Monday, July 29, 2019

மனதினில் வந்தாய்



மடுவினில் மலர் போலே
 முழுமதி எழில் போலே
  ஒளிகதி ரவன் போலே
   மன தனில் வந்தாயே

சிறுஇதழ் நெளிவாலே
 கடைவிழி அசைவாலே
  திருவடித் துகளாலே
   அருள்பொழி யும்தாயே

மலையரசன் மகளாய்
 சிவனுடனே சிவையாய்
  அரனுடன் அவன் இடத்தில்
    அமர்ந்திருக்கும் தாயே

தேனெனும் உன்நாமம்
 தினமது என்வேதம்
  கதியென உன்பாதம்
   கொள்வதுவே போதும்



--கவிநயா

Tuesday, July 23, 2019

ஒரு முறை பார்க்க...



உன்னை ஒரு முறை பார்க்க
மடியினில் தலை சாய்க்க
மனமிது ஏங்குது தாயே, அதை
அறிந்து அருள் புரிவாய் நீயே

மானெனும் விழி நோக்க
தேனெனும் மொழி கேட்க
மனமிது ஏங்குது தாயே, அதை
அறிந்து அருள் புரிவாய் நீயே

பரிவுடன் நீ பார்க்க
கனிவுடனே சேர்க்க
மனமிது ஏங்குது தாயே, அதை
அறிந்து அருள் புரிவாய் நீயே

திருமுகம் நான் பார்க்க
கருவிழி நீர் கோக்க
மனமிது ஏங்குது தாயே, அதை
அறிந்து அருள் புரிவாய் நீயே


--கவிநயா

Monday, July 15, 2019

திருநாள்


உனை எண்ணும் நாளெல்லாம் திருநாளே, உன்னை
எண்ணா விட்டால் அது வெறும் நாளே, அம்மா
(உனை)

எண்ணத்திலே வந்து நெஞ்சத்திலே நுழைந்தாய்
கிண்ணத்திலே மதுவாய் இதயத்திலே நிறைந்தாய்
(உனை)

எண்ணியதெல்லாம் தரும் கற்பகத் தருவே
எந்தைச் சிவன் இடத்தில் திகழ்ந்திடும் திருவே
அகந்தையினை அகற்றி அகத்தினில் வருவாய்
குழந்தையென ஏந்தி அன்பினைப் பொழிவாய்
(உனை)



--கவிநயா

Tuesday, July 9, 2019

அம்மா என்றால் இன்பம்


எத்தனையோ பெயர்களுண்டு அம்மா உனக்கு, உன்னை
அம்மா என்றழைப்பதில்தான் இன்பம் இருக்கு
(எத்தனையோ)

அகிலமெல்லாம் பெற்றதனால் அன்புத் தாயம்மா, பெற்ற
அகிலமெல்லாம் காப்பதானால் அரசி நீயம்மா
(எத்தனையோ)

பலப்பலவாம் பாடல்களால் உன்னை நினைக்கிறேன், அந்தப்
பாடல் கேட்க நீ வரணும் என்று அழைக்கிறேன்
மௌனமாக இருப்பதுதான் உந்தன் தருமமோ, ஒரு
வார்த்தை எனக்குச் சொல்லி விட்டால் முத்து உதிருமோ?
(எத்தனையோ)


--கவிநயா

Monday, July 1, 2019

மலையரசி


மாதா மலையரசி, மங்கள உமையாம்பிகே
வாராய் எனதருகில், இன்னருள் தாராய்
(மாதா)

சந்ததமும் உந்தன் திருப் பெயர் சொல்வேனே
செந்தமிழ்ப் பண்ணாலே உன்புகழ் நெய்வேனே
(மாதா)

வேதமெல்லாம் போற்றும் வித்தகியே உமையே
சோதனைகள் போதும் அம்மா, சொந்தமெனவே வருவாய்
திருப் பத நிழலெனக்கு இதந் தரும் இடமாகும்
பொற் பதம் பணிந்தவர்க்குப் பிறவியும் சுகமாகும்
(மாதா)



--கவிநயா