Monday, August 31, 2009

ஸ்ரீ ஜகன் மோகினி கல்யாணி !



ஸ்ரீ ஜகன் மோகினி கல்யாணி
ஜெய பவ தாரிணி சுகவாணி

மாமலை தனில்வாழும் எழில்ராணி
அந்த மாதொரு பாகன்மனம் மகிழ்வேணி

புள்ளினம் பாட்டிசைக்கும் காலையிலே
உந்தன் புகழினைச் சேர்ந்திசைக்கும் சோலையிலே
வண்டினம் தேடும் உந்தன் முகமலரை
மலர்ச் செண்டிடம் கண்டிடுமே உன்னெழிலை

காற்றும் உந்தன் பெயரை ஏந்தி வரும்
நாற்று முதல் நாணல் வரை ஓதி வரும்
பெருங்கடல் அலையும் உன் சேதி சொல்லும்
அதை கேட்கையில் ஆனந்தம் மனதை அள்ளும்


--கவிநயா

Monday, August 24, 2009

என் அன்னை நீயே!



என் அன்னை நீயே
என் னுயிர்த் தாயே
உன் திருப் பதங்கள்
சரணம் அம்மா

என் கண்ணின் மணியே
கண் காக்கும் இமையே
உன் அருள் பதங்கள்
சரணம் அம்மா

உள்ளன்பால் உன் பெயரை
உச்சரிக்கின்றேன்
பதர் என்னைக் கரையேற்ற
விரைந்தோடி வருவாய்

விதி எந்தன் வழி மறிக்க
விழி நீரோ கண் மறைக்க
இறைஞ்சி உன்னை அழைக்கின்றேன்
இரங்கி நீ வருவாய்

என்னுள்ளே உன்னை ஏற்றி
விளக்காக வைத்தேன்
இருள் அகற்றி ஒளி பரப்ப
இக்கணமே வருவாய்!


--கவிநயா

Monday, August 17, 2009

வருவாயென...

யார் என்ன சொன்னாலும்
ஏங்கி அழ வைத்தாலும்

கண்களிலே கண்ணீர்தான்
காவியங்கள் வரைந்தாலும்

என் மனதில் ஓர் இன்பம்
ஏனோதான் விளைகிறது

சொல்லாத நம்பிக்கை
தன்னாலே முளைக்கிறது

அழுகுரல் கேட்டாலேனும்
அபயந்தர வருவாயென…

கதறல் கேட்டாலேனும்
காப்பாற்ற வருவாயென…

பயம் தெளிவித்திடவே
பதறி நீ வருவாயென…

அரவணைத்து அன்புடனே
ஆறுதல் தருவாயென…

மார்மேலே சாய்த்தெந்தன்
மாயைகள் களைவாயென…

மடிமேலே சாய்த்தெந்தன்
மனக்கவலை துடைப்பாயென…


--கவிநயா

Monday, August 10, 2009

ஒரேயொரு வார்த்தை சொல்வாய்...


ஒரேயொரு வார்த்தை சொல்வாய்
என்னைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்வாய்
பல நூறு ஜென்மங்கள்
எடுத்து வந்தேன் பார்த்துக் கொள்வாய்

(ஒரேயொரு)

பச்சைக் கிளி உனக்காக
பச்சைமர மாய்ப் பிறப்பேன்
பற்றிக் கொள்ளும் வெயிலினிலும்
பசும்நிழலை நான் கொடுப்பேன்

வஞ்சிக் கொடி உனக்காக
வண்ணமல ராய்ப் பிறப்பேன்
கொஞ்சிநீயும் நடை பழக
பாதை யெங்கும் பாய்விரிப்பேன்

(ஒரேயொரு)

குத்துவிளக்கா யிருந்தால்
கோதைமுகம் பார்த்திருப்பேன்
முத்துமணி மாலைகளாய்
மேனியினை அலங்கரிப்பேன்

கற்பூரமா யிருந்தால்
கருணை முகம் காட்டிடுவேன்
பொற்பதங்க ளைத்தழுவும்
நூபுரமாய்க் கிணுகிணுப்பேன்

அம்மாநீ உடன் இருந்தால்
துயர மெல்லாம் தூசாகும்
அம்மாஉன் துணை யிருந்தால்
பிறவி கூட பரிசாகும்

(ஒரேயொரு)


--கவிநயா

Friday, August 7, 2009

ஆடிவெள்ளிக் கிழமையிலே...



ஆடிவெள்ளிக் கிழமையிலே
தேவிஉன்னைத் துதிக்க வந்தேன்
தேடிமலர் பறித்து வந்தேன்
தேர்ந்தெடுத்து தொடுத்து வந்தேன்

சின்னஇதழ் சிரித்திருக்க
சேல்விழிகள் சிவந்திருக்க
வண்ணமலர் அலங்கரிக்க
வஞ்சிநீயும் மகிழ்ந்திருக்க

சிற்றாடை இடையினிலே
சித்திரம்போல் தழுவிநிற்க
பொற்றாமரை இதழ்போல்
பூம்பதங்கள் பொலிந்திருக்க

சர்க்கரைப் பொங்கலுடன்
சந்தனமும் மணத்திருக்க
நாதஸ்வரம் மேளங்களும்
நாற்றிசையும் ஒலித்திருக்க

கற்பூர ஜோதியிலே
கற்பகமே உன்னைக் கண்டேன்
பொற்பதங்கள் பற்றிக் கொண்டேன்
பூவுலகை மறந்து நின்றேன்!


--கவிநயா

(படம் மௌலிகிட்ட இருந்து சுட்டுட்டேன்! நன்றி மௌலி :)

Monday, August 3, 2009

நீஎந்தன் உயிரிலே...



நீஎந்தன் உயிரிலே
நினைவெந்தன் மனதிலே
நித்தம்உன்னை எண்ணி
பாடினேன் அன்பிலே

புயலன்ன வாழ்விலே
இலையன்ன நானுமே
திசையென்ன அறியாமல்
அலைகின்ற போதிலே

புகலொன்று வேண்டியே
புவியாளும் ராணியே
உன்னிழலை தேடியே
வந்தேனே ஓடியே

உறவென்று உன்னையே
உரமென்று நம்பியே
உள்ளத்தில் உனையிட்டு
வைத்தேனே அன்னையே

பாதைகா ணாமலே
பரிதவிக்கும் போதிலே
பரிதியென வருவாயே
தேசொளிரும் தேவியே!

--கவிநயா