Monday, October 30, 2017

என்னுலகம் நீயே!




சுப்பு தாத்தா வின் இசையில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அம்மா உன்னைக் கண்டால் போதும்

ஆசையெல்லாம் தீரும்

சும்மா உன்பேர் சொன்னால் போதும்

பிறவியும் கரை சேரும்

(அம்மா)



உன் நினைவில் வாழுகிறேன்

என்னுலகம் நீயே

உன் புகழைப் பாடுகிறேன்

என் மொழியும் நீயே

(அம்மா)



காடு வீடு இல்லம் துறவு

எல்லாம் இங்கு ஒன்றே

நாடுவது உன் பதமே

என்றால் மிக நன்றே



உன் விழியில் காணுகிறேன்

கருணை என்னும் கடலே

உன்னடிகள் தந்திடுமே

தங்க எனக்கு நிழலே

(அம்மா)


--கவிநயா 

Monday, October 23, 2017

மலர்களெல்லாம் உனக்காக!




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

மலர்களெல்லாம் உனக்காக

மகளின் மனம் உனக்காக
பொதிகைத் தென்றல் உனக்காக
பொங்கும் அன்பு உனக்காக
(மலர்கள்)

கால்களாலே நடப்பதெல்லாம்
கண்மணி உன்னை வலம்வரவே
கைகள் செய்யும் செயல்கள் யாவும்
அன்னை உன்னைத் தொழுதிடவே
(மலர்கள்)

நா உரைக்கும் சொற்களெல்லாம்
நங்கை உந்தன் நாமமாகும்
பாவில் ஊறும் சொற்களெல்லாம்
பாவையுன் புகழ் ஆரமாகும்

உடல் உன்னைப் பணிவதற்கே
உள்ளம் உன்னை நினைப்பதற்கே
மொழி உன்னைப் புகழ்வதற்கே
பிறவி உன்னை அடைவதற்கே
(மலர்கள்)


--கவிநயா
 

Monday, October 16, 2017

திருநாமம், அது குழல்கீதம்



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

நாளும் உன்னை நினைக்கின்றேன்

நாயகியே மனம் களிக்கின்றேன்

கண்மணி உன்முகம் பார்க்கின்றேன்

கருவிழி களில்நீர் கோக்கின்றேன்

(நாளும்)



திருவடி எழில்மிகு தாமரையே

திருமுகம் பூரண சந்திரனே

திருநாமம் வேய்ங் குழல்கீதம்

திருநோக்கில் உயிர்கள் வாழும்

(நாளும்)



ஒருமுறை உனை நினைந்தால் போதும்

ஒருமுறை பெயர் சொன்னால் போதும்

ஒரு நொடியினில் வினை அழித்திடுவாய்

ஒரு மனதாய் அருள் அளித்திடுவாய்

(நாளும்)


--கவிநயா