Tuesday, April 30, 2019

உன்னை நம்பி...



உலகமெல்லாமும் உனதாட்சி, எந்தன்
உள்ளத்திலே உந்தன் திருக்காட்சி
(உலகமெல்லாம்)

என்னுள்ளம் வாழும் தெய்வம் நீயம்மா, எனக்கு
உனையன்றி வேறு துணை ஏதம்மா
(உலகமெல்லாம்)

துன்பக் கடலினுள்ளே முழுக வைத்தாய், அதில்
துடுப்பென உன் நினைவை நீ கொடுத்தாய்
சூழும் பழ வினைகள் அழித்திடுவாய், இங்கே
வாழ உனதருளை அளித்திடுவாய்
(உலகமெல்லாம்)


--கவிநயா

Monday, April 22, 2019

உன் முகம்



மூன்றாம் பிறை கண்டேன்
அதிலுன்னெழில் நுதல் கண்டேன்
முழுமதி யினைக் கண்டேன்
அதிலுன் திருமுகம் கண்டேன்
(மூன்றாம்)


கனவினிலுன் முகம் கவிதையிலுன் முகம்
நினைவினிலும் உன் முகம் கண்டேன்
நிற்கையிலுன் முகம் நடக்கையிலுன் முகம்
கிடக்கையிலும் உன் முகம் கண்டேன்
(மூன்றாம்)

என்னுள்ளம் சூழும் இருள் கண்டேன்
இருள் நடுவினில் திரு முகம் கண்டேன்
திருமுகத்தில் அருள் ஒளி கண்டேன்
ஒளியினில் இருள் விலகிடக் கண்டேன்
(மூன்றாம்)



--கவிநயா

Tuesday, April 16, 2019

அன்பே வடிவானவள்


அன்பே வடிவானவள்
அருளைப் பொழியும் கருணை முகிலானவள்
(அன்பே)

கலைமகள் அவளே அலைமகள் அவளே
மலைமகளும் அவளே அன்னை உமையவளே
(அன்பே)

சிவத்தை அசைக்கும் திறன் கொண்டவள் அவளே
பவத்தை யழித்து நலம் நல்குவள் அவளே
சுகத்திலும் துக்கத்திலும் இருப்பவள் அவளே
அகத்தினில் கொலுவிருக்கும் அன்னை உமையவளே
(அன்பே)


--கவிநயா

Monday, April 8, 2019

நீயே என் தெய்வம்



உன்னையல்லால் ஒரு தெய்வம் உலகில் இல்லை
உன்னையன்றி வேறு நினைவு மனதில் இல்லை
(உன்னையல்லால்)

அண்டங்கள் ஈரேழும் படைத்தவளே
அன்னையென அரவணைத்துக் காப்பவளே
(உன்னையல்லால்)

உந்தன் திருநாமம் உச்சரித்தால் போதும்
பலபிறவியும் என்னை விட்டொழித்தே ஏகும்
உந்தன் பெயர் எந்தன் சிந்தையிலே வாழும்
அன்னையுன் ஒரு நோக்கில் துன்பமெல்லாம் தீரும்
(உன்னையல்லால்)


--கவிநயா

Tuesday, April 2, 2019

அழகின் வடிவம்



எழிருவே என் தாயே, கருணை
பொழி அமுதம் என்றும் நீயே
(எழிலுருவே)

சிரசினில் மணிமுடி ஒளிர்ந்திருக்க, அதன்
ஒளியினில் பிறை நுதல் மகிழ்ந்திருக்க
உச்சியில் சிந்தூரம் திகழ்ந்திருக்க, இரு
மச்ச விழி கருணை பொழிந்திருக்க
(எழிருவே)

சிறு இதழ் நெளிவினில் குறு நகை தவழ
கரு நிறக் கண்டன் மனம் அதைக் கண்டு மகிழ
பளிங்கெனும் கன்னங்களில் அவன் முகம் ஒளிர
பொலிந்திடும் நிலவென உன் முகம் மிளிர
(எழிருவே)


--கவிநயா