Tuesday, July 28, 2020

எழுந்தருள்வாய்


ஏங்கி அழைக்கின்றேன், எழுந்தருள்வாய்!

ஏழை அழைக்கின்றேன், ஏந்திழையே, எழுந்தருள்வாய்!

(ஏங்கி)

 

பாற்கடல் பரந்தாமன் சோதரி, பார்வதி

பார்த்திட கடைப் பார்வை, தீர்த்திட என் பிறவி

(ஏங்கி)

 

பணிவில்லை பக்தியில்லை, உன்னை எண்ணும் எண்ணம் இல்லை

அறிவில்லை, ஆசையில்லை, உன்னிடத்தில் நேசம் இல்லை

பெரு வெள்ளம் தடுப்பதற்கு, பிள்ளை கட்டும் அணை போல

நான் செய்யும் கவி கேட்டு, நாயகியே வருவாயோ?

(ஏங்கி)


--கவிநயா


Monday, July 20, 2020

மீனாக்ஷி


மதுரையிலே வீற்றிருப்பாள்

மனசுக்குள்ளே பூத்திருப்பாள்

மீன் போன்ற விழியால் இந்த

மேதினியைக் காத்திருப்பாள்

 

மீனாள் எனும் நாமம் கொண்டாள்

ஈசனிடம் காதல் கொண்டாள்

வீரங்கொண்ட இராணியவள்

வேதம் போற்றும் தேவியவள்

 

திக்விஜயம் செய்தவளாம்

திக்கெட்டும் வென்றவளாம்

தித்திக்கும் தேனவளாம்

எத்திக்கும் நிறைந்தவளாம்

 

பட்டுப்போல் எழில்மேனி

பரந்திருக்கும் கருங்கூந்தல்

பரமசிவன் மேனியிலே

பாதியான பார்வதியாம்


--கவிநயா




Monday, July 13, 2020

எண்ணாதிருந்தாலும்...



எண்ணாதிருந்தாலும் அருளுவையே, என்னைக்

கண்ணால் பணித்தாண்டு அருள் உமையே

(எண்ணாதிருந்தாலும்)

 

விண்ணாதி தேவரொடு, மன்னாதி மன்னவரும்

அண்ணன் கோவிந்தனும் அன்னையென வணங்கிடும் நீ

(எண்ணாதிருந்தாலும்)

 

உலகினில் உழலுகின்றேன், உன்னை எண்ணும் எண்ணமின்றி

பிறவியில் மயங்குகின்றேன், உன்னைப் போற்ற நேரமின்றி

பேதையின் புலம்பலுக்குக் கோதை நீ வருவாயோ

வாதையைத் தீர்த்திடவே தாயுன் மடி தருவாயோ

(எண்ணாதிருந்தாலும்)



--கவிநயா

Monday, July 6, 2020

பரப் ப்ரம்ம ஸ்வரூபிணி



பரப் ப்ரம்ம ஸ்வரூபிணீ

பரமேசி ஜகன்மாதா

(பர)

 

சிம்மத்திலே சீறும் சிம்ம வாஹினி

சிவனுடன் விடையேறும் பார்வதி தேவி நீ

நடனத்திலே களிக்கும் தில்லை சிவகாமி நீ

புவனத்தை ஆளுகின்ற புவனேஸ்வரியும் நீ

(பர)

 

தாடங்கத்தால் அன்றொரு நாள் தண்ணிலவை அமைத்தாய்

ஊமையைப் பேச வைத்தாய் கவிப் பெருக்கோட வைத்தாய்

வேதங்கள் போற்றிடவே வீற்றிருக்கும் தேவி

பாதங்கள் பற்றிக் கொண்டோம், காத்திட வருவாய் நீ

(பர)


--கவிநயா