Monday, July 27, 2009

மறவாத வரம் வேண்டும்!


நின்றாலும் உன்நினைவு
நடந்தாலும் உன்நினைவு
நொடிதோறும் உன்நினைவே
வேண்டும் அம்மா

இருந்தாலும் உன்நினைவு
கிடந்தாலும் உன்நினைவு
எப்போதும் உன்நினைவே
வேண்டும் அம்மா

(நின்றாலும்)

இழுத்துவிடும் மூச்சில்
உன்பெயர் ஒலிக்க வேண்டும்
இதயத்தின் துடிப்பில்அது
இசையாகி இனிக்க வேண்டும்

ஓடும் உதிரத்திலே
ஒன்றாகிக் கலக்க வேண்டும்
ஒவ்வொரு அசைவினிலும்
நீஉடன் இருக்க வேண்டும்

(நின்றாலும்)

கண்ணிமையின் ஓரத்திலே
கண்ணீரின் ஈரத்திலே
கற் பகமே உந்தன்
கருணைநான் உணர வேண்டும்

பிறவிகள் எடுத்தாலும்
பிறவாமல் போனாலும்
உன்னை மறவாத வரம்
ஒன்றுமட்டும் எனக்கு வேண்டும்

(நின்றாலும்)


--கவிநயா

Monday, July 20, 2009

எல்லாம் நீயே அம்மா !



அணுவில் அணுவாய் ஒளிந்தாய்
அலையில் நுரையாய் மிதந்தாய்
கருவில் உயிராய் நுழைந்தாய்
காற்றில் இசையாய்க் கலந்தாய்

வானம் ஆனாய் விரிந்தாய்
மேகம் ஆகிப் பொழிந்தாய்
கதிரவன் ஆகி ஜொலித்தாய்
குளிர் நிலவாகிச் சிரித்தாய்

மலரில் தேனாய் நிறைந்தாய்
வண்டாய் அதனை உண்டாய்
பகலாய் இரவாய்ப் பிரிந்தாய்
புவியின் விசையாய்ச் சுழன்றாய்

இன்பம் துன்பம் வைத்தாய்
அதிலுன் நினைவைத் தைத்தாய்
உணர்ச்சியில் உழலச் செய்தாய்
உணர்ந்தபின் தெளிவும் தந்தாய்

மாயையும் ஞானமும் நீயே!
எங்கும் நிறைந்த என் தாயே!
எல்லாம் நீயே அம்மா!
எதிர்வந் தருள்வாய் அம்மா!


--கவிநயா

Tuesday, July 14, 2009

ஓமென் றொலிக்கும் ஔஷதம் நீயே !



ஓமென் றொலிக்கும் ஔஷதம் நீயே
ஆமென் றருளும் அன்னையும் நீயே

வாஎன் றதும்உடன் வருபவள் நீயே
தாஎன் றதும்வரம் தருபவள் நீயே

சத்தியம் காக்கும் உத்தமி நீயே
பக்தரைக் காக்கும் சக்தியும் நீயே

வித்தகர் போற்றும் நித்திலம் நீயே
சித்தரும் போற்றும் சித்திரம் நீயே

கற்றவர் போற்றும் பெட்டகம் நீயே
மற்றவர் போற்றும் மாமணி நீயே

கற்பனைக் கெட்டா கற்பகம் நீயே
பொற்பதம் பற்ற புகல்தரு வாயே!


--கவிநயா

Monday, July 6, 2009

ஓம் சக்தி! ஓம் சக்தி! எங்கும் நிறைந்தாய் ஓம் சக்தி!

(ஒரு மாறுதலுக்காக... உங்க மேல இரக்கப்பட்டு, இந்த முறை சொந்த பாடல் இடவில்லை :)

பாடல் / நடனத்தை கண்டு களியுங்கள். பாடலை தட்டச்சி தர நேரம் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.





ஓம் சக்தி! ஓம் சக்தி! எல்லாம் அவளே ஓம் சக்தி!