அதன் எளிமை = எங்கள் கிராமத்தை நினைவுபடுத்தும்; உணவகம் கூட இல்லாத ஊர்:)
சின்ன வயசில், அம்மா-க்கு Body Guard போல போவேன்;
அம்மா பொங்கல் வச்சிட்டு வருவாங்க! தங்கச்சி வர மாட்டா; ஒரே படிப்பு:)
சென்னைக்கு மிக அருகில்; மாநகரப் பேருந்துகள் கூட இருக்கு;
செங்குன்றம் (Red Hills) -இல் இருந்து எளிதாகச் சென்று விடலாம்!
அன்னை, பவானி என்ற பேரில் கொலு இருக்கிறாள்!
ரேணுகையும் இவளே!
கண்ணனின் அம்சங்கள் இவளிடம் தென்படுகின்றன; கையில் சங்கு சக்கரங்கள் கூட உண்டு! தீர்த்தமும் தருகிறார்கள்!
கண்ணனைக் கொல்வதாக நினைத்து, பெண்ணைக் கொல்லத் தூக்கி வீசினான் ஒருத்தன்;
அவன் கருத்தைப் பிழைப்பித்துக், கம்சன் வயிற்றில் நெருப்பென்ற நின்ற நெடுமாலே என்பது போல் பறந்தவள் பவானி!
கண்ணன் போல் அவளுக்கு விளையாடக் கொடுத்து வைக்கலியே -ன்னு,
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா
என்று பாரதியும் கண்ணன் பாட்டின் நடுவில் இவளை வியந்தே எழுதினார்;
இவள் எளிய மக்களின் தெய்வம் = கொற்றவை!
கொற்றம் + அவ்வை
அவ்வா -ன்னா தெலுங்கில் கூட, முதுமகள் -ன்னு பொருள்!
எங்கள் வீட்டில், கன்னியாகவே காதலில் இறந்து போன பாலு (எ) பெண்;
"தாயே பூவாடைக்காரி பாலு, இவனுக்குப் பக்கத் துணை இரும்மா"
-ன்னு ஆயா, அம்மா எல்லாரும் வாய் விட்டுச் சொல்லுவாங்க! எனக்கு என்னமோ போல இருக்கும்; எதுக்கு நம்மை மட்டும் குறிப்பாச் சொல்லுறாங்க-ன்னு;
அந்த முது மகளுக்கு, காதோலை-கருகமணி எல்லாம் சூட்டி, புடைவை சுத்தி, பொங்கல் இடுவது, ரொம்ப நாள் வழக்கம்!
எந்த அம்மன் கோயிலில் பொங்கல் இட்டு, மாவிளக்கு வைச்சாலும், அது "பாலு"வை முன்னிட்டே அம்மா இடுவாங்க;
இன்று பாளையத்தில், அர்ச்சகர்கள்/ தல புராணங்கள் -ன்னு வந்து விட்டன:(
ஆனால், எளிமையான ஒரு வளையல் வியாபாரியால் கண்டெடுக்கப்பட்டு அமைந்தவள் இவள்; இன்றும் வளையல்கள் காணிக்கை உண்டு!
* எங்கள் வாழைப்பந்தல் கிராமத்து பச்சையம்மன்,
* படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன்
...பத்தி முன்னமே அம்மன் பாட்டில் எழுதி இருக்கேன்; அதே போல் தான் பெரியபாளையமும்!
பொங்கல் வைக்க அம்மா கூட்டிக்கிட்டுப் போவாங்க!
பானை, விறகு, வறட்டி -ன்னு நாம தான் எடுத்துப் போகணும்; அங்கிட்டு ரொம்ப வசதியில்ல;
அதுவும் திறந்த வெளி; பார்த்துத் தான் நடக்கணும்; பலரும் தங்கிச் சமைத்து விட்டுப் போன நெருப்புக் கங்கெல்லாம் கிடக்கும்!
ஆத்துக்கு அந்தப் பக்கம் சிவன் கோயில் உண்டு; அது இன்னும் வடிவா இருக்கும்!
ஆனா, வடிவில் கொறைச்சலா இருந்தாலும், இவ கோயிலே மனசுக்குப் பிடிச்ச கோயில்! எளியோர் கோயில்!
குலம்-கோத்திரம் புரியாத அர்ச்சனையெல்லாம் எதுவுமில்லாம...
*பொங்கல் வைத்தல்,
*கோழி சுற்றி விடுதல்,
*வேப்பஞ் சேலை
-ன்னு கிராமத்து அன்பை இவ கிட்டத் தான் பாக்க முடியும்!
கடைகள் கூட அதிகம் இருக்காது;
ஆனாலும் அம்மா, நான் துணைக்கு வந்ததற்காக, எனக்குப் பிளாஸ்டிக் ஊதுகோல் (பீப்பி), கமர்கட் எல்லாம் வாங்கித் தருவாங்க:)
அதைப் பேருந்தில் ஊதிக்கிட்டே வந்தா, வீடும் வந்துரும்;
வந்து... இதுக்கெல்லாம் வராம சதா படிச்சிக்கிட்டே இருக்கும் தங்கச்சி முன்னாடி, பீப்பி ஊதி ஊதிக் காட்டுவேன்:))
ஆலயம் என்றால் ஆலயம் - அது தான் பெரிய பாளையம்!
ஆலயம் என்றால் ஆலயம்
அது தான் பெரிய பாளையம்!
காலம் வழங்கும் துன்பத்தையெல்லாம்
கனவாய் மாற்றும் ஆலயம்!
(ஆலயம் என்றால் ஆலயம்)
சாலை வழியே தனியே சென்றால்
தானும் வருவாள் பவானியே!
தாயே சரணம் என்று விழுந்தால்
தன் கை கொடுப்பாள் பவானியே!
காலையில் மஞ்சள் நீரில் முழுகி
காரிகை மார்கள் கூடுகின்றார்
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே
காளியின் பெருமை பாடுகின்றார்
காளி திரிசூலி...
நீலி ஜகன்மாதா...
தேவி பராசக்தி...
ஓங்காரி பவானி...
(ஆலயம் என்றால் ஆலயம்)
தாலியைக் காட்டி வேலியை நினைந்து
தன்னை மறந்தே ஆடுகின்றார்!
தர்மம் என்பதைக் காணாதவர்கள்
சந்நிதி முழுதும் தேடுகின்றார்!
பாளையத்தம்மா இருப்பதை மறந்து
பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்!
பட்டப் பகலில் கண்களை இழந்து
பாதையை மாற்றி ஓடுகின்றார்!
தவறு நடந்தால் பாளையத்தம்மா
சக்தியை அங்கே காட்டுகின்றாள்!
தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லித்
தாயின் பெருமையை நாட்டுகின்றாள்!
(ஆலயம் என்றால் ஆலயம்)
படம்: தேவி தரிசனம்
இயக்குநர்: K.சங்கர்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள்: கண்ணதாசன்\
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி, MSV