Monday, December 26, 2016

அன்னை நீ அருள வேணும்!



கீதாம்மாவின் உருகும் குரலில் மிக்க நன்றி அம்மா!

உன் பாதம் தேடி ஓடி வர வேணும்

அன்னை நீ அருள வேணும்

உன் பெயரை தினமும் நான் ஜெபிக்க வேணும்

அன்னை நீ அருள வேணும்



நாமம் ஜெபிக்கையில் நெஞ்சம் உருகணும்

அன்னை நீ அருள வேணும்

நெஞ்சம் உருகிக் கண்ணில் கண்ணீர் பெருகணும்

அன்னை நீ அருள வேணும்



சுவாசக் காற்றிலுந்தன் நினைவு கலக்கணும்

அன்னை நீ அருள வேணும்

வாசமலராயென் மனதில் மணக்கணும்

அன்னை நீ அருள வேணும்



பேசும் பேச்செல்லாம் நீயாய் இருக்கணும்

அன்னை நீ அருள வேணும்

வீசும் தென்றலாய் என்னைத் தழுவணும்

அன்னை நீ அருள வேணும்



செய்யும் செயலெல்லாம் உனக்காய் ஆகணும்

அன்னை நீ அருள வேணும்

பெய்யும் மழை போலக் கருணை பொழியணும்

அன்னை நீ அருள வேணும்


--கவிநயா 


Monday, December 19, 2016

உன்னனயன்றி வேறெவரை நானறிவேன்?



கீதாம்மாவின் குழையும் குரலில், ரேவதி ராகத்தில்

உன்னனயன்றி வேறெவரை நானறிவேன்? உந்தன்
அன்பையன்றி வேறெதையும் நானறியேன் – அம்மா
(உன்னையன்றி)

உலகில் உள்ள உறவுகள் எல்லாம் உந்தன் வடிவே, என்றும்
ஓருறவாய் இருப்பவள் நீயே உண்மை அதுவே
உன்னை எண்ணி வாழும் போதில் துன்பங்கள் இல்லை, உன்னை
ஒரு நொடியே மறந்த போதும் பெருகுது தொல்லை
(உன்னையன்றி)

கண்ணிரண்டில் கண்ணீர் பூக்கக் காரணமில்லை, எந்தன்
காவலாக நீயிருக்க, குறையொன்றும் இல்லை
உந்தன் பேரைச் சொல்லும் பேறை நீ தந்த வேளை, உன்னைப்
போற்றிப் புகழைப் பாடுவதேதான் தினமெந்தன் வேலை
(உன்னையன்றி)



--கவிநயா



Monday, December 12, 2016

ஆயிரம் கண்ணுடையாள்



கீதாம்மாவின் தேனினிய குரலில், ஷண்முகப்ரியா ராகத்தில்

ஆயிரம் கண்ணுடையாள், எங்கள்

ஆதிசக்தி உமையாள்

ஆயிரமாயிரம் பாயிரம் பாடிட

அன்புமழை பொழிவாள்



பாலை வடிவினளாம் அவள்

வாலைக் குமரியளாம்

சோலை நிழல் போல சோகமெல்லாம் நீக்கி

சொர்க்கம் தருபவளாம்



கோல வடிவினளாம் அவள்

கொஞ்சும் குமரியளாம்

நீலமயிலாக ஈசனடி நாடி

பூசிக்க வந்தவளாம்



சின்னஞ் சிறுமியளாம் எழில்

சேல் விழியாள் அவளாம்

மன்னனுக்கும் மகாராணிக்கும் அருள

மகளென வந்தவளாம்



வீரத் திருமகளாம் அவள்

வெற்றித் தலைமகளாம்

அண்ட சராசரம் அனைத்தும் நடுங்க

அசுரரை அழித்தவளாம்



சிந்தையெல்லாம் அவளே, எழில்

சித்திரப் பூமகளே

விந்தை மிகுந்தவள் எந்தை துணையவள்

ஆதிசக்தி அவளே


--கவிநயா

Monday, December 5, 2016

சிந்தையெல்லாம் உந்தன் திருமுகமே!



கீதாம்மாவின் தேனினிய குரலில், ஹம்ஸானந்தம் ராகத்தில்

சிந்தையெல்லாம் உந்தன் திருமுகமே

வந்தனை செய்து வணங்குதென் மனமே

(சிந்தை)



மந்திரமெல்லாம் உன் திருப் பெயரே

விந்தைகள் செய்யும் உந்தன் திருவருளே

(சிந்தை)



வாடா புது மலராம் வஞ்சியுன் எழில் வதனம்

காடாம் என் மனதில் முழு நிலவாய் ஒளிரும்

மாறா மணம் வீசும் மங்கையுன் திருப்புகழை

ஓயாமல் பாடும் பணியே அருள்வாயே

(சிந்தை)


--கவிநயா