மனமே உன்னை நானறிவேன் - என்
அன்னையை என்றோ நீ அறிவாய்?
உலகிதன் மாயையில் உழலுகிறாய் - உடன்
என்னையும் இழுத்ததில் உழற்றுகிறாய்
(மனமே)
பாடுகள் பலப்பல பட்ட பின்னும்
சூடுகள் பலபெற்று கெட்டபின்னும்
நாடிடுவா யில்லை அவள் புகலே
பாடிடுவா யில்லை அவள் புகழே
(மனமே)
அவளன்றி உறவில்லை அறிந்து கொள்வாய் - அவள்
பதமன்றி புகலில்லை புரிந்து கொள்வாய்
நிலையற்ற இன்பங்கள் துறந்திடுவாய் - அவள்
நினைவன்றி அனைத்தையும் மறந்திடுவாய்!
(மனமே)
--கவிநயா
Monday, August 29, 2011
Monday, August 22, 2011
எத்தனை பிறவிகள் நானெடுத்தாலும்...
இதோ, சுப்பு தாத்தா அடானா ராகத்தில் மிகப் பொருத்தமாக அமைத்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!
எத்தனை பிறவிகள்
நானெடுத்தாலும்
இத்தரை மீதினில்
பரிதவித்தாலும்
சித்திரமே உன்னை
நினைந்திட வேணும்
நித்தமும் மலரடி
பணிந்திட வேணும்
உச்சி யிலே கங்கை
சூடி யவன் மங்கை
பிச்சி யென பித்தனுடன்
நர்த்தன மிடும் நங்கை
பச்சை நிற மேனி
இச் சகத்தின் ராணி
மச்ச விழி வேணி
மெச்சிட வரு வாய்நீ!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.hindudevotionalblog.com/2011/06/chidambaram-temple-festival-2011-aani.html
Monday, August 15, 2011
என்ன ஆச்சு அம்மா?
சுப்பு தாத்தா அருமையாக புன்னாகவராளி ராகத்தில் பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்... நன்றி தாத்தா!
அம்மா இங்கே வாவா – என
வருந்தி வருந்தி அழைத்தேன்
அன்பு மீற அம்மா நீஎன்
அருகில் வர தவித்தேன்
உனக்கெனவே காத்திருக்கேன் தெரியவில்லையோ? – இல்லை
தெரிந்திருந்தும் இற/ர/ங்கி வர நேரமில்லையோ?
தேவர்களைக் காக்க வேறு யாரும் இல்லையோ? – அந்த
இந்திரனின் தொந்தரவு குறையவில்லையோ?
பரமசிவன் பார்வையிலே உன்னை மறந்தையோ? – இல்லை
பள்ளி கொண்டான் மாயத்திலே உலகை மறந்தையோ?
பழத்திற்கென வந்த சண்டை இன்னும் தொடருதோ? – அந்த
கலவரத்தைத் தீர்ப்பதிலே என்னை மறந்தையோ?
--கவிநயா
Friday, August 12, 2011
ஆடி வெள்ளி: அன்னபூர்ணாஷ்டகம்
ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய அன்னபூர்ணாஷ்டகம் லலிதாம்மாவின் தமிழாக்கத்தில்...
நித்யானந்தகரி வராபயகரி சௌந்தர்ய ரத்னாகரி
நிர்தூதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரி
ப்ராலேயாச்சலவம்சபாவநகரி காஷீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
பேரின்பமளிப்பவளே!அஞ்சேலென்றருள்பவளே!பேரெழில் பொங்குங்கடலே!
தீவினைகள் யாவையும் போக்கியருள் பொழிந்திடும் கண்கண்ட தெய்வத்தாயே!
பனிமலையோன் குலந்தனை புனிதமாக்கியவளே!காசிநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
நானாரத்ன விசித்திர பூஷணகரி ஹெமாம்பராடம்பரி
முக்தாஹார விலம்பமான விலசத்வக்ஷோஜா கும்பாந்தரி
காஷ்மீராகருவாசிதாங்கருசிரே காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பனகரி மாதான்னபூர்ணேஸ்வரி
பலவகை அணிகலன்கள் பூண்டகரத்தாளே!பொன்னாடை தரித்த தாயே!
தாய்மை பொங்கும் மார்பில் முத்துமாலையழகாய் நெளிந்திட மிளிரும் தூயே!
காஷ்மீரதூப மணம் கமழ்ந்திடத் திகழ்பவளே!காசிநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
யோகானந்தகரி ரிபுக்ஷயகரி தர்மேகநிஷ்டாகரி
சந்த்ரார்காநலபாசமானலஹரி த்ரைலோக்யரக்ஷாகரி
சர்வைஸ்வர்யகரி தபஹ்பலஹரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
யோகசுகந்தருபவளே!பகைவரைப்பொடிப்பவளே!நன்னெறியில் நிறுத்துந்தாயே!
மதி,பரிதி,தீயொளிக்கு ஒப்பாய் ஒளிர்பவளே!மூவுலகுங்காக்குந்தேவி!
பொருள்வளம் அருள்பவளே!தவப்பயனைத் தருபவளே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே !அன்னபூரணீ அன்னையே!
கைலாசாச்சல கந்தராலயகரி கெளரி உமா சங்கரி
கௌமாரி நிகமார்த்த கோசரகரி ஓங்கார பீஜாக்ஷரி
மோக்ஷத்வாரகவாடபாடநகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பனகரி மாதான்னபூர்ணேஸ்வரி
கயிலாய மலைக்குகையில் அமர்ந்தருள் பொழிந்திடும் கெளரி,உமா,சங்கரி!
என்றென்றும் குமரியே!மறைபொருளுரைப்பவளே!பிரணவத்தின் உண்மையுருவே!
மோக்ஷத்து வாயிலை திறக்குந்தயாபரி!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
த்ருஷ்யாத்ருஷ்யவிபூதிவாஹநகரி பிரம்மாண்டபாண்டோதரி
லீலாநாடகசூத்ரகேலநகரி விஞ்ஞானதீபாங்குரி
ஸ்ரீவிச்வேசமனஹ் பிரசாதநகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி
மண்ணுலகசுகம் யாவும் மகிழ்ந்தருளும் அன்னையே!பிரம்மாண்டம் தாங்குந்தாயே!
விளையாட்டாய் உலகையே இயக்கிடும் ஈஸ்வரி!விஞ்ஞான தீபச்சுடரே!
மகேசன்மனத்தினை மகிழ்விக்கும் மங்கையே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
ஆதிக்ஷாந்தசமஸ்தவர்ணநகரி சம்போஸ்த்ரிபாவாகரி
காஷ்மீரா த்ருபுரேச்வரி த்ரினயநீ விஷ்வேச்வரீ சர்வரி
ஸ்வர்கத்வாரகவாடபாடநகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி
அனைத்தெழுத்தும் அருளிய அன்னையே!அரனின் முத்தொழிலுக்கு ஆதாரமே!
குங்கும நெற்றியளே !மூவுலக நாயகியே!எங்கும் நிறை முக்கண்ணியே!
சுவர்க்கத்தின் வாயிலை திறக்குந்தயாபரி!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணீ அன்னையே!
உர்வீசர்வஜநேச்வரி ஜயகரி மாதா க்ருபாசாகரி
வேணிநீலசமானகுந்தலதரி நித்யான்னதாநேச்வரி
சாக்ஷான்மோக்ஷகரி சதா சுபகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
உலகாளும் உத்தமியே!வெற்றிதரும் உமையாளே!தாயன்பு தளும்புங்கடலே!
பின்னிய கார்குழலாளே!எந்நேரமும் உணவு அளித்துயிர் காக்குந்தாயே!
முக்தியளிப்பவளே!நலந்தரும் நாயகியே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள்புரிவாயே!அன்னபூரணி அன்னையே!
தேவி சர்வவிசித்ர ரத்னரசிதா தாக்ஷாயணீ சுந்தரி
வாமாச்வாதுபயோதரா ப்ரியகரி சௌபாக்ய மாஹெச்வரி
பக்தாபீஷ்டகரி சதாசுபகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி
அரிய ஆபரணங்கள் அணிந்த என் அன்னையே!தக்ஷன் பெற்ற பேரழகியே!
பரமனில் பாதியே!பேரெழில் ஜோதியே!குணக்குன்றே!குலவிளக்கே!
அடியார்க்கருள்பவளே!நலந்தரும் நாயகியே!காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!
சந்த்ரார்காநலகோடிகோடிசத்ருஷி சந்த்ரான்ஷுபிம்பாதரி
சந்த்ரார்காக்னிசமானகுண்டலதரி சந்த்ரார்கவர்னேஸ்வரி
மாலாபுஸ்தக பாஷசாங்குசதரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
பலகோடி பரிதி,மதி,தீபோல ஒளிர்பவளே!கொவ்வையோ உன்னிதழ்களே?
பானு,மதி போல மின்னும் குண்டலச்செவியாளே!ஈடிணையற்ற எழிலே!
மாலையுடன் புத்தகம்,பாசாங்குசமேந்தி காசிநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!
க்ஷத்ரத்ராணகரி மகாபயகரி மாதா க்ருபாசாகரி
சர்வானந்தகரி சதா சிவகரி விச்வேச்வரி ஸ்ரீதரி
தக்ஷாக்ரந்தகரி நிராமயகரி காசீபுராதீச்வரி
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரி
ஆதரவு அற்றோர்க்கு அடைக்கலம் அளித்திடும் அன்னையே!அன்புக்கடலே!
யாவர்க்குமின்பமீந்து நலங்காக்கும் நாயகியே!வளவாழ்வு அருளுந்தாயே!
தக்ஷன்திமிர் தணித்தவளே! துயர் தீர்க்கும் அருமருந்தே! காசீநகர் மேவுந்தாயே!
பிச்சையளித்தெனக்கு நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!
அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கரப் பிராணவல்லபே
ஞானவைராக்யசித்யர்த்தம் பிக்ஷாந் தேஹி ச பார்வதி
உணவூட்டும் அன்னையே! உமையே!பேருண்மையே!
நஞ்சுண்டான் உள்ளத்துயிரே!
பிச்சையாய் ஞானமும்,பற்றற்றமனமும் தா!
இமவானின் இனிய மகளே!
மாத ச பார்வதிதேவி பிதா தேவோ மகேஸ்வரஹ
பாந்தவா:ஷிவபக்தாஸ்ச ச்வதேஷோ புவனத்ரயம்
மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;
அரனடியாரே எனக்குற்றார்;மூவுலகும் என் தாய்நாடு!
Thursday, August 11, 2011
ஆ.வெ.4: தாமரைப் பூவில் அமர்ந்தவளே!
அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரதத் திருநாள் வாழ்த்துகள்!
பி.சுசீலாம்மா பாடிய பிரபலமான இந்தப் பாடல், உங்களுக்காக...
தாமரைப் பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே
(செந் தாமரைப் பூவில்)
சிந்தையில் நின்றாடும் நாரணன் ச்நெஞ்சினில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே
(செந் தாமரைப் பூவில்)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே
(செந் தாமரைப் பூவில்)
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமேல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே
(தாமரைப் பூவில்)
**
பி.சுசீலாம்மா பாடிய பிரபலமான இந்தப் பாடல், உங்களுக்காக...
தாமரைப் பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே
(செந் தாமரைப் பூவில்)
சிந்தையில் நின்றாடும் நாரணன் ச்நெஞ்சினில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே
(செந் தாமரைப் பூவில்)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே
(செந் தாமரைப் பூவில்)
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமேல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே
(தாமரைப் பூவில்)
**
Monday, August 8, 2011
அலை போல அலைகின்றேன்
அலை போல அலை கின்றேன் அம்மா
அலை போல அலை கின்றேன் அம்மா
கடல் போன்ற வாழ்விதிலே
கரை காணா மலே எங்கும்
அலை போல அலை கின்றேன் அம்மா
(அலை)
சிலை போல ஏன் நின்றாய் அம்மா?
சிலை போல ஏன் நின்றாய் அம்மா?
என் நிலை கண்டும் இரங்காமல்
மலை போல அசையாமல்
சிலை போல ஏன் நின்றாய் அம்மா?
(அலை)
மனக் குகைக்குள் நீயே கதிரென வர வேண்டும்
ஒளிக் குவையே நீயே ஒளியினைத் தர வேண்டும்
மலர்க் கொடியே உன்றன் மடியினில் விழ வேண்டும்
மனக் குறைகள் தீர மனம் விட்டு அழ வேண்டும்
(அலை)
--கவிநயா
Thursday, August 4, 2011
ஆ.வெ.3: ஸ்ரீ மீனாக்ஷி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி 1
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே பொற்றி
ஓம் அரசிளங் குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆல்வாய்க் கரசியே போற்றி 10
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத் தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40
ஓம் கிளியெந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற் கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தாய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி 60
ஓம் தமிழர் குலச் சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடை யம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி யம்மையே போற்றி 70
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80
ஓம் பவள வாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டி மாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன் மயிலம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90
ஓம் மலயத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர் கோன் மகளே போற்றி
ஓம் மீனாக்ஷி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ் மொழி யம்மையே போற்றி
ஓம் வடிவழ கம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி 108
***
Monday, August 1, 2011
காரணம் என்னம்மா?
வானே சதமென்று வான்பார்த்த நிலம்போல
நீயே சதமென்று உனைப்பார்த்து வாழ்கின்றேன்
கருணை முகிலேஎன் கண்ணின் மணிநீயே
வருணன் போலன்பை வருஷித் தருள்வாயே!
அல்லல் படும்உன்றன் பிள்ளையைப் பாராயோ?
மின்னல் பார்வையொன்றை என்திசை வீசாயோ?
அம்மா உன்பிள்ளை தன்வினையால் படும்பாட்டை
சும்மாஒருநொடியில் உன்னால் தீர்த்தலும் ஆகாதோ?
கல்லோ உன்னுள்ளம் எனும்ஐயம் எனக்கில்லை
கனியே உன்னுள்ளம் என்பதை நானறிவேன்
துன்பப் புடம்போட்டு எனைத்தங்கம் ஆக்குதற்கோ,
அம்மா இன்னும்நீ சும்மா இருக்கின்றாய்?
--கவிநயா
Subscribe to:
Posts (Atom)