Thursday, November 27, 2008

97. குணா - பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க!

மும்பை இன்னுயிர்கள் அனைத்தும் அமைதி பெற வேண்டிக் கொண்டு, அம்மன் பாட்டு-97 தொடர்வோம்! இந்த இடுகையை நேற்றே இட எண்ணியிருந்தது! ஆனால் மும்பையில் நடைபெற்ற பித்து பிடித்த ஆட்டத்தின் முன், குணா படத்தில் வரும் பித்து ஒன்றுமே இல்லை என்றாகி, இடாமல் இருந்து விட்டேன்! இறந்தவர்கள் மனக்கேதம் தீரும் மோட்ச தீபத்தை மற்ற பதிவுகளில் ஏற்றிவிட்டு, இடுகையை அப்படியே விட்டு விட்டேன்!

என் வங்கியின் சிறு பகுதி ஒன்று மும்பையில் உள்ளது. அதில் ஒருவரை மட்டும் தொடர்பு கொள்ளவே முடியாமல் போக, பலரும் பதபதைப்புக்கு உள்ளாகி விட்டோம்! கடைசியில் Fort Station-இல் இருந்து தப்பித்து, ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவரைத் தொடர்பு கொண்ட பின் தான் நிம்மதியானோம்!
உம்...உலகில் தான் எத்தனை எத்தனை பித்து! பித்தினால் ஆடும் ஆட்டங்கள்! பித்தலாட்டங்கள்!

வெறியில் ஊறிய பித்து, நச்சு ஆகிறது!
அன்பில் ஊறிய பித்து, முத்து ஆகிறது!


பித்தா பிறைசூடி இறைவா பெம்மானே! - பித்தா என்று பாடலைத் துவங்கினார் சுந்தர மூர்த்தி நாயனார்! ஏன்? இறைவன் பித்தனா? எதற்கு அப்படிப் பாடணும்? சொல்லுங்க பார்ப்போம்!
அம்மன் பாட்டு இன்னும் சில நாட்களில் 100ஐத் தொடும் நல்வேளையில், சில நல்ல பாடல்கள் உங்களிடையே உலா வரப் போகின்றன! இன்று குணா படத்தில் இருந்து ஒரு அற்புதமான "பித்துப்" பாடல்!

இசைஞானி இளையராஜாவின் அருமையான பின்னணி இசையில், பாவனி என்னும் காணக்கிடைக்காத ராகத்தில், யேசுதாஸ் பாடுகிறார்!
அம்பாளின் அலங்கார வர்ணனையாக, அபிராமி அந்தாதி பாடல்கள், திரை இசையுடன் இணைகிறது!




*** பாடலின் துவக்கத்தில் வரும் காட்சிகளையும் கொடுத்துள்ளேன்! தன்னைச் சிவன் என்று கருதிக் கொள்ளும் "பித்தன்" குணா! அபிராமி என்ற அம்பாளின் உருவத்தை எப்படித் தன் நெஞ்சில் இறக்கிக் கொள்கிறான் என்பதற்கு, அந்த ஜனகராஜ்-கமல் வசனக் காட்சி மிகவும் முக்கியம்! பாடலின் முடிவில் சிவதாண்டவக் காட்சியும் வரும்! இந்த வீடியோவில் இல்லை! யாரிடமேனும் இருந்தால் சொல்லுங்கள்!

*** பாடலின் ராகம் = பாவனி
ஏங்கி ஏங்கித் தேடும் மூடில் பாடும் ராகம்! பல இசைக் கலைஞர்கள் கூட இந்த ராகத்தை அதிகம் பாடியது கிடையாது! இதில் ஏதாச்சும் கீர்த்தனை இருக்கா-ன்னு கூடத் தெரியாது! அதை இளையராஜா வெளிக் கொணர்ந்துள்ளார். அதுவும் சரணம், சரணம் என்று வரும் கட்டத்தில், ராகம் அப்படியே ஜிவ்வுனு உடம்புக்குள் ஏறும்!

எம்.எஸ்.வி, ரஹ்மான் என்று மற்ற சிறந்த இசையமைப்பாளர்கள் கூட, அழகான ராகங்களைத் தந்துள்ளார்கள்! ஆனால் இது போன்ற Mystic Search செய்து, ராகங்களுக்கு சினிமாவில் Vintage Look கொடுத்த பெருமை இளையராஜாவையே சேரும்! (இப்படிச் சொல்வதால் இதையும் சொல்லி விடுகிறேன்: "பதிவர் ஜிரா-என்னை மன்னிக்கவும்" :))

ராஜாவின் ராசியோ என்னமோ, அவர் தரும் வின்டேஜ் ராகங்கள், பாடலின் காட்சியமைப்பிலும் ஒன்றி விடுவதால், ஆழமாகப் பதிந்து விடுகிறது! (எம்.எஸ்.வி தந்த பாலமுரளியின் மஹதி ராகத்துக்கு, பாடல் காட்சிகள் எல்லாம் அப்படி அமையவில்லை என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்)

*** தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பாட்டின் ராகம், கிட்டத்தட்ட இதற்கு க்ளோசாக வருகிறது! தியாகராஜ கீர்த்தனை - இந்த ராகமும் சற்று க்ளோஸ் தான்! (கொத்ஸ், ஜீவா - சரி தானே?)
தியாகராஜர் கூடவா பாவனியில் ஒன்றும் எழுதவில்லை? ஹூம்! ஆச்சரியம் தான்!


நாயகி நான்முகி நாராயணி கை-நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம்
(அரண் நமக்கே)
சரணம் சரணம் சரணம்!
சரணம் சரணம் சரணம்!!

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே!
மதி வருக, வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே!

(பார்த்தவிழி)

இடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி, இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
படம்கொண்ட அல்குல் பனி மொழி, வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!

(பார்த்தவிழி)



இப்போ பொருளுக்கு வருவோம்!
நாயகி நான்முகி நாராயணி = உலகத் தலைவி, நான்முகச் சக்தியின் ரூபமே, நாரணச் சக்தியின் ரூபமே!

கை-நளின பஞ்ச சாயகி = உன் நளினமான கைகளில், ஐந்து மலர் அம்புகள்! (விரல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த என்ற திருப்புகழை நினைவு கூருங்கள்)
கரும்பு வில்லுடன் மொத்தம் ஐந்து மலர்க் கணைகள்! தாமரைக் கணை, மாம்பழ மலர்க் கணை, அசோக மலர்க் கணை, முல்லைக் கணை, நீலோற்பல மலர்க் கணை!

சாம்பவி சங்கரி சாமளை = சிவச்சக்தியே (சாம்பு), இன்பம் தரும் சங்கரி, கரும்பச்சைக் கருப்பி (சியாமளை)

சாதி நச்சு வாயகி = கொடும் விஷத்தை வாயில் கொண்ட பாம்பை அணிந்தவளே!

மாலினி வாராகி சூலினி மாதங்கி = மாலைகள் சூடும் மாலினி, உலகம் காக்கும் நாரண-வராகச் சக்தீ, சூலம் ஏந்திய சூலினி, மதங்க முனிவரின் மகளான மாதங்கி!

என்று ஆய கியாதி உடையாள் சரணம் (அரண் நமக்கே) = இப்படி பல புகழ் உடையவளே, சரணம் உன் சரணத்துக்கே!
ஆய கியாதி = பல புகழ்!
ஆயகி்+ஆதி உடையாள் என்றும் சிலர் பிரிக்கப் பார்த்துள்ளேன்! இத்தனையும் உடையவளே, (அகிலத்துக்கு) ஆதியாய் இருப்பவளே, அகிலாண்டேஸ்வரி என்றும் பொருள் கொள்ளலாம்!

****

(தமிழே பிடிக்காத நண்பர்கள் கூட, எனக்கு ட்ரீட் வாங்கிக் கொடுத்து, உக்கார வச்சி, பொறுமையா, சொல்லு கேஆரெஸ், சொல்லு கேஆரெஸ்-ன்னு பொருள் கேட்டது இந்தப் பாட்டுக்கு மட்டுமே :)))

இடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி = ஒரே இடத்தில் இருந்து, நினைத்தவுடன் வந்த விம்மிதத்தால் விம்ம, உன்னித்து எழ, அதற்கு இணையாக ஒன்றோடு இன்னொன்றும் இறுக்கமாகி...

இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு = மனத்தால் இளகி உருக, முத்து வடங்கள் வந்து மேலாடும் மலைகள், அந்தத் திருக் கொங்கைகளால் (திரு மார்பகங்களால்)

இறைவர் வலிய நெஞ்சை = ஈசனின் தியான-மோன வலிய நெஞ்சத்தையும்

நடங்கொண்ட கொள்கை, நலம் கொண்ட நாயகி = அசைத்துப் பார்க்க வல்லவளே!
அப்படி அசைவில்லாத "அசை"வனையும் சைவனாக்கும் கொள்கை நலம் கொண்ட தாயே

நல் அரவின் படம்கொண்ட அல்குல் = நல்ல பாம்பு ஒன்று படமெடுத்தாற் போல் உள்ள அல்குலை (பிட்டம்) உடையவளே!

பனி மொழி = பனி போன்று குளிர் மொழி கொண்டவளே!

வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே! = வேத ஓசையினைக் காற் சிலம்பில் எழுப்புபவளே!

(இந்தப் பாடல், அண்மையில் மகவைப் பெற்றெடுத்த ஒரு அன்னை, பாலூட்டும் போது, அவளுக்கு என்னென்ன உடல் மாறுதல்கள் நிகழும் என்பதாகவும் ஒரு விளக்கம் இருக்கு! அன்னை சிவஞானப் பாலை அன்பருக்கு ஊட்டும் போது உண்டான காட்சி! முத்து வடங்கொண்ட கொங்கை மலை என்பதில் இருந்து நீங்களே யூகித்துச் சொல்லுங்கள்! தேவைப்பட்டால், பிறகு சொல்கிறேன்!)


மதி வருக,
வழி நெடுக
ஒளி நிறைக
வாழ்விலே!

காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க - அம்மன் பாட்டு-100 ஐ நோக்கி...

Monday, November 17, 2008

96. ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம் !

அம்மாவுக்கு என் சொந்தக் கவிதைகளைக் கேட்டு அலுத்துப் போகுதோ இல்லையோ, படிக்கிறவங்களுக்கு அலுத்திருக்குமோன்னு ஒரு எண்ணம் :) அதனால இந்த முறை நிறையப் பேருக்குப் பிடிச்ச, சுசீலாம்மா பாடின பாடல்கள்ல ஒண்ணைப் பார்க்கலாமா? "ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா" இசைத் தட்டுல வருகிற இந்த அருமையான பாடல்களை எல்லாம் எழுதியவர் யாருன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...



ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம்

(ஆயிரம்)

ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம் சந்தனக் காப்பு

(ஆயிரம்)

நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்

(ஆயிரம்)

ஒலி வடிவம்

Monday, November 10, 2008

அவளின்றி ஓரணுவும் அசையாது !



அவளின்றி ஓரணுவும் அசையாது
அவள்அன்பின்றி ஓருயிரும் தரியாது
பகலிரவும் அவளின்றி மாறாது
புவியிதுவும் அவள்சொன்னால் சுற்றாது

அன்பாலே ஆனஎன் அன்னை அவள்
அன்புக்கு எல்லையென்றே எதுவும் இல்லை
சரணென்று பணிந்தோரை ஏற்பாள் அவரை
கண்ணுக்குள் மணிபோலே கணந்தோறும் காப்பாள்

தாயாக மகளாக வருவாள் அவள்
தடையேதும் சொல்லாமல் அன்பள்ளித் தருவாள்
அன்புமிகு சோதரியும் ஆவாள் அவள்
என்றுமெனைப் பிரியாத ப்ரியசகியும் ஆவாள்

எல்லாமே அவளென்று ஆனாள் அவளை
சொல்லெடுத்துப் பாடிடவே தமிழெனக்குத் தந்தாள்
என்னவளை என்றென்றும் மறவேன் அவளின்
புகழ்பாடி துதிபாடி மகிழ்ந்தென்னை மறப்பேன்!


--கவிநயா

Monday, November 3, 2008

இருப்பது போலே இருக்கின்றாய்...



இருப்பது போலே இருக்கின்றாய் - அம்மா
ஆனால் உன்னைக் காணவில்லை
எங்கும் எதிலும் இருக்கின்றாய் எனக்கேன்
உன்னிருப்பிடம் தெரியவில்லை?

வாழ்க்கைக் கடலில் தள்ளி விட்டாய் - அம்மா
நீந்துதல் எவ்விதம் சொல்லவில்லை
கண்ணீர்க் கடலில் மிதக்க விட்டாய் - அம்மா
கரைகா ணும்வழி காட்டவில்லை

புயலில் மழையில் நான் அலைந்தேன் - அம்மா
அலைகளில் சிக்கி அலைக்கழிந்தேன்
பாவக் கடலில் மூழ்கி விட்டேன் - அம்மா
போக்கிடம் இன்றி தத்தளித்தேன்

உன்னை அல்லால் யாரெனக்கு - அம்மா
உலகில் எனக்கெதும் உதவி இல்லை
உன்னை இறுகப் பற்றிக் கொண்டேன் - உன்
அடியே என்கதி நம்பி விட்டேன்

கணந்தோறும் உன்னைப் பணிகின்றேன் - அம்மா
கடைக் கண்ணாலே காத்திடுவாய் - உன்
திருவடியில் மனம் உருகிநின்றேன் - அம்மா
உள்ளம் இரங்கி உதவிடுவாய்


--கவிநயா