Monday, October 29, 2012

நீயே புகல்!
சுப்பு தாத்தா ஹிந்தோளம் ராகத்தில் அற்புதமாகப் பாடித் தந்திருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!
 


நீயே புகலென்று உன்னிடத்தில் வந்து விட்டேன்
தாயே சரணென்று தண்டனிட்டு பணிந்து விட்டேன்
மாயா விளையாட்டில் மயங்கி விழுந்து விட்டேன்
சேயைப் பாராயோ சேறாய்க் கலங்கி விட்டேன்!

சொல்லும் சொல்லெல்லாம் சுமையாய் ஆனதம்மா
வில்லில் அம்பாக வேதனை செய்யுதம்மா
கல்லாய் இருந்திருந்தால் கவலை இல்லையம்மா
புல்லாய் நசுங்கையிலே புத்தி மயங்குதம்மா!

பிழைகள் பொறுத்திடுவாய் பிள்ளையைக் காத்திடுவாய்
களைகள் எடுத்திடுவாய் கண்ணின்மணி என்றிடுவாய்
விலைகள் கொடுத்துவிட்டேன் வினைகள் அழித்திடுவாய்
மலைகள் தகர்த்திடுவாய் மகளைக் காத்திடுவாய்!

--கவிநயா

Tuesday, October 23, 2012

ஷ்யாமளா நவரத்ன மாலிகா
ஷ்யாமளா நவரத்ன மாலிகா

(சம்ஸ்க்ருத ஸ்லோகத்தைத் தழுவி நான் எழுதிய தமிழ்த்துதி
கலாவின் இனிய குரலில் )


1)ஓங்கார பஞ்சரசுகீம் உபநிஷதுத்யான கேலிகலகண்டீம் /
ஆகமவிபிநமயூரீம் ஆர்யாம் அந்தர்விபாவயே கௌரீ/

ஓங்காரக் கூட்டிலுரை பைங்கிளியே!-உபநிடதப்
பூங்காவில் கூவுங்குயிலே!
சாத்திரக்காட்டிலே சஞ்சரிக்கும் மயிலே!
சான்றோர் தொழும் ஷ்யாமளே!

2)தயமான தீர்க்க நயநாம் தேசிகரூபேண தர்சிதாப்யுதயாம்/
வாமகுசநிஹிதவீணாம் வரதாம் சங்கீதமாத்ருகாம் வந்தே/

நல்லருள் பொழியும் நீள்விழியாளே! ஆசானாய்
நன்னெறி புகட்டும் அன்னையே!
வீணை தழுவு மேனியளே!கானம் பிறப்பித்தவளே!
சரணம்!வரந்தரும் சங்கரி !

3)ச்யாமதனு ஸௌகுமார்யாம் சௌந்தர்யானந்த ஸம்பதுன்மேஷாம்/
தருணிமகருணா பூராம் மதஜலகல்லோலலோசனாம் வந்தே!

பேரழகு,இன்பம்,பொருள்,அனைத்துக்கும் மூலமே!
கார்வண்ண எழிற்கோலமே !
பொங்கும் கருணைக்கடலே!ஆனந்தக்கண்ணீர்
தங்கும் விழியாளே!தொழுதேன்!

4)நகமுகமுகரிதவீணா நாதரஸாஸ்வாதநவனவோல்லாஸம்/
முகமம்ப மோதயது மாம் முக்தாதாடங்க முக்தஹஸிதம் தே/

நகநுனிகள் வீணைமீட்ட, நாதந்தரும் இனியசுகம்
முகப்பொலிவை மேலுங்கூட்ட,
முத்துத்தோடணிந்தொளிரும் உன்வதனம் கண்டெனது
சித்தம் சிலிர்த்தாடவேண்டும்!

5) ஸரிகமபதநி ரதாம் தாம் வீணாஸங்க்ராந்தஹஸ்தாம் தாம்/
சாந்தாம் ம்ருதல ஸ்வாந்தாம் குசபரதாந்தாம் நமாமிசிவகாந்தாம் /

ஏழுசுர இன்பத்தில் திளைப்பவளே!-வீணைவிட்டு
நழுவாத விரல்நுனியளே !
அமைதியுரை கனிவுநிறை மனத்தாளே!- தாய்மை பொங்கும்
தனத்தாளே!சிவகாமியே!!


6)அவடுதடகடிதசூலி தாடித தாளீபலாச தாடங்காம்/
வீணா வாதனவேலாகம்பித சிரசம் நமாமி மாதங்கீம்/

பின்னிமுடித்த கூந்தல்,பனங்குருத்துக் காதணியை
மென்மையாய்த் தீண்டி வருட,
வீணை மீட்டித் தலையாட்டி ரசிக்கும் பஞ்ச
பாணி!நின் பதம் பணிந்தேன்!

7) வீணாரவானுஷங்கம் விகசமுகாம் போஜமாதுரீப்ருங்கம் /
கருணாபூரதரங்கம் கலயே மாதங்ககன்யகாபாங்கம்/

வீணைநாதம்போல் இதமானதாம்--முகக்கமலத்
தேன் மொய்க்கும் வண்டொத்ததாம்,
கருணையலை மோதுமுன் கடைக்கண்களில் மனம்
ஒருமித்தேன் மதங்கன் மகளே!

8)மணிபங்கமேசகாங்கீம் மாதங்கீம் நௌமி ஸித்தமாதங்கீம்/
யௌவனவனஸாரங்கீம் ஸங்கீதாம்போருஹானு பவப்ருங்கீம் /

நீலமணிபோலொளிரும் மேனியளே!மாமுனியாம்
மதங்கனின் இனிய மகளே!
இளமையெனும் வனத்து மானே!பூவண்டென
இசைக்கமலம் நுகரும் மாதே!

9)மேசகமாஸேசனகம் மித்யாத்ருஷ்டாந்த மத்யபாகம் தத்/
மாதஸ்தவஸ்வரூபம் மங்கள சங்கீத ஸௌரபம் மன்யே/

பார்க்கத்திகட்டா நீலமேனியளே!கண்ணுக்குப்
புலப்படா நுண்ணிடையளே!
போற்றாதோரே இல்லாப்பேரழகி!சங்கீத
ஸாரத்தின் வடிவே !சரணம்!
Monday, October 22, 2012

சகலகலாவல்லியே...!தர்பாரி கானடா ராகத்தில் சுப்பு தாத்தா அமைத்துத் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
 

சகலகலா வல்லியே – உனைப் பாட
தீந்தமிழ் வரும் துள்ளியே
(சகலகலா)

பண்ணிசை உனைப் பாட
எண்திசை உனை வாழ்த்த
கண்மிசை நீர் பெருக
என்திசை நீ பார்க்க
(சகலகலா)

ஒவ்வொரு கலையிலும் உள்ளொளிர்ந்திருப்பாய்
வேதத்தின் நாதமாய் நீ ஒலித்திருப்பாய்
நான்முகன் நாவினில் நீ குடியிருப்பாய்
நற்றமிழ் நான்பாட அகம்மகிழ்ந்திருப்பாய்
(சகலகலா)

--கவிநயா

நன்றி: வல்லமை 
 

Friday, October 19, 2012

திருமகளே! வருவாய்!


திருமகளே! வருவாய்!

பாற்கடலிலுதித்த பேரருட்கடலே !
ஸ்ரீதேவி!வருவாய்!
பார் போற்றும் ப்ருகு முனியின் மகளே!
பார்க்கவி!பரிந்தருள்வாய்!

திருமகளே! வருவாய்!
செல்வவளம் அருள்வாய்!
தூயவளே!வருவாய்!
கொடுக்குங்குணமும் அருள்வாய் !

கீதையெனும் வேதமோதிய மாதவன்
காதலியே!வருவாய்!
ஆதவன்கதிர்பட மலர்ந்திடும் கமலத்தில்
அமர்பவளே !வருவாய்!

திருமகளே! வருவாய்!
செல்வவளம் அருள்வாய்!
தூயவளே!வருவாய்!
கொடுக்குங்குணமும் அருள்வாய்!

சம்புவின் மேனியில் பாதியாம் அம்பிகையின்
மதனியே !வந்தருள்வாய்!
அம்புயமேந்தும் கரத்தாளே!அம்புய
வதனியே! வந்தருள்வாய்!

திருமகளே! வருவாய்!
செல்வவளம் அருள்வாய்!
தூயவளே!வருவாய்!
கொடுக்குங்குணமும் அருள்வாய்!

Wednesday, October 17, 2012

பாரதியாரின் நவராத்திரிப் பாட்டுபராசக்தி
(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி )
மாதாபராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் !
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே!மிகப்பணிந்து வாழ்வோமே.

வாணி
வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப்போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங்காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார்தேவி ,புகழரசி
மின்னுநவரத்தினம்போல் மேனியழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ,ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண் புகுந்து வாழ்வோமே.

பார்வதி
மலையிலே தான் பிறந்தாள் ,சங்கரனை மாலையிட்டாள் ,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள் ,நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.

Monday, October 15, 2012

துர்க்கை என்னும் நாமம்!

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
சுப்பு தாத்தா ஆனந்த பைரவி ராகத்தில் ஆனந்தமாகப் பாடித் தந்ததை ஆனந்தமாகக் கேட்டு மகிழுங்கள்! :) மிக்க நன்றி தாத்தா!


துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் துன்பம் மிரண்டு போகுமே!
நற்சொல்லாகி நாவில் நின்று நாளும் நம்மைக் காக்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தீமை ஓடிப் போகுமே!
நற்பலன்கள் நம்மைத் தேடி வந்து நன்மை சேர்க்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் அச்சம் அச்சம் கொள்ளுமே!
நற்றுணையாய் நிமிடந் தோறும் கூட நின்று காக்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் சஞ்சலங்கள் விலகுமே!
சத்தியத்தைக் காட்டி நம்மின் சோதனைகள் தீர்க்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் வினைகள் யாவும் தீருமே!
வித்தை போல நல்லவற்றைத் தந்து நம்மைக் காக்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தோல்வி தோற்றுப் போகுமே!
நிற்க என்று சொல்லி வெற்றி நம்மை வந்து பற்றுமே!

துர்க்கை என்னும் நாமம் சொன்னால் அமைதி நெஞ்சில் கூடுமே!
ஆனந்தமே ஆனந்தமாய் நம்மை வந்து சேருமே!

கற்க என்று காலன் வந்து பாடம் சொல்லும் முன்னமே
துர்க்கை நாமம் நெஞ்சில் வைக்க என்றும் நன்மை நன்மையே!


-கவிநயா

Monday, October 8, 2012

மதுராபுரி அழகி!
சுப்பு தாத்தா கதன குதூகலத்தில் குதூகலமாகப் பாடித் தந்தது இங்கே... மிக்க நன்றி தாத்தா!

மதுராபுரியாளும் மீனாக்ஷி - என்
மனதினில் என்றென்றும் உனதாட்சி
(மதுராபுரி)

துள்ளுகின்ற மீனினத்தைத் துரத்திய விழியழகி
தெள்ளுதமிழ்க் கவிகூறும் மதுரையின் பேரழகி
(மதுராபுரி)

அம்பலத் தாடுகின்ற ஆடல் அரசனுடன்
செம்புலப் பெயல்நீர் போல் சேர்ந்திருக்கும் சுந்தரியே
கூடல் நகரினிலே கொஞ்சுமிளம் பைங்கிளியே
நாடி வரும் அடியவர்க்கு கோடி சுகம் தருபவளே!
(மதுராபுரி)

--கவிநயா

படத்துக்கு நன்றி: 'அடியேன்' முத்து