Monday, February 29, 2016

மாங்காட்டில்...

சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடித் தந்தது...மிக்க நன்றி தாத்தா!


மாங்காட்டில் தவம் செய்த தாயே
பூங்காற்றாய் புவி மீதில் வந்தாயே நீயே
(மாங்காட்டில்)

அக்கினியின் நடுவே உக்கிரத் தவம் செய்தாய்

ஊசிமுனைமீதில் ஒற்றை விரலில் நின்றாய்
கடுந்தவம் செய்தாயே கணவனை நீ அடைய
அதிலொரு துளியேனும் செய்வேனோ உனை அடைய
(மாங்காட்டில்)

ஒவ்வொரு நொடியிலும் உன் பெயர் நான் சொல்ல

நெஞ்சமெல்லாம் உனை நிறைத்து நினைந்து நினைந்துருக
தரையிட்ட மீன் போலே உனக்கென நான் துடிக்க
விரைவினில் வந்தருள்வாய் பிள்ளை எந்தன் உள்ளம் களிக்க
(மாங்காட்டில்)


--கவிநயா 

Monday, February 22, 2016

கால்கள் பிடித்தேன் காவாயோ?

அம்பிகை அஷ்டகம் - 8

அபயம் அபயம் என்று வந்தேன்
அம்மா என்றுனை அழைத்து வந்தேன்
சிரமம் என்று பாராமல்
சிரத்தில் பதம்வைத் தருளாயோ?
விதியின் சுழலில் உழன்றிருந்தேன்
கதிநீ என்றுனைச் சரணடைந்தேன்
கால்கள் பிடித்தேன் காவாயோ?
கனமழையாய்க் கருணை பொழியாயோ?


--கவிநயா

(முற்றும்) 

Monday, February 15, 2016

நினைவில் வாழும் என் தேனே...


அம்பிகை அஷ்டகம் - 7
பாவம், பிழைகள் மறந்தேனே

பகலும் இரவும் மறந்தேனே

ஊரும் உறவும் மறந்தேனே

உலகைக் கூட மறந்தேனே

தேனே உன்னை மட்டும்தான்

எந்தன் நினைவில் சுமந்தேனே

நாவில் உந்தன் நாமத்தை

நட்டு வைத்தே திளைத்தேனே

--கவிநயா

(தொடரும்) 

Monday, February 8, 2016

என்ன தவம் செய்தனை ?


என்ன தவம் செய்தனை ?




[1]என்ன தவம் செய்தனை  ? வெண்ணிலவே !
    அன்னை தன் சென்னியில்  மலரென அணிந்திட
    என்ன தவம் செய்தனை ?
பாராளும் பேரழகி கார்குழலில் அமரும்
பேறுதனைப் பெற்றே பெருமிதமடைந்திட
என்ன தவம் செய்தனை ?




[2] என்ன தவம் செய்தனை  ? அஞ்சுகமே !
     அன்னையின் வேயுறு தோளிலமர்ந்திட
     என்ன தவம் செய்தனை  ?
தேன்மொழித்தேவியின்  மேனியமர்ந்து அவள்
வாணியைச்சுவைத்துப் பயிலும் சுகம்பெற
என்ன தவம் செய்தனை  ?




[3]என்ன தவம் செய்தனை  ?செங்கரும்பே!
     அன்னைப் பூங்கரத்தால் வில்லெனத்தாங்கிட
     என்ன தவம் செய்தனை  ?
மதனை எரித்த ஈசன் இதயந்தனைக் கவர்ந்த
மதங்கன்மகள் மலர்க் கரம் உன்னை ஏந்திட
என்ன தவம் செய்தனை  ?

Monday, February 1, 2016

இன்வழி சொல்லாயோ ?

வழி எல்லாம் நின்னருள்
வழிகின்ற வேளையில் - என்
விழிகளைத் திறவாது றங்குமெனது
வினைகளைக் களையாயோ - பழ
வினைகளைக் களையாயோ ?
மகா மேரு. (நன்றி: கூகிள் )

பந்தகளூடே அந்தகனாய் நான்
கந்தலும் காந்தமாய் கவர்ந்தென்னை அழுத்திட
உந்தன் ஒளி உணரா துறந்குமெனது
அந்தத்தினை அருள்வாயோ ? என்னை
அக்கரை சேர்ப்பாயோ ?

அனந்தம் நீ என அறிந்தோர் சொல்லுவர்.
ஆனந்தம் நீ என தெளிந்தோர் சொல்லுவர்.
இனம்புரியா என் இன்னல்கள்  களைய
இன்றே வருவாயோ ? இறைவி ! எனக்கோர் 
இன்வழி சொல்லாயோ ?