மு.கு. : முன்பு ஒரு முறை வாணி ஜெயராம் அவர்கள் ஒரு படத்திற்காக பாடியிருந்த, "பாதி மதி நதி போது மணி சடை" என்று தொடங்கும் திருப்புகழை, நம்ம கண்ணன் முருகனருளில் இட்டிருந்தார். அதைக் கேட்ட போது அதே போல் நம்ம அம்மாவுக்காக எழுதணும்னு ஒரு (அற்ப) ஆசை ஏற்பட்டதன் விளைவு... :)
பாதி மதிமுடி சூடும் இறைவியை
பாடி அனுதினம் பணிவோமே
தேடி அவள்பதம் நாடி தினம்தினம்
கோடி மலர்கொடு தொழுவோமே
சூழும் சுரர்முடி பாதம் தொடஅதில்
காலின் நகங்களும் ஒளிவீச
கூறும் அடியவர் சூடி மகிழ்ந்திட
பாத நறுமலர் அருள்வாயே
சாடும் வினைகெட நாடி தொழுபவர்க்
கோடி உதவிடும் துணைநீயே
வாடும் மனதினில் வாச மலரென
வந்து மலர்ந்திடும் என்தாயே
வேலன் வணங்கிட வேலை அருளிய
வேத முதல்வியைப் பணிவோமே
காலன் கடுகினும் காவல் வருமவள்
கால்க ளேசதம் அறிவோமே
--கவிநயா
சுப்பு தாத்தா காவடி சிந்து மெட்டில் பாடியிருக்கார்... நன்றி தாத்தா!
Monday, January 31, 2011
Monday, January 24, 2011
அம்மா வருவாய்...
அம்மா வருவாய் அல்லல் களைவாய்
அருள் புரிந்தென்னை ஆட்கொள்வாய்
அன்பைத் தருவாய் அகத்தில் நிறைவாய்
அடைக்கலம் தந்தென்னைக் காத்தருள்வாய்
கண்ணீரால் பதம் கழுவுகின்றேனே
கருணை சிறிதும் உனக்கில்லையோ
வென்னீராய் உள்ளம் கொதிக்கின்றதே - அதைக்
குளிரவைக்க மனம் வரவில்லையோ
கல்லோ உன்மனம் நானறியேன் - உன்னைக்
கனிய வைக்கும்வகை யும்அறியேன்
புல்லாம் என்மனம் பண்படுத்தி - அதில்
உன்பதம் ஒன்றே பதிய வைத்தேன்
அனுதினம் உன்பெயர் சொல்லுகின்றேன் - உன்
மலரடியில் சரணடைந்து விட்டேன்
கனிவுடன் என்திசை பார்த்தருள்வாய் - உன்
பிள்ளை என்னை ஏற்றுக் கொள்வாய்
--கவிநயா
சுப்பு தாத்தாவின் இசையில், குரலில்... நன்றி தாத்தா!
Monday, January 17, 2011
சித்தமெல்லாம் நிறைந்தாய்!
சித்தமெல்லாம் நிறைந்தாய் சர்வேஸ்வரி - என்
பித்தும்நீ யேயானாய் புவனேஸ்வரி
விதிஎனும் வலைப் பட்டு மதி இழந்தேன் - உன்னை
கதிஎன்று கொண்ட பின்னே மனம் தெளிந்தேன்
சந்ததமும் உனைப் பணிந்து அகம் மகிழ்ந்தேன் - உன்னை
செந்தமிழால் பாடிப் பாடி உள்ளம் குளிர்ந்தேன்
பத்தும் பறந்து விடும் உன்னை நினைத்தால் - எந்த
பற்றும் அகன்று விடும் உன்னை துதித்தால்
ஒத்துஒரு மனதாய் உன்றன் நாமம் ஜெபித்தால் - பெரும்
சொத்தெனவே நீ கிடைப்பாய் அன்பு வரத்தால்
--கவிநயா
Monday, January 10, 2011
எட்டி உதைத்தாலும்...
Monday, January 3, 2011
கடைவிழியாலே கடைத்தேற்று!
கடைவிழி யாலே கடைத்தேற்று - உன்றன்
எழில்விழி யாலே வழிகாட்டு
குழல்மொழி யாளே மலர்ப்பாதம்
குழைந்து பணிகின்றோம் காப்பாற்று
அண்ட மெல்லாம் பூத்த அருள்சகியே - விடங்
கொண் டவனைக் கொண்ட பசுங்கிளியே
பிறை தனை முடியினில் தரித்தவளே - பிரமன்
சிரம் பறித் தவனை வரித்தவளே
மின்ன லென வினை ஒழியும் உன்னாலே - அதைக்
கண்ட தொண்டர் உளம் மகிழும் தன்னாலே
பின்னும் ஒரு பிறவி உண்டோ உனைத் தொழுதால் - எந்தன்
கண்ணின் மணி அன்னை உந்தன் பதம் பணிந்தால்
--கவிநயா
Subscribe to:
Posts (Atom)