Monday, December 30, 2019

மனசே, நில்லு!


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! 
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!


மனசே நீ ஓரிடத்தில் நில்லு, என்
அம்மாவின் பேரை மட்டும் சொல்லு
(மனசே)

நாளும் அவள் நினைவை நெஞ்சுக்குள்ளே போற்றி வை
கோல எழில் முகத்தைத் தீபமாய் ஏற்றி வை
(மனசே)

கலக்கம் தேவையில்லை, கவலைகள் தேவையில்லை
சரணென்று பணிந்து விட்டால், அவள் வருவாளே துணை
(மனசே)

தினமும் அழைத்திருந்தால். ஒரு நாள் அவள் வருவாள்
பழவினைகளை எல்லாம் ஒருநொடியில் களைவாள்
அன்னையென்று பெயரெடுத்த பேரரசி அவளல்லவோ?
பிள்ளையென்று பிரியமுடன் பேணுகின்ற சிவையல்லவோ?
(மனசே)

--கவிநயா

Monday, December 23, 2019

அனைத்து சக்தியும் நீயே!


அன்னை சக்தி நீ! அன்பு சக்தி நீ! ஆதி சக்தி நீயே!
அகிலம் யாவையும் ஆட்டி வைக்கின்ற மாய சக்தி நீயே!

கல்விக்கதிபதி! செல்வத் திருமகள்! வீரத் தலைவி நீயே!
மூன்று வடிவாக வந்து அருளுகின்ற தேவி சக்தி நீயே!

படைக்கும் சக்தி நீ! காக்கும் சக்தி நீ! அழிக்கும் சக்தி நீயே!
அருளும் சக்தி நீ! மறைக்கும் சக்தி! ஐந்து சக்தி நீயே!

பிரம்ம மூர்த்தி நீ! விஷ்ணு மூர்த்தி நீ! ருத்ர மூர்த்தி நீயே!
உலகம் இயங்கிட மூன்று மூர்த்தியர் செய்த சக்தி நீயே!

காந்த சக்தி நீ! காளி சக்தி நீ! கால சக்தி நீயே!
வேத சக்தி நீ! நாத சக்தி நீ! மகா சக்தி நீயே!

பூமி சக்தி நீ! வருண சக்தி நீ! அக்னி சக்தி நீயே!
வாயு சக்தி நீ! வெளியின் சக்தி நீ! ஐம்பூத சக்தி நீயே!

மாய சக்தி நீயே! தேவி சக்தி நீயே! ஐந்து சக்தி நீயே!
மும்மூர்த்தி சக்தி நீயே! ஐம்பூத சக்தி நீயே! மகா சக்தி நீயே!



--கவிநயா

Tuesday, December 17, 2019

அழகு முகம்



நிலவு முகம் காண்பதற்கு விழிகள் ஏங்குதே, அதனை
நினைந்து நினைந்து செந்தமிழில் சிந்து பாடுதே
(நிலவு)

அம்மா உந்தன் அழகு முகம், கண்டால் உள்ளம் அமைதி பெறும்
என்பால் உந்தன் விழியிரண்டைச் செலுத்திடுவாயோ, உந்தன்
கண்ணால் எந்தன் கவலைகளைக் கரைத்திடுவாயோ?
(நிலவு)


அகிலம் ஆளும் மகாராணி, ஆனால் எந்தன் அன்னையும் நீ
அன்னையென்று சொல்வதில்தான் இன்பம் இருக்குது, நானுன்
பிள்ளையென்று நினைக்கையிலே துன்பம் பறக்குது
(நிலவு)


--கவிநயா

Monday, December 9, 2019

நிலவு முகம்



நிலவு முகம் கண்டேன்
நெளியும் முறுவல் கண்டேன்
கடலெனவே விரிந்திருக்கும்
கருணை அதில் கண்டேன்
(நிலவு)

அகிலமெல்லாம் ஆக்கி வைத்த ஆதிசக்தி அவளே
உயிருக்கெல்லாம் உணவளிக்கும் அன்னபூரணி அவளே
தர்மத்தினை நிலைநாட்டும் மகாராணி அவளே
அதர்மத்தை அழித்தொழிக்கும் மாகாளியும் அவளே
(நிலவு)

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற வேத ரூபிணி
கண்ணைப் போல நம்மைக் காக்கும் மீன லோசனி
அண்டியோர்க்கு அஞ்சலென்று அபயம் தருபவள், தன்னை
நம்பியோர்க்கு நன்மையெல்லாம் அள்ளித் தருபவள்
(நிலவு)



--கவிநயா

Monday, December 2, 2019

ஒரு சேதி



நாளும் உனை நினைந்தேன்
பாடல் பல புனைந்தேன்
அம்மா என் குரல் கேளாயோ, கடைக்
கண்ணால் என் திசையில் பாராயோ

கோடானு கோடிப் பிள்ளை
பெற்றெடுத்த என் தாயே
பாடாய்ப் படும் பிள்ளை பாராயோ, உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ

ஆனைமுகன் ஒருபிள்ளை
ஆறுமுகன் ஒருபிள்ளை
நானும் உந்தன் பிள்ளைதானே மறந்தாயோ, உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ

தேவர்களைக் காக்க வந்தாய்
துர்கையாகத் தோற்றம் கொண்டாய்
தேடித் தேடி வாடும் எனைப் பாராயோ, உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ

வாலைக் குமரியளே
வஞ்சி லலிதாம்பிகையே
வண்ணத் தமிழ்ப் பாடல் கேட்டு வாராயோ,உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ



--கவிநயா