Monday, December 20, 2021

அம்மா கொஞ்சம் பாரு

 

அம்மா அம்மா அம்மா என்று கூவும் பிள்ளை பாரு

அம்மா எனக்குப் பதிலைச் சொல்லும் நாள் வருமோ கூறு

(அம்மா)

 

(உனக்கு) வயதாகிப் போனதோ? செவியும் மந்தம் ஆனதோ?

நீ ஏறும் சிம்மத்துக்கும் பார்வை மங்கிப் போனதோ?

(அம்மா)

 

பாடிப் பாடிப் பார்க்கின்றேன், பார்வை கிடைக்கவில்லை,

உன் பார்வை கிடைக்கவில்லை

தேடித் தேடிப் பார்க்கின்றேன் தேவி எங்கும் இல்லை,

            என் தாயைக் காணவில்லை

வாடி வாடிப் போகின்றேன் வேருக்குத் தண்ணீர் இல்லை,

            என் தாகம் தீரவில்லை

ஓடி ஓடிக் களைத்து விட்டேன் விதியை வெல்லவில்லை,

            என் மனதில் சக்தி இல்லை

(அம்மா)

 

 --கவிநயா


Wednesday, November 10, 2021

அடைக்கலம் நீயே


அடித்தாலும் அணைத்தாலும்

அடைக்கலம் நீயே

அழுகின்றேன் தொழுகின்றேன்

அம்பிகை தாயே

(அடித்தாலும்)

 

 

வினை மூட்டை தனை இறக்கி

வைத்திடும் நாள் வருமோ

விதியோடு விளையாடி

ஜெயித்திடும் நாள் வருமோ

உன்னருளை உன்னருளால்

உணர்ந்திடும் நாள் வருமோ

இதயத்திலே இன்பம்

நிலைத்திடும் நாள் வருமோ

(அடித்தாலும்)

 

 

வேண்டி வந்தேன் வாழ்வில்

ஒரு விருப்பம்

அதைத் தருவதும் மறுப்பதும்

உன் விருப்பம்

நீ நினைத்தால் எது-

வும் நடக்கும்

நம்பிக்கை வைக்கின்றேன்

அது கிடைக்கும்

(அடித்தாலும்)

 

 

--கவிநயா


பி.கு. : சில நாட்களுக்கு ஒரு சிறிய இடைவேளை; அதற்குப் பிறகு தொடருகிறேன். அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்.


Wednesday, October 27, 2021

சரஸ்வதி அம்மா - நவராத்திரி பாடல்

 

வெள்ளைப் பட்டாடை உடுத்தி

வெள்ளன்னம் மீதமர்ந்து

நான்முகன் நாயகி வலம் வருவாள் - அவள்

பூ மலர் விழி மலர்ந்து அருள் புரிவாள்

 

வெள்ளை மலர் அவள் மேடை

வெள்ளை உள்ளம் அவள் வீடு

கள்ளமில்லா உள்ளந்தனில் குடி புகுவாள் – அவள்

கொள்ளை இன்பங்கள் தந்து அருள் புரிவாள்

 

வீணைதனை மடியேந்தி

ஜப மாலை கரமேந்தி

ஞானத்தின் வடிவாக வீற்றிருப்பாள் – அவள்

அஞ்ஞானந் தன்னை வெல்ல அருள் புரிவாள்

 

ஆயகலை அனைத்துக்கும்

அரசியென ஆனாலும்

தாயெனவே பரிந்துவந்து அன்பு செய்வாள் – அவள்

தயவுடனே நமக்கு அருள் புரிவாள்

 

நான்முகனின் நாவில் இருப்பாள்

நான்மறையின் பொருளில் இருப்பாள்

நா ஒலிக்கும் தமிழிலும் அவள் இருப்பாள் – அவள்

நாத வடிவாக எங்கும் நிறைந்திருப்பாள்

 

 

--கவிநயா
Wednesday, October 20, 2021

லக்ஷ்மி அம்மா - நவராத்திரி பாடல்

செக்கச் சிவந்திருக்கும் கமலத்திலே

செந்தாமரையின் வடிவத்திலே

ஸ்ரீலக்ஷ்மி தாயார் வீற்றிருப்பாள்

என்றன் சிந்தையிலும் அவள் கொலுவிருப்பாள்

 

மாலவனின் மார்பில் மணியாவாள்

கோல எழில் தேவி ஒளியாவாள்

செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியாவாள்

பணிந்திடும் பக்தருக்குப் பெருநிதி அவளாவாள்

 

ஆதிலக்ஷ்மியும் கஜலக்ஷ்மியும் தனலக்ஷ்மியும் அவளாவாள்

தான்ய தைர்ய சந்தான விஜய வித்யா லக்ஷ்மியும் அவளாவாள்

அஷ்ட லக்ஷ்மிகளும் அவளாவாள்

மஹாலக்ஷ்மியும் அவளாவாள்

இஷ்ட லக்ஷ்மியும் அவளாவாள்

கஷ்டம் நீக்கிடும் தாயாவாள்

 

ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி

ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி

ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி

ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி


--கவிநயா 

Monday, October 11, 2021

துர்க்கை அம்மா - நவராத்திரி பாடல்

மீனாட்சி அம்மை பாடல் நவராத்திரி முடிந்த பிறகு தொடரும்...


துர்க்கை உன்றன் பேரைச் சொன்னால்

    துன்பம் எல்லாம் தீரும்

தூரப் போகும் வினைக ளெல்லாம்

    இன்பம் வந்து சேரும்

சூலம் கொண்ட கோலம் கண்டால்

    கண்களிலே நீரும்

வழியுதடி துர்க்கை அம்மா

    தேடி வந்தேன் பாதம்

 

அசுர்ர்களை அழிக்கையிலே

    ஆங்காரத் தோற்றம்

அன்புடனே காக்கையிலே

    அன்னையென மாற்றம்

உன் நிழலில் தங்கிடவே

    எனக்கு என்றும் ஏக்கம்

உன் கமலத் திருப்பதமே

    எம்மை என்றும் காக்கும்

 

சங்குடனே சக்கரம் உன்

    சோதரனைப் போலே

சந்திரனைச் சூடிடுவாய்

    காதலனைப் போலே

தீயவற்றைக் கண்டு விட்டால்

    தீயதனைப் போலே

வேகங் கொண்டு வந்திடுவாய்

    சிம்மமதன் மேலே

 

பதினெட்டுக் கரங்களிலே

    ஆயுதங்கள் சொண்டாய்

ஈரெட்டுத் திசைகளிலும்

    அசுரர்களை வென்றாய்

ஆயிரமாம் கண்களினால்

    அன்பர்களைக் காப்பாய்

அண்டி வரும் அடியவரைத்

    திருவடியில் சேர்ப்பாய்

 

 

--கவிநயா


Sunday, October 3, 2021

அன்னை மீனாட்சி உமையே - 3

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

நேரான கூர் நாசி ஓரத்திலே முத்து

மூக்குத்தி ஒளி வீசிட

 

புல்லாக்கிலே தொங்கும் சிவப்புக்கல் உதட்டோடு

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிட

 

பவழத்தை யொத்த இதழ் மலர் போலவே விரிந்து

குறு நகைக்கு எழில் கூட்டிட

 

கன்னக் கதுப்பு சிவன் காதலுடன் முகம் பார்க்கும்

கண்ணாடியாய் மின்னிட

 

பல கோடிப் பிள்ளைகளைக் கடைக் கண்ணால் காக்கின்ற

பங்கயக் கண்ணரசியே

 

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்--கவிநயாMonday, September 27, 2021

அன்னை மீனாட்சி உமையே - 2

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

முடியினில் பிறைமதி துலங்கிட வதனத்தில்

முழுமதி ஒளி வீசிட

 

உச்சியில் ஓர் திலகம் ஒளிர்ந்திட அதனொளியில்

கதிரவன் கண் கூசிட

 

கார் மேகம் போலவே அலைகின்ற கருங்கூந்தல்

காதோரம் கதை பேசிட

 

மானொத்த கருவிழிகள் நாணத்திலே சிவந்து

கறைக்கண்டன் முகம் நோக்கிட

 

மீனாடும் விழியாளே தேனாடும் மொழியாளே

மலையரசன் பிரிய மகளே

 

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்--கவிநயாWednesday, September 22, 2021

அன்னை மீனாட்சி உமையே - 1


(1)

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

சுந்தரி நிரந்தரி சந்திர ஜடாதரி

சங்கரி சௌந்தரியே

 

அந்தரி அனந்தரி அகிலாண்ட நாயகி

ஆதி நீ ஜோதி நீயே

 

பார் போற்றும் தேவியே பூலோகம் மீதிலே

நான் போற்றும் அன்னை நீயே

 

கார் மேகம் போலவே கருணையைப் பொழிகின்ற

கன்னியே கனிவின் வடிவே

 

மீன் போன்ற விழியாலே மேதினியைக் காக்கின்ற

மங்கையே மாதரசியே

 

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

 

--கவிநயா