Friday, January 30, 2015

காமாக்ஷி!கடாக்ஷி !



காமாக்ஷி!கடாக்ஷி !


மோதகப் பொன்மணியுண்டதும்  காஞ்சியில்
ஆடகம் பொழிந்த  காமாக்ஷி !
பாதமலர்தனில்  இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!

மதனை எரித்த   அரனை  வரித்து
மதுரையில் மணந்த மீனாக்ஷி ! 
பாதமலர்தனில்  இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!

அன்னபூரணியாய்  அரனுக்கு அன்னமிடும்  
அன்னையே!காசி விசாலாக்ஷி !
பாதமலர்தனில்  இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!


காயாரோஹணருடன்  நாகையிலருளும் 
நாயகியே !நீலாயதாக்ஷி !
பாதமலர்தனில்  இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!


நன்றி :அமரர் கணபதியின் ,"காமாக்ஷி !கடாக்ஷி !"


Monday, January 26, 2015

பக்தி வரம் தா!

சுப்பு தாத்தா ஹிந்துஸ்தானி இசையை அடிப்படையாய்க் கொண்டு அழகாகப் பாடித் தந்தது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


பதகமலம் பணிந்து விட்டேன் பக்திவரம் தாராய்;
பாரபட்சம் இல்லாமல் பிள்ளை முகம் பாராய்!
காரிருளில் கலங்குகின்றேன் கைவிளக்காய் வாராய்;
கன்னல் மொழிக் காரிகையே கவலைகளைத் தீராய்!

சிறுமதியேன் ஆனாலும் உன் பிள்ளை நானே;
பெரும்பிழையே செய்தாலும் பொறுக்க வேண்டும் நீயே!
கருவிழியில் கருணைக் கடல் தேக்கி வைத்த தாயே;
ஒரு பார்வை பார்த்தாலும் பிழைத்திடுவேன் நானே!

பரு உடலைச் சுமந்துலகில் வாழும் போதும் தாயே,
கருவெனவே உன் நினைவைச் சுமந்திருப்பேன் நானே!
கரும்பினிய தமிழாலே பாடி வந்தேன் தாயே;
செவி கொடுத்துக் கேட்டு என்னைச் சேர்த்தணைப்பாய் நீயே!


--கவிநயா 

Monday, January 19, 2015

கருணை மழை பொழிவாய்!

ஹம்ஸத்வனியில் சுப்பு தாத்தா அருமையாகப் பாடியதைக் கேளுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



கருணை மழை பொழிவாய்
தருணம் இதே, அருள்வாய் - அம்மா
(கருணை)

வறண்ட நிலம் மீதில் வான்பொழி மழை போல
வாடும் பயிருக்கு மேகந்தரும் கொடை போல
(கருணை)

முன்னை வினையாவும் மூழ்கித் தொலைந்திடவே
எண்ணும் மனமெல்லாம் நீயே இருந்திடவே
பண்ணும் செயலெல்லாம் பணியாய்த் திகழ்ந்திடவே
பகரும் சொல் உந்தன் புகழாய்ச் சிறந்திடவே
(கருணை)

--கவிநயா

Monday, January 12, 2015

என்ன மாயம் செய்தாய் தாயே!


விழியழகைப் பார்க்கையிலே
விதி மறந்து போகிறதே
மதிமுகத்தைப் பார்க்கையிலே
மதி மயங்கிச் சாய்கிறதே!

என்ன மாயம் செய்தாய் தாயே
என்கல்மனம் கரைத்தாய் நீயே
கற்சிலையாய் நிற்கும் போதும்
காந்தமாகி இழுத்தாயே!

இதழ் விரியும் புன்னகையில்
இதயம் மலர்ந்து விரிகிறதே
உதயம் உந்தன் வதனம் என்றே
இதய வானம் மகிழ்கிறதே!

என்ன மாயம் செய்தாய் தாயே
என்கல்மனம் கரைத்தாய் நீயே
கற்சிலையாய் நிற்கும் போதும்
காந்தமாகி இழுத்தாயே!

சிப்பி தந்த முத்து ஒன்று
சிமிழ் மூக்கில் ஒளிர்கிறதே
சித்த மெலாம் உன்னை நினைந்து
பித்த மயக்கம் கொள்கிறதே!

என்ன மாயம் செய்தாய் தாயே
என்கல்மனம் கரைத்தாய் நீயே
கற்சிலையாய் நிற்கும் போதும்
காந்தமாகி இழுத்தாயே!


--கவிநயா
 

Monday, January 5, 2015

நினையாத நாளில்லை...

சுப்பு தாத்தா வாலஜியில் மனம் வருடும்படி பாடித் தந்தது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



நினையாத நாளில்லையே
பதம் பணியாமல் வாழ்வில்லையே
(நினையாத)

பட்டருக்கெனவே பால்நிலவினை அமைத்தாய்
பதிக்கென பெருவிரலில் நின்று பெருந் தவம் புரிந்தாய்
ரதிக்கென அவள் பதியை உயிர்ப்பித்துக் களிப்பித்தாய்
கதியென உனை அடைந்தேன் எனக்கென்ன தந்திடுவாய்?
(நினையாத)

சுகம் எதும் வேண்டுமென்று வேண்டவில்லை உன்னிடத்தில்
பதம் ஒன்றே சுகம் என்று சேர வந்தேன் உன் பதத்தில்
பாலையிலே ஊற்றாக… பாடி வரும் காற்றாக…
ஓடி இங்கு வர வேண்டும், உத்தமியே எனக்காக!
(நினையாத)


--கவிநயா