(மஹிஷாசுர மர்த்தினி விருத்தம்)
சின்மய ரூபிணி ஸ்ரீசக்ர வாசினி சிம்மத்தில் வருபவளே
தண்மலர் போலெந்தன் உள்ளத்தில் குளிர்ந்து துன்பத்தைத் தணிப்பவளே
விண்ணவர் போற்றிட வேதனை தீர்த்திட உதித்திட்ட தேவியளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே
கருவிழி யிரண்டும் கடலெனக் கருணை பொழிந்திட அருள்பவளே
கருநிறக் கண்டன் சிவனுடன் இணைந்தே காத்திட வருபவளே
ஹரஹர வென்றே அடிதொழும் அன்பர்க்கு ஆதரவளிப்பவளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே
ஆனை முகனுடன் அறுமுகன் தன்னையும் தந்திட்ட தாயவளே
ஊனும் உருகிடும் அன்பு நிலை தனைத் தந்திடு தூயவளே
தேனிசை மொழியால் நாயகன் உள்ளத்தைக் கவர்ந்திட்ட தேவியளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே
கல்கல்கல்லெனக் காற்சிலம் பொலித்திடத் திருநடம் புரிபவளே
செல்செல்செல்லெனத் துன்பத்தை விரட்டி இன்பத்தைத் தருபவளே
ஓம்ஓம்ஓமென ஓதிடும் அன்பர்க்கு அபயம் அளிப்பவளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே
அம்மா என்றுனை அழைத்தால் போதும் அக்கணம் வந்திடுவாய்
சும்மா உன் பெயர் சொன்னால் கூட சுகமதைத் தந்திடுவாய்
ஒரு முறை உன்னை நினைத்தாலும் அதைப் பெரிதென் றேற்றிடுவாய்
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்தெமக் கருளிடுவாய்
--கவிநயா