Monday, February 25, 2013

தாமரைப் பாதத்தில்...இருமல் விடாது வாட்டிக் கொண்டிருக்கும் போதிலும், அதைப் பொருட்படுத்தாது, சுப்புத் தாத்தா ஆரபி ராகத்தில் அருமையாகப் பாடித் தந்திருக்கிறார். மிக்க நன்றி தாத்தா! அவருக்கு இருமல் விரைவில் குணமாக அருள்வாய் அம்மா! 


தாமரைப் பாதத்தில் தலை வைத்தேன் – சோம 
சேகரன் மனைவியுன்மேல் மனம் பதித்தேன்

(தாமரை)

சாமரம் போல மெல்ல வீசி வந்தாய் – ஒரு
பூமரமாய் மனதில் ஊன்றி நின்றாய்

(தாமரை)

காமனை எரித்தவன் மேல் காதல் கொண்டாய் - அந்த
காமனுக்குக் கருணையினால் உயிரைத் தந்தாய்
பாமரன் என்னையும் பார்த்தருள்வாய் – எழிற்
கோலமர் காமாக்ஷி! காத்தருள்வாய்!

(தாமரை)

--கவிநயா

Monday, February 18, 2013

சொல்லு கிளியே... சொல்லு!சுப்பு தாத்தா ஹிந்தோளம் ராகத்தில் அனுபவித்துப் பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!பச்சை நிறமவள் தந்ததோ
இச்சைக் கிளியே நீ சொல்லு…
செவ்விதழ் முத்தத்தில் சிவந்ததோ
கொவ்வைக் கனிவாய் நீ சொல்லு!

(பச்சை)

பறந்து பறந்து திரியும் போது
பாதை மறந்தையோ,
நீயும் பாதை மறந்தையோ?

தத்தித் தத்தித் தவழ்ந்து வந்து
தோளில் அமர்ந்தையோ,
அவள் தோளில் அமர்ந்தையோ?

(பச்சை)

பாவம் என்று பரிந்து அன்னை
அனுமதித் தாளோ,
உன்னை அனுமதித் தாளோ?

பச்சை வண்ணப் பைங்கிளி யவள்
அரவணைத் தாளோ,
தோளில் அமர வைத்தாளோ?

(பச்சை)

சின்னக் கிளியே வண்ணக் கிளியே
தூது செல்வாயோ,
அன்னைக்கொரு சேதி சொல்வாயோ?

பாதை தேடி அலையும் பிள்ளையைப்
பார்க்கச் சொல்வாயோ,
பாதம் சேர்க்கச் சொல்வாயோ?

(பச்சை)


--கவிநயா

Monday, February 11, 2013

என் புகல்!சுப்பு தாத்தா த்வஜவந்தி ராகத்தில் அருமையாகப் பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!எத்தனையோ நாளாக உன்னை நினைத்தேன் – சிவ
பத்தினியே உன்னைஎன் நெஞ்சில் பதித்தேன்
சித்தமெல்லாம் நிறைந்தென்னை ஆட்கொண்டாயே
நித்தமுன்னை துதித்திடவே அருள் செய்தாயே!

காலமெலாம் காலடியில் கிடந்திட வேண்டும்
கற்பகமே உன்புகழே பேசிட வேண்டும்
கணப்பொழுதும் விலகாமல் நினைந்திட வேண்டும்
கனிவுமிகும் உன்பார்வை என்மேல் வேண்டும்!

அம்மாஎன் றழைத்தாலே அமு தூறுமே
ஆசையுடன் உனைப்பாடத் தமிழ் வாழுமே
நேசமுடன் நினைத்தாலே நிலை மாறுமே – உன்
வாசமலர்ப் பாதம்என் புக லாகுமே!


--கவிநயா

Thursday, February 7, 2013

இசையின் எழிலுருவே!இசையின் எழிலுருவே!

ஏழுசுர இசையின் எழிலுருவே !உமையே!
"வாழி நீ!"என வாழ்த்தி வணங்குகிறோம் உனையே.

சகலகலாவல்லி!சர்வாணி!சிவானி!
சட்ஜம சங்கீத சுக சாகரம் நீ !
ரிசபேசன் ரமணி!ரஞ்சனி!ருத்ராணி!
ரிதனில் ரீங்காரம் செய்திடும் ராகினி!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

கஜமுக ஜனனி!கௌரி!காத்யாயினி!
காந்தார சுரத்தின் கானாம்ருதம் நீ!
மாதங்கி!மதசாலினி!மனோன்மணி!
மத்யமசுரமதன் மங்கலகீதம் நீ!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

பவதாரிணி!பஞ்சபாணி!பவானி!
பஞ்சமம் பொழியும் பண்களின் இனிமை நீ!
தர்மசம்வர்த்தினி! தேவி !தாக்ஷாயினி!
தைவத சுரந்தரும் தேமதுர தொனி நீ!
வாழி நீ!வாழி நீ!வாழி நீ!வாழி நீ!

நிதம் நினைவினில் நிறை நித்ய கல்யாணியே !
நிஷாதம் நல்கிடும் நல்லிசை நாயகியே !
ஏழுசுர இசையின் எழிலுருவே !உமையே!
"வாழி நீ!"என வாழ்த்தி வணங்குகிறோம் உனையே

.http://youtu.be/dw-8fBf0NUEMonday, February 4, 2013

கன்னல் பூவே, செந்தேனே!
இருகரங் கூப்பி இதயத்தின் நன்றியைப் பதகமலம் வைத்தேன்!
பரமனின் இடப்புறம் இருப்பவளே உன்னை இதயத்திலே வைத்தேன்!

அகிலம் எல்லாம் ஆள்பவளே எழு புவனம் ஆளும் ஈஸ்வரியே!
விகிதம் இல்லா அன்பாலே… எனையாளும் பர மேஸ்வரியே!
பகலிலும் இரவிலும் பாதிப் பொழுதிலும் நீயே என்றன் துணையம்மா!
இகத்திலும் பரத்திலும் ஒவ்வொரு இடத்திலும் நீயே என்றன் சுகமம்மா!

அண்டம் யாவும் படைத்தல் முதலாய் ஐந்தொழிலும் நீ செய்வாயே!
பிண்டந் தன்னில் குண்டலியாகச் சுருண்டு கொண்டு துயில்வாயே!
கண்டங் கறுத்த கண்ணுத லானுடன் கைலாயத்தில் உறைவாயே!
கண்டவர் வியந்திட விண்டவர் வணங்கிட கண்ணால் நீயும் அருள்வாயே!

கன்னல் பூவே, செந்தேனே… கவிதை பாடத் தந்தாயே!
மின்னல் கொடியே, செம்பூவே… உன்னைப் பாடத் தந்தாயே!
அமுதம் உன்னை அன்பால் பாட அமிழ்தாம் தமிழைத் தந்தாயே!
குமுதம் உன்னைக் கனிவாய்ப் பாடக் கனியாம் தமிழைத் தந்தாயே!!

--கவிநயா