உறவென்று உனைக் கொண்டேன் உமையவளே
– வேறு
எவரிடத்தில் சொல்வேன் என் குறைகளையே?
(உறவென்று)
மனமென்னும் குரங்கின் கை அகப்பட்டேன்
- எந்தன்
மதி செய்யும் சதி வலையில் சிறைப்பட்டேன்
கதி என்று உனை அடைந்தேன் நானம்மா
- என்னைச்
சிறை மீட்டு அருள் செய்வாய் நீயம்மா
(உறவென்று)
உன்னைத் தானே எண்ணி எண்ணி வாழுகிறேன்
உந்தன் புகழ்தானே தினந் தினமும்
பாடுகிறேன்
கண்ணீர் சிந்தும் பிள்ளை பாராம்மா,
என்மேல்
கருணை உனக்கேன் இன்னும் இல்லையம்மா?
(உறவென்று)
--கவிநயா