Monday, February 28, 2022

அன்னை மீனாட்சி உமையே - 4

 

அன்னை மீனாட்சி உமையே - 1 

அன்னை மீனாட்சி உமையே - 2

அன்னை மீனாட்சி உமையே - 3


ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

வெண்சங்கு போல் கழுத்தில் பொன்னாக ஒளிர்கின்ற

அட்டிகை பளபளக்க

 

முத்தோடு நவநவமாய் இரத்தினங்கள் பதித்த

ஆரங்கள் மார்பில் தவழ

 

கொன்றைவார் சடை மீதில் சலசலக்கும் கங்கை கண்டு

கை வளைகள் சலசலக்க

 

பதினெட்டுக் கரங்களிலும் பத்து விரல் மோதிரங்கள்

பல தினுசாய் மினுமினுக்க

 

பக்தர்களும் சித்தர்களும் பல விதமாய்ப் போற்றும்

பரந்தாமன் தங்கச்சியே

 

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்


--கவிநயா



Tuesday, February 15, 2022

என்ன ஆச்சு, அம்மா?

 

பார்வதியே பைரவியே பரமசிவன் பாரிகையே

காரிகையே கருணை செய்ய நேரமில்லையோ, என்னைக்

கடைக் கண்ணால் பார்ப்பதற்கும் மனமும் வல்லையோ?

(பார்வதி)

 

மனுஷியாகப் பிறந்தாலும் நானும் உன்றன் பிள்ளை

அதனை நீயும் மறந்ததனால் எனக்கு ரொம்பத் தொல்லை

(பார்வதி)

 

நீலகண்டன் முகம் பார்த்து உன்னை மறந்தையோ, மீண்டும்

ஆலகாலம் குடிப்பானென்று எண்ணி பயந்தையோ?

 

ஆனைமுகப் பிள்ளை கண்டு கவலை கொண்டையோ, மீண்டும்

பழைய முகம் திரும்ப வரும் என்றிருந்தையோ?

 

ஆறுமுகன் பின்னாலே ஓடித் திரிந்தையோ, மீண்டும்

கோபங் கொண்டு செல்வனென்று காவலிருந்தையோ?

 

ஆக மொத்தம் இவ்வுலகைப் பார்க்க மறந்தையோ

ஓலமிடும் பிள்ளை குரல் கேட்க மறந்தையோ?

(பார்வதி)


--கவிநயா



Tuesday, February 8, 2022

சரணம் அம்மா

 



சரணமடைந்திட்டேன், ஷண்முகன் தாயே கேள்

(சரணம்)

 

உயிருடல் உனதாக, உள்ளமுன் வசமாக

உன் பதம் நிழலாக, உனதருள் எனதாக

(சரணம்)

 

பக்தரெல்லாம் போற்றும் பராசக்தியே அம்மா

சித்தரெல்லாம் போற்றும் சிவசக்தியே அம்மா

தாயென உனை அழைத்தேன், சேயெனை மறந்தாயோ?

வாயென அணையாயோ? வந்தருள் புரியாயோ?

(சரணம்)

 

--கவிநயா