Monday, May 25, 2020

நான்


நான் என்னும் அகங்காரம்

இல்லாமல் செய்திடுவாய்

நான் தொலைந்து நீ வரவே

தாயே நீ அருள் புரிவாய்

 

நான் என்னும் பேயாடும்

என் மனமாம் இடுகாடு

நீயாடும் பூவனமாய்

ஆகிடவே அருள் புரிவாய்

 

காசியிலே காதினிலே

ஓதுபவன் பத்தினியே

காசினியைக் காப்பவளே

கண் திறந்து பாரம்மா

 

ஊர் சுற்றும் என்றன் உள்ளம்

உன்னிடத்தில் நிலை பெறவே

உன் பாதம் சரணடைந்தேன்

உமையவளே கா அம்மா



--கவிநயா

Monday, May 18, 2020

வந்து விடு


வந்து விடு தாயே

(அருள்) தந்து விடு நீயே

உன்னையே அழைக்கின்றேன்

உளமாரத் துதிக்கின்றேன்

(வந்து)

 

ஆயிர மாயிரமாய் எண்ணங்கள் ஓடி வரும்

ஆயினும் என் மனமோ உன்னையே தேடி வரும்

செந்தமிழ்ப் பண்ணெடுத்து உன்புகழ் பாடி வரும்

சொந்தம் நீயே என்று உன்நிழல் நாடி வரும்

(வந்து)

 

கண்மணி உன் நினைவே கருத்தினில் சுமந்திடவும்

பொன்னெழில் பூம்பாதம் தினந்தினம் பணிந்திடவும்

உன்னை எண்ணும் போதிலெல்லாம் இருவிழி வழிந்திடவும்

உனையன்றி உண்மை இல்லை என்றுள்ளம் உணர்ந்திடவும்

(வந்து)


--கவிநயா

Tuesday, May 12, 2020

அரவணைக்கும் அன்னை


ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்

அன்னை அன்னை அன்னை என்று அன்னை உன்னை எண்ணியே
அன்னை அன்னை அன்னை என்று உன்றன் நாமம் சொல்லியே
அன்னை அன்னை அன்னை உன்னை எண்ணி என்றும் வாழவே
அன்னை அன்னை அன்னை நீயும் அருள் கொடுக்க வேணுமே
(ஓம்)

கோடிக் கோடிக் கோடிக் கோடிப் பிள்ளை பெற்ற அன்னையே
கோடிக் கோடிக் கோடிக் கோடிப் பிள்ளையுள்ளே கோடியாய்
நாடி நாடி உன்னை நாடி வாழுகின்ற போதிலே
கோடிப் பார்வையாலே நீயும் அருள் கொடுக்க வேணுமே

(ஓம்)

பூமி தன்னில் பிறக்கும் முன்னே செய்த வினைகள் எத்தனை
பிறப் பெடுத்த பின்னே இன்னும் செய்யும் வினைகள் எத்தனை
அறிந்து செய்த வினையுமறி யாமல் செய்த வினைகளும்
வெந்து தீய்ந்து தீர்ந்து போக அருள் கொடுக்க வேணுமே

(ஓம்)
கோடிக் கோடி அண்டம் ஆளும் ராணியான போதிலும்
ஐந் தெழுத்து நம சிவத்தின் பாதியான போதிலும்
ஐந் தொழில்கள் யாவும் செய்யும் தலைவி யான போதிலும்
அண்டி உன்னை வந்தவர்க்கு அரவணைக்கும் அன்னையே
(ஓம்)

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்



--கவிநயா


Monday, May 4, 2020

நீதான் துணை



உன் பாதம் போற்றுகின்றேன் உமையவளே
உனையன்றி இனியெனக்குத் துணையெவரே?
(உன்)

பனி மலையில் இருக்கும் பார்வதியே
பனியெனத் துயர் விலக்கும் பகலவன் நீயே
(உன்)

இடத்தினில் இருக்கும் உமையவளே
            என் உளத்தினில் வருவாயோ?
கரத்தினில் அபயம் தருபவளே
            கரம் கொடுத் தருள்வாயோ?
சிரத்தினை உன்றன் பதத்தினில் வைத்தேன்,
            பதமலர் தா அம்மா
விரைந்தெனக் கருள இடபத்தில் ஏறி
            சிவனுடன் வா அம்மா
(உன்)


--கவிநயா