சுப்பு தாத்தா தேன் போலப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!
தேனினிய திருநாமம், செப்புகிறேன்
தினந்தோறும்
மீனனைய விழியாளே, மீனாளே பாராயோ?
உன்நினைவே சுவாசமென, வாழுகிறேன்
தினந்தோறும்
உத்தமியே உமையாளே, உன்மகளைப்
பாராயோ?
பனிமலை மீதினிலே, பரம சிவன்அருகே
பதவிசாய் வீற்றிருக்கும், பார்வதியே
பாராயோ?
கனியிதழ் முறுவலுடன், காசினியைக்
காத்திருக்கும்
காஞ்சிநகர்க் காமாக்ஷி, என்திசையில்
பாராயோ?
சிதம்பர நாதனவன், சிலம்பொலியில்
லயிக்கும்
சிற்றிடையாள் சிவகாமி, சற்று
என்னைப் பாராயோ?
காசிவிஸ்வ நாதனுடன், பக்தர்தமைக்
கடைத்தேற்றும்
கோலஎழில் விசாலாக்ஷி, கொஞ்சமிங்கு
பாராயோ?
ஊருக்கொரு பெயருடனே, உலகெல்லாம்
ஆளுகின்ற
என்தாயே மனமிரங்கி, பிள்ளையினைப்
பாராயோ?
விழிகளில் நீர்வழிய, வேண்டுகிறேன்
உனைநானும்
வேதனைகள் தீர்த்திடவே, விரைந்திங்கு
வாராயோ?
--கவிநயா