரியான மழைத் தெய்வமும் நீ தான்! மகா மாயோளும் நீ தான்! என்னைக் காப்பாத்தும்மா தாயே!

பாவம் விலகும், வினை அகலும் = பாவம், வினை ரெண்டும் வேற வேறயா? ஆமாம்!
* வினை = முற்பிறவியில் செய்தது! நம்மை இப்போது தொடர்வது! (சஞ்சித கர்மா - மூட்டை கட்டி வச்சிருக்கு! அதில் இருந்து கொஞ்சம் எடுத்து இந்த இப்பிறவிக்கு :)
* பாவம் = இப்பிறவியில் செய்வது! அடுத்த பிறவியில் இதுவும் வினையாகி, மீண்டும் தொடரும்! (ஆகாம்யம்)

ஏற்கனவே மூட்டையில் இருக்கு! இதுல இன்னும் இன்னும் செஞ்சி, சேர்த்துக்கிட்டே இருந்தா எப்படி? அட் லீஸ்ட், இந்தப் பிறவியிலாச்சும் பண்ணாம இருந்தா, மூட்டையில் பாரம் குறையும்-ல்ல? :)
இறைவன் திருவடிகளை ஊற்றமுடன் பற்றிக் கொண்டவர்க்கு, இந்த மூட்டை இருந்தாலும், இல்லாமல் போய் விடுகின்றது! எரிந்து விடுகிறது!
போய பிழையும், புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் என்பது, என் தோழி கோதையின் வாக்கு!
அதைத் தான் வாலியும் காட்டுகிறார் = பாவம் விலகும், வினை அகலும்!

உனைத் துதித்திட, ஞானம் விளையும், நலம் பெருகும் = அவனை அடையவும் அவனே வழி என்ற ஞானம் விளையும்! அதனால், எல்லாம் அற, என்னை இழந்த நலம் = சரண நலம் பெருகும்!
இருள் விலகிடும் சோதியென ஆதியென அடியவர் தொழும் = இருள் விலகி அருள் சேரும் ஜோதி! ஆதி! தீப மங்கள ஜோதி நமோ நம! என்று அன்னையைத் துதிப்போம்!

மாசறு பொன்னே வருக!
மகமாயி குகதாயி வருக வருக!
அம்மன் பாட்டு - 200 உற்சவத்தை, இனிதே நடத்தித் தருக!

Thursday, April 22, 2010

"அன்னையெங்கள் ஆதிபராசக்தி!!"

"அன்னையெங்கள் ஆதிபராசக்தி!"

அன்னையிவள் அன்னையெங்கள் ஆதிபரா சக்தி!
அகிலமெலாம் ஆண்டிருக்கும் ஆதார சத்தி
!

முன்னைவினை தீர்ந்திடவே அன்னைபதம் நாடு
!
என்றுமவள் நினைவினிலே அவள்புகழே பாடு
!

அன்றுதொட்டு இன்றுவரை அவள்நடத்தும் நாடகம்
!
ஆரறிவார் இதன்மகிமை சொல்லவென்னால் கூடுமோ
!

அதர்மத்தை அழித்திடவே அசுரர்களை அழித்தாள்
!
அண்டிவந்த நல்லவர்க்கு அபயக்கரம் கொடுத்தாள்
!

மண்ணிலிவள் புற்றாகக் கோலம்கொண்டு தவழ்ந்தாள்
!
மன்னுபுகழ் தெய்வமெனக் கொண்டாடிட மகிழ்வாள்!

நீரினிலே நிலைத்திருந்து நெல்வயலைக் காத்தாள்!
நமக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணி ஆனாள்
!

நெருப்பினிலே சுடரான மாரியம்மன் இவளே
!
மறுப்பவரைச் சுட்டெரிக்கும் மாகாளியும் இவளே
!

காற்றாகத் தவழ்ந்துவரும் காத்தாயி இவள்தான்
!
ஊற்றாக உயிராக உய்விப்பவளும் இவள்தான்
!

ஆகாயவெளியினிலே ஓங்காரமாய் ஒலிப்பாள்
!
ரீங்காரம் செய்திருந்து எம்முணர்வில் கலப்பாள்!

பஞ்சபூத சக்தியெனப் படர்ந்திருந்து காப்பாள்
!
அஞ்சுமுயிர் அனைத்துக்கும் தஞ்சமிவள் தருவாள்
!

கொஞ்சுமுகக் கோமளமாய் என்றன்முன்னே வருவாள்
!
கெஞ்சுகின்ற என்றனுக்கே இன்னமுதம் தருவாள்
!

வேதமெலாம் போற்றுகின்ற வேதவல்லி இவளை

நாதவொலி சிறந்திடவே நற்றமிழால் போற்று
!

தனைமறந்து இவள்நினைவில் மனமுருகிப் பாடி

நிலைமறந்து நிகழ்மறந்து இன்பமுடன் ஆடு
!

செயலெல்லாம் சக்தியென சொல்லெல்லாம் சக்தியென

கயல்விழியில் மனம்வைத்து காலமெலாம் தேடு
!

நொடிப்பொழுதும் அகலாமல் நினைவொன்றி வாழ்ந்தால்

அடிக்கமலம் தந்துனையே இவள் கூட்டிச் செல்வாள்
!

ஆதாரம் தேடாமல் அவள்பாதம் நாடு
!
சேதாரம் ஏதுமின்றி தனையுணர்த்தி மகிழ்வாள்!


அன்னையன்னை அன்னையெங்கள் அன்பினுக்கு மங்களம்
!
ஆதிபரா சக்தியிவள் அடிமலரே சங்கமம்!

***************

Monday, April 12, 2010

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்!


சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - ஆதி
சக்தி தன்னை பக்தி செய்து பாதம் சூடுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - சிவ
சக்தி யவள் நாமம் சொல்லி நாளும் ஓதுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - நல்ல
புத்தி கொண்டு சக்தி தொண்டு செய்து வாழுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - அந்த
சக்தி யன்றி சக்தி இல்லை என்று காணுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - மாய
சக்தி தன்னை வென்று ஞான சக்தி தேடுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - சித்த
சுத்தி செய்து கொண்டு சக்தி அவளை நாடுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - மகா
சக்தி தன்னை நெஞ்சில் வைத்து நாளும் பேணுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - பரா
சக்தி தன்னை நித்தம் போற்றி மாலை சாற்றுவோம்
பா மாலை சாற்றுவோம்!

***
புன்னாக வராளியில் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றி!

***

--கவிநயா

Monday, April 5, 2010

ஜகன்மோகினீ !


சிந்தையில் நீஆட விந்தையில் நான்ஆழ
மந்திரமாய் வந்த வனமோகினீ

(சிந்தையில்)

சிந்துகவி பாட உன்நினைவில் வாழ
செந்தமிழ் தேன்தந்தாய் ஜகன்மோகினீ

(சிந்தையில்)

பனிமலையில் உறைவாள் பரமனுடன் அருள்வாள்
கனியிதழில் மெதுவாய் குறுநகையும் புரிவாள்

மதிமுடி சூடியவள் பதிஉடல் பாதியவள்
நினைவினில் ஊன்றியவள் சதம்என ஆகியவள்


-கவிநயா

எனக்கே இந்த பாடல் பாடிக்க ஆசை. எல்.கே. அவர்கள் கேட்டதை சாக்கா வச்சு பாடிட்டேன் :) இன்னொரு முயற்சி செய்திருக்கணுமோ என்னவோ, தனிமையும் நேரமும் கிடைக்கலை :(

சிந்தையில்நீஆட


அன்புடன்
கவிநயா