Monday, November 23, 2020

கதி நீயே


 

மதி முக எழிலே

பதி சிவன் துணையே

கதி என வந்தேன் பாரம்மா

என் கதை என்ன இங்கு கூறம்மா

(மதி)

 

வருவதும் போவதும்

அறிந்தவள் நீயே

திரை மறைவினில் இருந்து வா அம்மா

விரைவினில் உனதருள் தா அம்மா

(மதி)

 

பிறப்பிலும் இறப்பிலும்

எந்நிலை இருப்பிலும்

உன் நினைவொன்றே தா அம்மா

உன் நாமம் செந்தேனம்மா

 

முதலிலும் முடிவிலும்

அதனிடை நடுவிலும்

நிலைத்திருப்பவளே நீ அம்மா

எங்கும் நிறைந்திருப்பவளும் நீ அம்மா

(மதி)


--கவிநயா


Monday, November 16, 2020

சிவகாமினி

 

சிவகாமினி தில்லை சிவகாமி நீ

திருக்கடவூரில் அருள் அபிராமி நீ

(சிவகாமினி)

 

ஜகன் மோகினி இந்த ஜகத் காரணி

ஜகமேழும் ஆளுகின்ற எழில் ராணி நீ

(சிவகாமினி)

 

நாயகி நான்முகி நாராயணி நீ

நலங்கள் எல்லாம் தரும் தேவீ

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி

பாசாங்குசை கல்யாணீ

 

வேதங்கள் யாவிலும் விளங்கிடும் வேணீ

நாத வடிவான தேவீ

மாலினி சூலினி மங்கல நாயகி

மாதங்கி மீனாக்ஷி

(சிவகாமினி)


--கவிநயா


Monday, November 9, 2020

எங்கும் நீ! எதிலும் நீ!

 

எங்கும் உன்றன் எழில் கண்டேன்

எதிலும் உன்மதி முகம் கண்டேன்

பண்ணில், பரதத்தில், பற்பல கலைகளில்

உன் கைவண்ணம் தான் கண்டேன்

(எங்கும்)

 

மண்ணில் பூத்த மலர்களின் அழகில்

உன்றன் மஞ்சள் முகம் கண்டேன்

விண்ணில் ஒளிரும் கதிரவன் ஒளியில்

உன்றன் விழியின் ஒளி கண்டேன்

 

மேகம் மாற்றும் உடை கண்டேன், அதிலே

உன்றன் நிறம் கண்டேன்

தாகம் தீர்க்கும் மழை கண்டேன், அதிலே

உன்றன் அருள் கண்டேன்

(எங்கும்)

 

இயற்கை யெல்லாம் உன் வடிவே

இயங்குவ தெல்லாம் உன் செயலே

மருளும் மயக்கமும் உன் வயமே

தெளிந்தால் அனைத்தும் சின் மயமே

(எங்கும்)



--கவிநயா



Monday, November 2, 2020

கண்மணி வருக

 

கண்மணி உமையே

            கண்ணெதிர் வருக

கவின்மிகு சிவையே

            கருத்தினில் ஒளிர்க

(கண்மணி)

 

 

ஒரு முறை பார்க்க

            ஒரு வரம் கேட்க

சிறு இதழ் நெளிவினில்

            குறு நகை கோக்க

இவள் என் மகளென

            அன்புடன் நோக்க

இனி நான் துணையென

            இன்பத்தை வார்க்க

(கண்மணி)

 

 

பழ வினை நீக்க

            வரு வினை போக்க

கலி பயம் தீர்க்க

            களி நகை பூக்க

இவள் என் மகளென

            அன்புடன் நோக்க

இனி நான் துணையென

            இன்பத்தை வார்க்க

(கண்மணி)



--கவிநயா