இம்முறை www.thillaikathuchronicles.blogspot.com உரிமையாளர், கீதாம்மாவும், சுப்பு தாத்தாவுடன் சேர்ந்து ஆனந்த பைரவியில் பாடி, ஆனந்தத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறார்கள்.. மிக்க நன்றி, சுப்பு தாத்தா, மற்றும் கீதாம்மா!!
அன்பு கொண்டு உனை அடைந்தேன் அம்பிகையே
அன்னை என்று உனை அறிந்தேன் அருள்புரியேன்
(அன்பு)
அகிலங்கள் யாவும் உந்தன் ஆட்சியிலே, உயிர்
அத்தனையும் வாழ்வ துந்தன் மாட்சியிலே
(அன்பு)
சிந்தைதனை உனில் நாட்டி
உள்ளந்தனில் உனைப் பூட்டி
விந்தைமிகும் உனைப் போற்றி
வாழுகிறேன்
உந்தனையே எண்ணி தினம்
பாடுகிறேன்
(அன்பு)
--கவிநயா
Monday, June 27, 2016
Monday, June 20, 2016
என்றும் மறவேன்...
சுப்பு தாத்தா மனமுருகப் பாடியது... மிக்க நன்றி தாத்தா!
எத்தனை துன்பங்கள் வந்தாலும், அம்மா
என்றும் உனை மறவேன்
அத்தனையும் சிறு தூசாகும், நீ
அருகிருந்தால், அறிவேன்
சித்திரக் கண்ணே நித்திலமே
சிந்தையில் நிற்பதுந்தன் பொற்பதமே
பித்தனவன் மயங்கும் முத்தினமே
நித்தமும் துதித்திருப்பேன் அற்புதமே
சத்திய வடிவேஉன் கால்கள் பிடித்தேன்
பத்திரமாய் என்னைக் காப்பாயே
உத்தமியே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
இக்கணம் அருள் மழை பொழிவாயே
--கவிநயா
Monday, June 13, 2016
துணை நீயே!
ராகமாலிகாவில் சுப்பு தாத்தா மனமுருகப் பாடியது... மிக்க நன்றி தாத்தா!
உன்னெழில் வதனத்தை ஓவியமாக
உள்ளத்தில் எழுதி வைத்தேன்
உன்திருப் புகழினைக் காவியமாக
கவிதையில் பாடி வைத்தேன்
உன்நினை விருந்தால் ஒவ்வொரு நாளும்
உன்னத நாளாகும்
உன்உறவிருந்தால் ஒவ்வொரு வாழ்வும்
உன்னத வாழ்வாகும்
அம்மா என்ற ஒரு சொல்லினிலே
ஆயிரம் பொருளுண்டு
சும்மா அதனைச் சொன்னால் கூட
அன்னையுன் அருளுண்டு
அன்பாய் உன்னை அழைத்தால் அழுதால்
அம்மா உன்னைப் பெறலாமே
தைலத் தாரை போலே உன்னை நினைத்தால்
என்றும் துணை நீயே
--கவிநயா
Monday, June 6, 2016
அவளே அருள்வாள்!
மோஹனத்தில் சுப்பு தாத்தா மோஹனமாய்ப் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!
நாளும் நமக்கு அருள்வாள்!
நாயகி துணை வருவாள்!
நாமம் சொல்லி நாடும் பேருக்கு
நன்மைகள் எல்லாம் தருவாள்!
கனியிதழ் முறுவல் காட்ட, இரு
கருவிழி கருணை கூட்ட
காலடி விழுந்து தொழுதிடும் பேர்களைக்
காப்பாற்ற ஓடோடி வருவாள்!
காற்றும் மழையும் அவளே, அவள்
கருணை பொழியும் முகிலே!
காலம் சுழல்வது அவளால், அந்தக்
காளிதேவி யவள் அருளால்!
வேதத்தின் நாதம் அவளே!
வேண்டுவ தவளின் அருளே!
கீதம் பாடும் குயில்போல், அவள்
புகழ்பா டுவதென் தொழிலே!
--கவிநயா
Subscribe to:
Posts (Atom)