Monday, October 31, 2011

மதுரை நகர் தேவியே!

இன்றைக்கு திவாகர்ஜியின் நேயர் விருப்பம் :)


மதுரைநகர் தேவியே மண்ணாளும் ராணியே
மனதினிலும் குடிபுகுந்து எமைஆள் மீனாக்ஷியே

(மதுரை)

மோகனமாய்ச் சிரிப்பவளே மோகமெல்லாம் எரிப்பவளே
சோகமெல்லாம் தீர்ப்பவளே சுவர்க்கமென இனிப்பவளே
திக்கெட்டும் ஜெயித்தவளே திகம்பரனை மணந்தவளே
சொற்கட்டின் உட்புகுந்து நற்பொருளாய் திகழ்பவளே

(மதுரை)

கிளிப்பிள்ளை போலநானும் உன்பெயரைச் சொல்லிடணும்
சிறுபிள்ளை போலஉன்னைச் சுற்றிச்சுற்றி வந்திடணும்
விழிக்குள்ளே உன்னைவைத்து வாழ்த்திதினம் போற்றிடணும்
வழித்தொல்லை வாராமல்நீ வாஞ்சையுடன் காத்திடணும்

(மதுரை)


--கவிநயா

Monday, October 24, 2011

பாதம் பணிவோம்!



 சுப்பு தாத்தா அழகுற அமைத்துத் தந்த பாடலை கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா!



ஆதி சக்தியவள்
அழகுப் பாதங்களை
அன்புடனே பணிவோம்

வேத நாயகியை
விஸ்வ ரூபிணியை
விநயமுடன் பணிவோம்

கோதகன்ற வெள்ளை
உள்ளம் உறைகின்ற
உமையவளைப் பணிவோம்

பேதமின்றி எங்கும்
அருளைப் பொழிகின்ற
பொன்மகளைப் பணிவோம்

நாத வடிவான
நங்கை நல்லாளை
நலமுடனே பணிவோம்

ஞான வடிவாக
ஞாலம் காப்பவளை
நேயம்மிகத் தொழுவோம்


--கவிநயா

Thursday, October 20, 2011

விடமாட்டேன்!

                                 விடமாட்டேன்!

                 


                             மலைமன்னன்  கண்மணியே!
                             முக்கண்ணன் பத்தினியே!


                             அலைந்தாடும் மனத்துக்குன்

                              நினைப்பொன்றே நங்கூரம்;

                              புகல்வேண்டும் பக்தர்க்குன்

                              பதமலரே ஆதாரம்.


                            மலைமன்னன் கண்மணியே!
                            முக்கண்ணன் பத்தினியே!
                             
                            குற்றங்கள்  கொஞ்சமில்லை ;
                            பிழைகளுக்கும்  பஞ்சமில்லை;
                            பெற்ற தாயே! உன்முன்னே
                            ஒப்புக்கொள்ள   அச்சமில்லை.


                               மலைமன்னன் கண்மணியே!
                               முக்கண்ணன் பத்தினியே!


                              களங்கமுள்ள நிலவதனைத்            
                              தலையில் தரிப்பவளே  !என்
                              மலம்படிந்த  மனக்கலத்தை
                              துலக்க உதவு  தூயவளே!


                             மலைமன்னன்  கண்மணியே!
                             முக்கண்ணன் பத்தினியே!
                            
                               வற்றா அருட்சுனையே!உன்
                               பொற்றாமரைப் பதங்கள்
                               பற்றினேன்;விடமாட்டேன்,
                              சற்றே மனமிளகும்வரை!


                             மலைமன்னன் கண்மணியே!
                             முக்கண்ணன் பத்தினியே!


                             காலைப்பிடித்த என்னைக்

                             காப்பாற்றிக்  கரைசேர்க்க 

                              காலமின்னுங் கடத்தாமல்

                              கற்பகமே ! கரம்  நீட்டு !


                             மலைமன்னன்  கண்மணியே!
                             முக்கண்ணன் பத்தினியே!
                            


Monday, October 17, 2011

அன்பைத் தருவாய்!

படம்: கைலாஷி அவர்களின் வலையிலிருந்து... மிக்க நன்றி, கைலாஷி!

சுப்பு தாத்தா மோகனம் ராகத்தில் பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


அன்பைத் தருவாய் - அம்மா
அன்பைத் தருவாய் - நெஞ்சில்
அன்பைத் தருவாய் - உன்மேல்
அன்பைத் தருவாய்!

வாயுமைந்தன் நீலவண்ண
ராமன்மேலே வைத்ததுபோல்
வாடாத அன்பை உன்மேல்
வைக்கத் தருவாய்!

காட்டுக்குள்ளே கண்ணப்பர்தம்
சுவாமிமேலே வைத்ததுபோல்
கள்ளமில்லா அன்பை உன்மேல்
வைக்கத் தருவாய்!

ப்ரகலாதன் தந்தை சொல்லை
மீறித்திரு மாலின்மேலே
வைத்ததுபோல் பக்தி உன்மேல்
வைக்கத் தருவாய்!

அவனடியே கதியென்ற
சிவனடியான் மார்க்கண்டேயன்
போலே உன்னைச் சரணடைய
சொல்லித் தருவாய்!

சூடித்தந்த சுடர்க்கொடியாள்
கண்ணன் மேலே வைத்ததுபோல்
கரையில் லாதஅன்பை
உன்மேல் தருவாய்!

ஸ்ரீராம கிருஷ்ணரைப் போல்
அபிராமி பட்டரைப் போல்
அசையாத அன்பை உன்மேல்
அள்ளித் தருவாய்!


--கவிநயா

Monday, October 10, 2011

அவள் அடியே இன்பம்!


அன்னையின் பதமலரை
அன்புடன் பற்றிக் கொள்வாய்
அவள் அடியே இன்பம்
அறிந்து நீ அமைதி கொள்வாய்

அவள் அடி பற்றிக் கொண்டால்
அல்லல்களும் அல்ல லுறும்
சொந்தமென அவளைக் கொண்டால்
சோதனைகள் ஓடி விடும்

அவள் நாமம் சொல்லச் சொல்ல
நெஞ்சம் செந்தா மரையாய் மலரும்
ஆசையுடன் அவள் வந்து
குடியிருக்கும் கோவில் ஆகும்

அவளைச் சரண் அடைந்தால்
அடைக் கலம் தந்திடுவாள்
பிறவிப் பிணி களைவாள்
பேரின்பம் நல்கிடுவாள்


--கவிநயா

Thursday, October 6, 2011

          பராசக்திக்குப் பாமாலை



வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம்.

போரில் அன்னை அசுரர்தன்னை
வென்று கொன்ற  நாளிதே!
பஞ்சபாணி  வெற்றிவாகை 
சூடி நின்ற நாளிதே! 


வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம்.

தீயவற்றைத் தூய்மை   வெல்லும்
என்றுணர்த்தும் நாளிதே!
வஞ்சகத்தை வாய்மை வெல்லும்
என்றுணர்த்தும் நாளிதே!

வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம்.

அன்னை பராசக்திக்கு நாம்
தமிழ்ப்பாமாலை சூட்டுவோம்!
அன்பே உருவான தாயின்
அடிபணிந்து போற்றுவோம் !

வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம

Tuesday, October 4, 2011

நான்முகனின் நாயகி!


சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள்... மிக்க நன்றி தாத்தா!


வெள்ளைஉள்ளத் தாமரையில் வீணையுடன் வீற்றிருப்பாள்
சொல்லும்மொழி யாவையிலும் சுந்தரமாய் கொலுவிருப்பாள்

பள்ளந்தனைத் தேடிவரும் வெள்ளமதைப் போலவளும்
உள்ளம்நிறை அன்பு செய்தால் உவந்துடனே அருள்வாள்

நானிலத்தை ஆக்குகின்ற நான்முகனின் நாயகியாம்
நான்மறைக ளும்வணங்கும் ஞானவடி வானவளாம்
வானவரும் தானவரும் போற்றுகின்ற தேவியளாம்
காணவரும் அடியவரைப் பேணுகின்ற தாயவளாம்


--கவிநயா

அம்பா நவமணிமாலை

அம்பா நவமணிமாலை

 1) வாணீம்  ஜிதசுகவாணீமளிகுல
     வேணீம் பவாம்புதித்ரோணீம் /
    வீணாசுகசிசு பாணீ ம்
   நதகீர்வாணீம் நமாமிசர்வாணீம் //

மறையவளே!கிளியை வெல்லும் மொழியாளே!வண்டன்னக் 
கருங்குழலாளே!பிறவிக்கடல்கடக்கப் படகாவாளே!
வீணைக்கரத்தாளே!கிளியமருந்தோளாளே!வாணியும்   
பணிந்திடும் பூங்கழலாளே! பவானியே!சரணமம்மா!

2) குவலயதளநீலாங்கீம்
    குவலயரக்ஷைகதீக்ஷிதாபாங்கீம் /
    லோசனவிஜிதகுரங்கீம்
    மாதங்கீம் நௌமி சங்கரார்த்தாங்கீம் //

நீலக்கமல மேனியளே!தரணி காக்க 
உறுதிபூண்டொளிரும்   ஓரக்கண்ணாளே!
மானைப்பழிக்கும்  எழில்விழியாளே!
மாதங்கி! சரணம்,சங்கரனின்  பங்கிணியே!

3)கமலாகமலஜகாந்தாகரசாரச
தத்தகாந்தகரகமலாம் /
கரயுகலவித்ருதகமலாம் விமலாம்
கமலாங்கசூட சகலகலாம் //

கமலையும் கலைமகளும் கமலக்கரமேந்தும்  
கமலமன்ன   மென்கரங்களிரண்டிலும்  
கமலமலர்கள்  தாங்குந் தூயவளே!
சசிதரனின்  சகலகலைகளின் வடிவே !

4)சுந்தரஹிமகரவதனாம் குந்தஸுரதனாம்
  முகுந்தநிதிஸதனாம் /
கருணோஜ்ஜீவிதமதனாம் ஸுரகுசலாயா
 சுரேஷு க்ருதகதனாம் //

எழில்மதிமுகத்தாளே!முல்லைப்பூப்பல்லழகி!
அரும்பொருளின் உறைவிடமே!
கருணையால் காமனை உயிர்ப்பித்த உத்தமி!
சுரரைக்காக்க அசுரரை அழித்தவளே!

5) துங்கஸ்தனஜிதகும்பாம்  க்ருதபரிரம்பாம்
    சிவேன குஹடிம்பாம் /
    தாரிதசும்பநிசும்பாம் நர்த்திதரம்பாம்
    புரோ  விகததம்பாம் //

தாய்மைபொங்கும் மார்பினளே!அரனணைக்குமேனியளே!
சேயாய் சிவகுகனை உடையவளே!
சும்பநிசும்பரை நசித்தவளே!ரம்பைநடனம் ரசிப்பவளே!
தன்னலமறியா அன்பில் தாயாய்த்திகழ்பவளே!

6)அருணாதரஜிதபிம்பாம் ஜகதம்பாம்
   கமனவிஜிதகாதம்பாம் /
  பாலிதசுஜனகதம்பாம் ப்ருதுல
  நிதம்பாம் பஜே சஹேரம்பாம் //

கொவ்வைச்செவ்விதழாளே!பாராளும் பேரருளே!
அன்னத்தைவெல்லும் மென்னடையாளே!
தன்னடியார் நன்னலம் காப்பவளே!பூரித்த
பின்னழகி!ஐங்கரனோடருள்பவளே!சரணம்!

7)சரணாகதஜனபரணாம்  கருணா
  வருணாலயாம் நவாவரணாம் /
  மணிமயதிவ்யாபரணாம் சரணாம்
 போஜாதசேவகோத்தரணாம் //

"கதி நீயே!"என்போரைக்காக்குங்  கருணைக்கடலே!
மதிலொன்பது சூழ அமர்ந்து உலகாளும்  மாதரசி!
மணிநிறைப்புனிதஅணி  பூண்டவளே! நின்கமலப்
பதம்பணியுமடியாரை உய்விக்கும் உமையாளே!

8)நதஜனரக்ஷாதீக்ஷாம் தக்ஷாம்
பிரத்யக்ஷதைவதாத்யக்ஷாம் /
வாஹீக்ருதஹர்யக்ஷாம்
க்ஷபிதவிபக்ஷாம் சுரேஷு க்ருதரக்ஷாம்//

தாள்பணிவோர் நலங்காக்கும்   நல்லவளே!வல்லவளே!
காட்சிதரும் தெய்வங்களின் தலைவியாய்த் திகழ்பவளே!
வாகனமாம் சிங்கமேறி வளையவரும் சிங்காரி!
தானவரை வதம்செய்து தேவர்குலங்காத்தவளே!

9)தன்யாம் சுரவரமான்யாம் ஹிமகிரி
கன்யாம் த்ரிலோகமூர்த்தன்யாம் /
விஹ்ருதசுரத்ருமவன்யாம் வேத்மி
வினா த்வாம் ந தேவதாஸ்வன்யாம் //

பொருள்வளமருள்பவளே!சுரருந்தொழுஞ் சிவையே!
கிரியரசன் பொன்மகளே!மூவுலக நாயகியே!
தெய்வீகத்தருக்கள் நிறை  பூம்பொழிலில் நடைபழகும்
தூயவளே!உனையன்றி வேறுதெய்வம் நானறியேன்!

                                பலஸ்ருதி

ஏதாம் நவமணிமாலாம் படந்தி
பக்த்யேஹ யே பராசக்த்யா :/
தேஷாம் வதனே சதனே ந்ருத்யதி
வாணி ரமா ச பரமமுதா //

நவமணிமாலையிதை ஓதி அம்பிகையைப்பணிவோர்
நாவினிலே நான்முகனின் நாயகியாம் நாமகளும்,
இல்லத்திலே செல்வத்தினை அள்ளித்தரும் திருமகளும்
உள்ளமெல்லாம் மகிழ்ந்து   புரிந்திடுவர் களிநடனம்!
                                -------------------------------------------------

பாதய வா பாதாளே ஸ்தாபய வா
சகலபுவனஸாம்ராஜ்யே  /
மாதஸ்தவ பதயுகளம் நாஹம்
முஞ்சாமி நைவ முஞ்சாமி //

அன்னையே!நீ என்னைப் பாதாளத்தில் தள்ளிடினும்,
மன்னவனாய் அகிலத்தையே ஆளும்பதவி தந்திடினும்
என்னிருகை பற்றிவிட்ட உன்னிரு பூம்பாதங்களைப்
பொன்னெனவே போற்றிடுவேன்;ஒருபோதும் விடமாட்டேன்!
 http://www.esnips.com/doc/10cc5139-3aae-4dfb-afe1-43c5d2a18016/navamanimalai-kala