Friday, August 17, 2007

ஆடிவெள்ளி - கடைசிவெள்ளி - மதுரை அரசாளும் மீனாட்சி!

இன்று ஆடி வெள்ளி! ஆடியில் கடைசி வெள்ளி!
அம்மன் அருளில் ஒரு முழு மாதமும் தமிழகமே திளைத்திட்ட காலம்!
பாவம்....புது மாப்பிள்ளைகளுக்குத் தான் கொஞ்சம் கஷ்டம் :-)

மதுரை அரசாளும் மீனாட்சி பாடல் நாம் எல்லாருமே கேட்டிருப்போம்! திருமலை தென்குமரி படத்தில், குன்னக்குடி இசையில், சீர்காழியார் பாடுவார்.
துள்ளலான பாட்டுக்குப் பெயர் பெற்ற LR ஈஸ்வரி, கர்நாடக மெட்டில் அப்படியே குழைவார் இந்தப் பாட்டில்! ஆனாக் கடைசி பத்தியில் மீண்டும் துள்ளி விடுவார்! :-)

பாட்டில் "திரிபுரசுந்தரி சீர்காழியிலே" என்று வரும் போது, சீர்காழியும் குழைவார்! அவர் சொந்த ஊர் பாசம் ஆச்சே! சும்மாவா?
சினிமாவில், சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது இங்கே

இந்தப் பாட்டு சினிமாவில் மட்டும் அல்லாது, மேடைக் கச்சேரிகளிலும் பாடப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? அதுவும் மதுரை சோமு அண்ணா பாடிக் கேட்க எவ்வளவு சிறப்பு!
மதுரை சோமு பாடுகிறார் இங்கே, ஆனால் வித்தியாசமான கர்நாடக மெட்டில்


(வேத கோஷம் - சஹனா பவது...)

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி


தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவள் அல்லால் ஏது கதி?
(மதுரை அரசாளும் மீனாட்சி)


திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே
(மதுரை அரசாளும் மீனாட்சி)


திருவேற்காட்டினிலே கருமாரி
தென்பொதிகை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
(மதுரை அரசாளும் மீனாட்சி)


....காபி ராக ஆலாபனை...
(மதுரை அரசாளும் மீனாட்சி)




படம்: திருமலை தென்குமரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், LR.ஈஸ்வரி, விஜயா
ராகம்: காபி