Monday, December 28, 2009

கூறிவரும் பத்தர் இதயத்தில் உறைபவள்


மார்கழித் திங்களில் மங்கல நாளினில்
மங்கையின் பதம் பணிவோம்
கார்முகில் மேனியள் பார்வதி தேவியை
பணிந்து மனம் மகிழ்வோம்

இமையவர் வணங்கிட இமயத்தில் வசிப்பவள்
இடபவா கனனின் இடப்புறம் இருப்பவள்
சீறிவரும் சிம்மம் மீதினில் வருபவள்
கூறிவரும் பத்தர் இதயத்தில் உறைபவள்

நான்மறை அனைத்துக்கும் அடிமுடி யாம்இவள்
வானுறை சோதியள் தேன்மொழி தேவியள்
நாடிமல ரடிகளைத் தொழுதிட மகிழ்பவள்
பாடிஅவள் புகழ்சொல்ல பணித்திட்ட தாயவள்!


--கவிநயா

அனைவருக்கும் மனம் கனிந்த புது வருட நல்வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!!



Monday, December 21, 2009

நாளும் உன்னை நினைத்தபடி...



நாளும் உன்னை நினைத்தபடி
நாமஞ் சொல்லித் திளைத்தபடி
நெஞ்சில் உன்னைச் சுமந்தபடி
நேசந் தன்னை வளர்த்தபடி...

உன் னழகை ரசித்தபடி
உன் புகழை இசைத்தபடி
கண் ணெழிலில் கரைந்தபடி
புன்னகையில் புதைந்தபடி...

அம்மா என் றழைக்கையிலே
அன்பு மீறக் குழைந்தபடி
சும்மா உன் முகம்பார்க்க
வேண்டி வேண்டி விழைந்தபடி...

கொஞ்சு தமிழில் வஞ்சியுனை
கனியக் கனிய புகழ்ந்தபடி
உந்தன் பிஞ்சுப் பாதங்களை
பணிந்து பணிந்து மகிழ்ந்தபடி...


--கவிநயா

Monday, December 14, 2009

சரணமடைய சொல்லித் தருவாய்!



சரணமடைய சொல்லித் தருவாய் - உன்
திருவடிகளில் அன்பைத் தருவாய்
சலன மடைகின்ற இதயமதின்
சஞ்சலம் அகற்றி அருளிடுவாய்!

நித்தமும் உந்தன் அடிபணியும்
புத்தியை எனக்குத் தந்திடுவாய்
உத்தமியே என் னுள்ளிருந்து
சத்தியமாய் நீ ஒளிதருவாய்!

இச்சைகள் யாவும் மறந்திடவும்
இச்சக உண்மை புரிந்திடவும்
சிற்சபை ஆடும் சிவனுடனே
சற்றெனக் கருள்வாய் உமையவளே!!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://shalinbharat.ning.com/photo/dancing-posture-lord-shiva-n

Monday, December 7, 2009

உன்னைச் சேரும்வழி காட்ட வேண்டும்!

உன்னைச் சேரவழி காட்ட வேண்டும் - அம்மா
உன்னைச் சேரும்வழி காட்ட வேண்டும்

வான்வெளியில் வழிமறந்த சிறுபறவைபோல
தொலைந்துஅலைக் கழியும்உந்தன் மகளைப்பார்ப்பாய்
தன்சிறகில் தாங்கிக்கொள்ளும் தாய்ப்பறவையாக
என்றுநீ ஓடிவந்து என்னைக் காப்பாய்?

கடல்உந்தன் இருப்பறியா ஓடையாய்இருந்தேன்
நதியாக என்னைநீ அருளிச் செய்தாய்
நதியான பின்னரும் நடைதானே பழகுகிறேன்
விரைந்தோடி வந்துஉன்னை அடையச்செய்வாய்

இதயத்தின் துடிப்போடு உந்தன்திருநாமம்
லயத்தோடு கதியோடு துடித்திருக்க வேண்டும்
உயிர்த்துடிப்பு நின்றாலும் உள்ளிருக்கும் அன்பு
கள்ளிருக்கும் பூப்போலக் கனிந்திருக்க வேண்டும்

உனையன்றி வேறென்ன வேண்டும் அம்மா
எனக்குன் அன்பன்றி வேறென்ன வேண்டும்?
கனவினிலும் நினைவினிலும் உந்தன்மலரடியில்
என்றென்றும் அடைக்கலமாய் நானிருக்க வேண்டும்

உன்னைச் சேரவழி காட்ட வேண்டும் - அம்மா
உன்னைச் சேரும்வழி காட்ட வேண்டும்


--கவிநயா