Monday, January 25, 2021

வளம் அளிப்பாய்!

 


 உனை மறவா வரம் வேண்டும் உமையவளே

உன் நிழலில் இடம் வேண்டும் உமையவளே

உன் அடிமை நானன்றோ உமையவளே

என் தலைவி நீயன்றோ உமையவளே

(உனை)

 

உன் புகழே பாடுகின்றேன் உமையவளே

உன் பாதம் போற்றுகின்றேன் உமையவளே

உன் பிள்ளை நானன்றோ உமையவளே

என் அன்னை நீயன்றோ உமையவளே

(உனை)

 

உன் நாமம் ஜெபிக்கின்றேன் உமையவளே

உனை நாளும் தொழுகின்றேன் உமையவளே

உனை யன்றி எவரெனக்கு உமையவளே

உனை நம்பி வாழ்கின்றேன் உமையவளே

(உனை)

 

நிலையில்லா உலகினிலே உமையவளே

நிலையான பொருள் நீயே உமையவளே

வலையினிலே அகப்பட்டேன் உமையவளே

வலையறுத்து வளம் அளிப்பாய் உமையவளே

(உனை)


--கவிநயா


Monday, January 18, 2021

அழகி


முத்து நகை இதழழகி; முல்லை மலர்ச் சிரிப்பழகி

முத்தமிழின் மொழியழகி; குற்றமில்லாப் பேரழகி

(முத்து)

 

கோடி இரதிகள் கூடினாலும், இவளுக்கு நிகராமோ

கலைமகளின் வீணை நாதம் இவள் குரலுக்கீடாமோ

(முத்து)

 

மன்மதனை எரித்தவனின் மனங்கவர்ந்த தேவியவள்

அயன் மால் அரி மூவருமே அடிபணியும் அன்னையவள்

பாதத் தூளியாலே இந்த அண்டமெல்லாம் ஆக்கியவள்

பாதங்களில் சரண் புகுந்தால் பரிவுடனே காக்கிறவள்

(முத்து)


--கவிநயா


Monday, January 11, 2021

தங்க நிழல் தருவாய்!

 

தங்க நிழல் தருவாய் அம்மா, தந்து

அஞ்ச லென்று அருள்வாய் அம்மா

(அம்மா...தங்க)

 

தஞ்சம் என்று தேடி வந்தேன்

மங்கையுன்றன் மலர்ப்பாதம்

கொஞ்சம் உன்றன் கண் பார்த்தால்

என்றன் நெஞ்சின் வலி தீரும்

(தங்க)

 

ஆனைமுகன் கணபதிக்கு

அன்னை நீயே உயிர் கொடுத்தாய்

ஆறுமுகன் ஒரு முகனாய்

ஆக்கி வைத்து வேல் கொடுத்தாய்

 

நானும் உன்றன் பிள்ளையன்றோ

நீயேஎன்றன் அன்னையன்றோ

சேய் மறந்த தாயும் நீயோ

நாயேன் என்னைக் கண் பாராயோ

(தங்க)



--கவிநயா

Monday, January 4, 2021

அருள் வேணும்

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!



 உலகமெல்லாம் உய்ய வேணும்

உமையவளே காக்க வேணும்

சகல வித செல்வங்களும் பெருக வேணும்

சக்தி உமை நீதானே அருள வேணும்

(உலக)

 

உழவரெல்லாம் வாழ வேணும்

பயிர்களெல்லாம் செழிக்க வேணும்

இயற்கை யன்னை மகிழ்வோடு சிரிக்க வேணும்

இமவான் மகளே நீயே அருள வேணும்

(உலக)

 

உடல் நலமும் உள  நலமும்

உயிர்களுக்கு நீ தரணும்

நோயில்லாத வாழ்வு இங்கு மலர வேணும்

நாராயணீ உமை நீ அருள வேணும்

(உலக)

 

போதும் என்ற மனதோடு

பொறுமையாக இருக்க வேணும்

பொக்கிஷமா உன் பதமே போற்ற வேணும்

புவனேஸ்வரி நீயே அருள வேணும்

(உலக)

 

உலகமெல்லாம் ஓர் நாடாய்

ஒற்றுமையே அதன் உயிராய்

அன்பொன்றே அதன் மூச்சாய் வாழ வேணும்

அன்னை உமை நீதானே அருள வேணும்

(உலக)


--கவிநயா