Sunday, April 17, 2022

வழி காட்டு

வழி காட்ட வருவாய்

வந்தருள் தருவாய்

இருள் நீக்கி ஒளி கூட்டி

இன்னருள் புரிவாய்

(வழி)

 

வினைப்பயன் ஊட்டி வைத்தாய்

வெந்து தண லாகின்றேன்

நினைப்பது உன்பதமே

நினையாயோ என் நிலைமை

(வழி)

 

பனித்துளி இவ்வாழ்வு

படித்தவர் சொன்னார்கள்

பாலைவனம் அது எனக்கு

புரியலையோ உனக்கு

 

உன்பதம் பசுஞ்சோலை

உனதருளே நிழலாய்

உன்புகழ் பாடுகின்றேன்

நிதம் அதுவே தொழிலாய்

(வழி)

 

--கவிநயா


 

Thursday, April 14, 2022

அன்னை மீனாட்சி உமையே - 5

இனிய சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் பொங்கிப் பெருகட்டும்!

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

பச்சை நிற மேனியினைப் பாந்தமுடன் பட்டாடை

பதவிசாய்த் தழுவி நிற்க

 

இல்லாத கொடியிடையை ஒய்யார ஒட்டியாணம்

இருப்பதாய்க் காட்ட முயல

 

அன்னையின் நடையழகில் அன்னங்கள் அணிவகுத்து

தமை மறந்து லயித்து நிற்க

 

காலோடு அணைந்திருக்கும் கொலுசிரண்டும் கொஞ்சலுடன்

சிணுங்கிக் கிணுகிணுக்க

 

பஞ்சொத்த பாதங்கள் அஞ்சலெனச் சொல்வது போல்

சிறு மெட்டி முணுமுணுக்க

 

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்


--கவிநயா




 

Monday, April 4, 2022

கேட்கிறதா?


பலவிதமாய்ப் பாடுகிறேன் தாயே, உன்றன்

புகழை சந்தத் தமிழினிலே நானே

(பல)

 

அடியவர்கள் கூட்டம் என்றும் அதைக் கேட்கும்

அடியவளின் கூவும் குரல் கேட்காதோ உனக்கும்

(பல)

 

பற்று வைத்தேன் தாயே, அதைத் திருப்பிடு உன்மேலே

பந்தம் கொண்டேன் தாயே, உன்னைச் சொந்தமாக்கு நீயே

வினைகளெல்லாம் ஓடிவிடும் சரணமென்றால் தாயே

விதியுமுன்றன் அடிமை கொஞ்சம் மனது வைத்தால் நீயே

(பல)

 

--கவிநயா