அம்பே !அம்பிகே ! அபிராமியே !!
அகிலத்து நாயகியே !
ஓம் ஜெகதம்பாயை நம: !!
அஞ்ஞான இருளகற்றும் அறிவே ! ஆனந்தவல்லித்தாயே...
ஓம் தமோ நாசின்யை நம;
அ உ ம் உன்னுள் ! உமையே ! ஓம்காரமே !
அவை உச்சரிக்கும்போதெழும் நாதமும் நீயே !!
ஓம் க்ஷராக்ஷராத்மிகாயை நம :
ஓம் நாதரூபாயை நம:
ஆனைக்காவலிலே அகிலாண்ட நாயகியே !
ஆரணி நாரணியே ! ஆனந்தரூபிணியும் நீயே !!
அம்ருத வர்ஷிணி !ஆவுடை நாயகி !
இடப வாகனன் ஈசன் இடபுறம் நீ! பார்வதியே !!
இயற்கையின் கண் உயிர் ஈந்த பவானியும் நீயே !!
ஓம் பவான்யை நம:
உமையே ! உண்ணாமுலையாளே !
வையம தோன்றுமுன்னே நிஜமாய் நின்றவளே !
ஓம் அஜாயை நம:
விஸ்வ ஜனனி நீ ! விஸ்வ காரணியும் நீ !
எமை எல்லாம் ஈன்ற பின்னே எம் பசி ஆற்றுபவள் நீ. !
கௌரி கல்யாணி காயத்ரி காம வர்தினி
சுஹாசினி சுவாசினி சுகந்தினி சுக ப்ரதாயினி
தருணி தத்வமயி தாரித்ரிய த்வம்சினி தேவி
பத்மினி புஷ்டி நீ பிரசன்ன புவனேஸ்வரி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3wns2dyGKG23K_-gxQun5gPnmG7uSoT1G-nfVPCmPew_MLZUNK6qBy2bFt4In_kJdbnNpyCJotbWZX8r4Em4hVAn7GfA738pSmyaCwYuRO8QHgLggdVjCVZrwk2OOZrNDgxSdNq7UljU/s200/kamatchi.JPG) |
kamakshi |
கரும வினை தொலைத்திடவே
காஞ்சி நகர் வருவார்தம்
காம க்ரோத மதமழிக்கும்
காமாட்சியே ! காமேஸ்வரி தாயே !
ஓம் ப்ரபன்ன துக்க ஹாரிண்யை நம:
சங்கரி சந்திர வதனி சாம்பவி சரஸ்வதி
சத்ய ஸ்வரூபிணி சதுர்வேத நிவாசினி
சியாமளி சின்மயி சர்வ சித்தி ப்ரதாயினி
சிவமயி சூலினி சாவித்ரி ஸ்ரீசக்ர நிவாசினி கசியும் விழியுடனே காசி அடைந்தோர்க்கு
காலபயம் நீங்க கங்கை நீர் தருபவளே !
முக்தி அளிப்பவளே !! முந்தைவினை அழிப்பவளே !!
நற்கதி விண்டருள்வாய் ! விசாலாட்சி தாயே நீ !!
ஓம் அபவர்கப்ரதாயை நம:
வைகை நகர் ஆளும்
சொக்கனின் சுந்தரியே !! அவன்
கைபிடித்து மணம் புரிய
மாமதுரை வந்தனையோ !!
மீன்விழியாளே ! மீனாட்சி தாயே !!
ஓம் ஸித்தி ரூபாயை நம:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRSZuxnf1kXfPgDsn9oKvenH-3kNOvzrRs8RTCRLgLKFmZ9oIE94xz4aJRJZ1TQ1T4m8DeYnG9dlYRnlpa2zLQ6yz7JeWbPuiU12hzuCRRB67SmjAIMD1Xeytw13Au8NqsKLn8i2Qe00c/s200/karpagambikai.JPG) |
Devi Karpagambikai |
மயிலை நகரிலே ஒயிலாக வலம் வந்து
கயிலை மலை வாசன் கபாலியும் கண்டு மகிழ
அறுபத்து மூவர் போற்றும் அன்னையே
கற்பக அம்பிகையே ! எமை
ரக்ஷிப்பதுன்னதருளே !!
ஓம் சங்கர்யை நம:
மந்திரமே மருந்தாய் ஈசன் வைத்தீச்வரன் அருகில்
சுந்தரியாய் வீற்றிருக்கும் பாலா அம்பிகையும் நீயே
தான் (ஐ)அறுப்பவளே தையல் நாயகியே !!
தருமத்தைக் காப்பவளே ! தர்மசம்வர்த்தினியே !!
ஓம் அபய ப்ரதாயை நம:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8ERh7IlrCZP5tzEfTieyvAUWZxcpZ6ON4HAglpWLM1jbynxoMuK9OqS0Wa9f1ojt5Cy5y1L-YBIapXR7ydZ-u8T9dinxlZkZZmUDPsUHk_K4Gl3fa6jIvtxEgffcGzlmmmozMQTBHZRs/s200/neelayadhakshi.jpg) |
Neelayadakshi |
கருந்தடங் கண்ணி என சுந்தரவிடங்கருடன்
அரும்பதிகமது புனையும் விரி கேட்டனையோ !!
நீலக்கடலோரம் நாகைத் தலத்தினிலே
நீலாய தாட்சி நீ உடன் வந்து எனை ரட்சி.
ஓம் சிவாயை நம:
குடம் நிறை பாலும் தேனும் அம்மா உனக்கபிஷேகம்.
மஞ்சள் நீராட்டிய பின்,மலர் மாலை ஆபரணம்
ரக்த வர்ண சேலை கட்டி குங்குமத்திலகமிட்டு
(உ)
ன்னை நான் பூசிப்பேன் வண்ண வண்ண மலரெடுத்து.
கேட்கும் ஒலியெல்லாம் துர்கே !! நின் ஓம்காரம்
ஆர்ப்பரிக்கும் அலை மனதில், நிர்மலே ! நீ நங்கூரம்
எஸ்ஸ்ருதி எவ்வேதம் ஸரஸ்வதி நீ ஸானித்யம்
ரஞ்சினி
விமலி
சங்கரி நித
ர்சனம் நின் சத்தியம் ..
ஓம் பிரம்மா விஷ்ணு சிவாத்மிகாயை நம:
ஓம் தயாகர்யை நம:
கரும்பு வில்லாளே கடைக்கண் பார்வையுந்தன்
விழுந்தாலும் போதும் விமோசனம் யான் பெற்றிடுவேன்.
நற்சங்கம் நாடி, நிர்மோக நிலை அடைவேன்.
யாதுமான நின் ஒளியில் இரு வினையும் தொலைத்திடுவேன்.
ஓம் தஹராகாச ரூபிண்யை நம:
கற்பூர நாயகி கமனீயகாந்தி கஸ்தூரி திலக கதம்பவனவாசினி
விண்ணோரும் வந்திக்கும் வாக்தேவி வைசாலி விஸ்வேஸ்வரி
நவராத்ரி நாயகி நவரத்ன பூஷணி நான்முகனின் தேவி நமோ நம: .
யாண்டும் யாவர்க்கும் யாதுமானாய். நின் தாள் போற்றி போற்றி.
ஓம் சர்வ மங்களாயை நம:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLqZN467ACL8WWsZKkynhB8_dSQfqjpSomGVmc9q6i5XvYwcSslXt4kCilhQXATYkMTh8gyjfUOJyWp4MxQGYph9Nu5YbcnIPrmAlpKwSCeNhzm-6o1uRUf9-_4vYxyFImw0FXA4Tv-Qg/s200/rajeswari.JPG) |
Devi RajaRajeswari |
மாயே ! மாதே ! மாதங்கி ! மஹாசக்தி !
மோகினி ! மஹேஸ்வரி ! மாங்கல்ய தாயினி ! மஞ்சு பாஷிணி !
முக்தி ப்ரதாயினி !. மனமிரங்கி அருள்வாய் நீ !
வேதவல்லியே ! வித்யே ! வந்திப்போம் யாம் உனையே !
ஓம் ராஜ ராஜேச்வர்யை நம:
(courtesy: Sri Kumaran )
நவராத்திரி நாட்களில் ,
திருலோக நாயகியை திருவரங்க நாயகியை மஹா லக்ஷ்மியை வந்தித்து எழுத அழைப்பு வந்ததும் அவளது அருளே.
எல்லோருக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்கள்.
தேவியின் சில நாமாக்களுடன் அதற்கேற்ற பாடல்கள் ஆங்காங்கே இணைக்கப்பட்டு உள்ளன. கிளிக்கினால் கேட்கலாம்.
எழுதியது: சுப்பு ரத்தினம் ( சூரி )