Monday, February 25, 2019

உன் முகம்



ஒரு மனதாக உனை தினம் பாட
ஒரு வரம் தருவாய், கருதிட வருவாய்
(ஒரு)

திருமுகத் தாமரை நினைவினில் தவழ்ந்திட
திருவடி எந்தன் சென்னியில் பதிந்திட
(ஒரு)

கண்ணிலும் கருத்திலும் கண்மணி உன்முகம்
எண்ணிடும் எண்ணத்தில் மின்னிடும் உன்முகம்
பண்ணிடும் பனுவலில் பயின்றிடும் உன்முகம்
விண்ணையும் மண்ணையும் ஆண்டிடும் திருமுகம்
(ஒரு)



--கவிநயா

Monday, February 18, 2019

பெற்றோருக்கு...



நாளும் பொழுதும் நானுனை நினைந்தேன்
நாவினில் உன்நாமம் அனுதினம் வரைந்தேன்
திருமுகத் தாமரை இதயத்தில் பதித்தேன்
நீயே கதியென தினந் தினம் துதித்தேன்
(நாளும்)

அருமை மிகும் அன்னை தந்தையைத் தந்தாய்
அவர் வடிவாய் நின்றுன் அன்பினைத் தந்தாய்
அன்பொடு கல்வியும் செல்வமும் தந்தாய்
அனைத்தையும் போற்றிட செந்தமிழ் தந்தாய்
(நாளும்)

அன்னைக்கும் தந்தைக்கும் ஈடெது உலகில்
துன்பமெல்லாம் மறையும் அவர்களின் நிழலில்
அவர்களுக்(கு) உடல்நலம் உளநலம் தருவாய்
அன்புடை வாழ்வும் நீள் ஆயுளும் தருவாய்
(நாளும்)


--கவிநயா

Tuesday, February 12, 2019

உன்னை நினைந்து...



உன்னை நினைந்து உள்ளம் உருகி
கண்ணீர் பெருக கருணை புரிவாய்
பிள்ளை மனமும் வெள்ளை குணமும்
கள்ளம் இல்லா அன்பும் தருவாய்
(உன்னை)

அம்மா என்றேன், அள்ளிக் கொண்டாய்
அடடா இனி ஏன் கண்ணீர் என்றாய்
(உன்னை)

உன் முகம் பார்த்தால் என் துயர் மறையும்
மகிழ்ச்சி என்னும் மழையில் அனுதினம் நனையும்
உன் புகழ் பாட என்னுள்ளம் நிறையும்
பதமே கதியென கிடந்திட விழையும்
(உன்னை)


--கவிநயா

Monday, February 4, 2019

உன்னால் ஆகாததும் உண்டோ?



உன்னால் ஆகாததும் உண்டோ?
உமையவளே எந்தை துணையவளே, என்றும்
(உன்னால்)

உரவினைக் கண்டத்திலே
கரத்தினால் நிறுத்தி வைத்தாய்
அன்பு கொண்டு அன்னமிட்டு
ஈசன் பாவம் போக்கித் தந்தாய்
(உன்னால்)

பால் வடியும் வதனமுடன்
வாலைக் குமரியாக வந்தாய்
கோரக் காளியாக நீயே
வந்து உதிரம் குடித்தாய்
(உன்னால்)

மலயத்துவசன் பெற்ற சின்னஞ் சிறு கண்மணியே
தக்ஷன் அவன் வேண்டிப் பெற்ற தாக்ஷாயணியும் நீயே
கந்தன் கணபதியரைப் போற்றிக் காக்கும் தாயும் நீயே
அண்டங்களை ஆக்கி ஆளும் ஆதிபரா சக்திச் தாயே
(உன்னால்)


--கவிநயா