Monday, June 28, 2021

எங்கும் அவளே

 

திசையெங்கும் உன் தோற்றம் திரிபுரையே

(தமிழ்) இசை கேட்டு விசையோடு வா உமையே

(திசை)

 

எங்கெங்கும் உனதாட்சி

எதிலுமுன் திருக்காட்சி

மண்டலம் முழுவதிலும்

மங்கை யுன்றன் மாட்சி

(திசை)

 

வெண்கமலத்தில் ஞான ஒளியாக

செங்கமலத்தில் செல்வச் செழிப்பாக

சிம்மத்தின் மீது வீர வடிவாக

முப்பெருந் தேவியரின் உருவாக

 

அண்டமெல்லாம் ஆளும் அரசியவள்

அன்புடன் அரவணைக்கும் அன்னையவள்

ஏதமில்லா எழில் கோல மயில், அவள்

பாதம் பணிவதுவே என்றன் தொழில்

(திசை)

 

 

--கவிநயா


Tuesday, June 22, 2021

அன்னையின் அழகு

 

பாசாங்குசம் ஏந்தி

பஞ்சமலர்க் கணையேந்தி

பூத்த செந்தாமரை போல் விற்றிருப்பாள், அன்னை

கூத்தனுடன் நம்மைக் காத்திருப்பாள்

(பாசாங்குசம்)

 

வட்ட முகம் முழு மதியாம்

பட்டு மலர் அவள் இதழாம்

மொட்டவிழ்ந்த மலர் போல

கொட்டி விடும் அவள் சிரிப்பாம்

(பாசாங்குசம்)

 

இடையினில் கொடி வளைய

நடை அன்னமென இழைய

கடை விழி சிறிதசைய

மடையென அருள் பொழிய

 

குறுநகை தவழ்ந்திருக்க

கருவிழி கனிந்திருக்க

விடையினில் அமுதீசன்

அருகினிலே இருப்பாள்

(பாசாங்குசம்)

 

 

--கவிநயா


Tuesday, June 15, 2021

அடைக்கலம் நீயே

 


பாடலை ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்...


அடைக்கலம் நீயே அம்பிகை தாயே

அழைக்கின்றேன் கடைக்கண் பார்த்திடுவாயே

(அடைக்கலம்)

 

சடுதியில் வருவாய்

கொடுவினை களைவாய்

அஞ்சலென் றருள்வாய்

தஞ்சம் தந்திடுவாய்

(அடைக்கலம்)

 

ஒரு முறை பார்த்தாலும்

உயிருக்குச் சுகமாகும்

மழை கண்ட பயிர் போல

மனம் கண்டு கூத்தாடும்

 

மகிடனின் தலை மீதில்

மலர்ப்பதம் பதித்தவளே

மயங்கிடும் என்னுள்ளம்

மகிழ்ந்திட வர வேண்டும்

(அடைக்கலம்)

 

 

--கவிநயா


Monday, June 7, 2021

மழை போல்...


நானே மெட்டமைத்துப் பாடியிருக்கிறேன். சகிக்க முடிந்தால் கேட்டுப் பாருங்கள்!


மழை போல் கருணை பொழியும் தாயே

நனைந்தின்பம் பெறவும் அருள்வாய் நீயே

(மழை)

 

பழ வினை கழிய, வரு வினை களைய

பத நிழலில் இடம் தருவாய் தாயே

(மழை)

 

உன் நினைவொன்றே உள்ளம் விழைந்திட

உன் பெயரொன்றே நாவினில் தவழ்ந்திட

ஐம்புலனும் உன்னை அறிந்தே பணிந்திட

ஐந்தொழில் அரசி உனை நான் அடைந்திட

(மழை)

 

--கவிநயா


Tuesday, June 1, 2021

வர வேண்டும்

 

கல்லான என் மனதில்

கருணைப் பதம் வைத்து

அம்மா நீ அருள் செய்ய வாராயோ

என் உள்ளே உயிர் உருகத் தாராயோ

(கல்லான)

 

கள் போல உன் நாமம் பருகிக் கிறங்கிடவும்

உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிப் பெருகிடவும்

(கல்லான)


தஞ்சம் என்றுனை அடைந்தேன்

தவறாமல் வர வேண்டும்

தாயே உன் பதமலரைத் தர வேண்டும்

மாயே நீ மறுக்காமல் வர வேண்டும்

(கல்லான)


--கவிநயா