Monday, November 25, 2019

எழில் முகம்



சித்தெமெல்லாம் உந்தன் முத்தெழில் முகமடி
சுற்றும் எந்தன் மனம் நித்தம் உன் திருவடி
(சித்தமெல்லாம்)

கடைவிழியின் திசை என் திசையாகாதோ
எனை விரட்டும் விதி எதிர்திசை ஓடாதோ
சிறுஇதழ் நெளிவினிலே துயரங்கள் தீராதோ
கருவிழியின் பொழிவில் மனம்தினம் நனையாதோ
(சித்தமெல்லாம்)

சடையணிந்த சிவனின் இடம் அமர்ந்த தாயே
இடம் தந்த பதியால் இடை மெலிந்தாய் நீயே
படம் எடுக்கும் நாகம் குடை பிடிக்கும் தாயே
எனைப் பிடித்த துன்ப வினை கெடுக்க வாயேன்
(சித்தமெல்லாம்)



--கவிநயா

Monday, November 18, 2019

வரம்


பலமுறை முகம் பார்த்தேன்
சிலமுறை வரம் கேட்டேன்
பதிலேதும் தாராமல் தாயே
இருப்பது ஏனோ சொல்வாய் நீயே

தவறெதும் செய்தேனோ
தாயுனை வைதேனோ
தவறுகள் மறப்பாயே தாயே
தருணத்தில் காப்பாயே நீயே

உன்மடி விழ வேண்டும்
ஒருகுரல் அழ வேண்டும்
விதியின் கைப்பாவை ஆனேன் தாயே, உன்னை
கதியெனக் கொண்டேன் காப்பாய் நீயே

ஒவ்வொரு நொடியும் 
உன் நினைவே எனை ஆள
உன் திருப்பெயரெந்தன் 
நாவினில் நடமாட
ஒருவரம் தருவாயே தாயே, அதில்
தினம் திளைத்திருப்பேன் உந்தன் சேயே


--கவிநயா

Tuesday, November 12, 2019

கடைப்பார்வை



அம்மா உன் கடைப்பார்வை கிடைத்தாலே அது போதும்
அம்மா உன் நினைவாலே உயிர் வாழ்கிறேன்
சிவனோடு எழிலான சிவையாகத் திகழ்பவளே
அதற்காகத் தானே நான் தினம் ஏங்கினேன்
(அம்மா)

பல ஊரில் பல கோவில் பல நாமம் கொண்டவளே
மனக் கோவில் குடியிருக்க வருவாயம்மா
தேவாதி தேவருக்கும் அருள் செய்ய வடிவெடுத்தாய்
உன் பேதைப் பெண்ணுக்கும் அருள்வாயம்மா
(அம்மா)

கரத்தாலே விடம் நிறுத்திக் கணவனையே காத்தவளே
எனைக் காக்க என்றைக்கு வருவாயம்மா?
கணபதிக்கு உயிர் தந்தாய் கந்தனுக்கு வேல் தந்தாய்
எனக்கென்ன தருவாயோ சொல்வாயம்மா
(அம்மா)


--கவிநயா

Tuesday, November 5, 2019

தாயே


உயிருக்குள் உணர்வான தாயே, என்
கவிதைக்குள் கருவாகி வருவாயே நீயே
அம்மா என் றழைத்தேனே தாயே, ஆனாலும்
பதிலேதும் தாராமல் இருப்பதேன் நீயே?
(உயிருக்குள்)

துன்பங்கள் மலை போல வளரும்
உன்னை என் கண்ணினின்றும் காணாமல் மறைக்கும்
கண்ணீரும் தானாக வழியும்
அது எழுகடலின் தண்ணீரைத் தான் விஞ்சி நிற்கும்
(உயிருக்குள்)

துன்பங்கள் எத்தனை வரினும்
உன்னருள் இருந்தால் ஓர் நொடியில் தூசாகும்
கண்ணோடு மணியான தாயே
உன் பின்னோடு நான்வர அருள்வாயே நீயே
(உயிருக்குள்)


--கவிநயா