Monday, February 27, 2012

பலப் பலவாய் இருப்பாள்!


வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்
செந்தா மரைமீதில் சிரித்திருப்பாள்
சிம்மத்தின் மீதேறி வலம் வருவாள் – தன்னை
சொந்தம் எனக் கொண்டவர்க்கு நலம் தருவாள்

நா வினில் குடியிருப்பாள் நாத வடி வாயிருப்பாள்
நான்முகனின் அருகிருந்து நல்லறிவு நல்கிடுவாள்

பூ வினில் குடியிருப்பாள் பூ வுல கைக்காப்பாள்
புங்கவனின் மார்பினிலே பூவிதென மலர்ந் திருப்பாள்

இமயத்தில் குடியிருப்பாள் ஈசனின் இட மிருப்பாள்
இதயத்தில் கொலுவிருப்பாள் இமையெனக் காத்திருப்பாள்

கலைமகளாய் இருப்பாள் கன்னல்கவி தருவாள்
அலைமகளாய் இருப்பாள் ஆக்கமெல்லாம் அருள்வாள்
மலைமகளாய் இருப்பாள் மாந்தர்தம்மைக் காப்பாள்
பலப்பலவாய் இருப்பாள் பக்திசெய்தால் மகிழ்வாள்

அடியவர் விரும்பிடும் வடிவினிலே வருவாள்
கொடியவை களைந்திடுவாள் கொடியென படர்ந்திடுவாள்
மழையெனப் பொழிந்திடுவாள் மலரென மலர்ந்திடுவாள்
மனமெலாம் நிறைந்திடுவாள் மணம்கமழச் செய்திடுவாள்!


--கவிநயா

Monday, February 20, 2012

தூது செல்வாயோ?


சுப்பு தாத்தா அந்தக் கால ஹிந்தி பாடல் மெட்டில் அருமையாக பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்! மிகவும் நன்றி தாத்தா.


தூது செல்வாயோ புவியே தூது செல்வாயோ?
நீ சுற்றுவதை சற்றே விட்டு தூது செல்வாயோ?

(தூது)

அன்னையவள் இருப்பிடத்தை நீ அறிவாயோ - அவள்
குடியிருக்கும் அடியவரின் மனமறிவாயோ?

(தூது)

நீ சுற்றச் சுற்ற நாட்களெல்லாம் சடுதியில் ஓடும் - என்
அன்னையினைக் காணாமல் மனமிங்கு வாடும்
நீ சுற்றுவதைக் சற்றே விட்டால் நாளது நீளும் - என்
அன்னை இங்கு வரும்வரையில் உயிர் கொஞ்சம் வாழும்

(தூது)


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2012/02/amman.html

Monday, February 13, 2012

டும்! டும்! டும்!


சுப்பு தாத்தா அருமையாகப் பாடியது இங்கே. மிக்க நன்றி தாத்தா!

கயிலாய நாதனுக்கு கல்யாணமாம்
கயிலாய மலையெங்கும் கொண்டாட்டமாம்
எயிலெ ல்லாம் நீறாக முறுவலித்த சிவனுக்கு,
அயி லேந்தும் அரனுக்கு கல்யாணமாம்!

நந்திதேவர் மேளங் கொட்டிச் சொல்ல
நாரதர் கீதத்தில் சேதி சொல்ல
வாயுதேவன் தென்றல் வீசிச் சொல்ல
வானவர் எல்லோரும் கூடினராம்!

தடாதகைப் பிராட்டிக்கு கல்யாணமாம்
தரணியில் எங்கெங்கும் கொண்டாட்டமாம்
திக்குகள் அத்தனையும் தனியளாய் வென்றிட்ட
தென்னவளாம் தேவிக்கு கல்யாணமாம்!

மதுரையில் எங்கிலும் முரசொலிக்க, அது
மாநில மெங்கிலும் எதிரொலிக்க
மாந்தரின் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க
மாமன்ன ரெல்லோரும் கூடினராம்!

தனபதியே முன்நின்று அலங்காரம் செய்ய
செஞ்சடையோன் சிரசினிலே வைரமுடி துலங்க
வெண்ணீற்று மேனியிலே பொன்னணிகள் மினுங்க
விரிந்ததிரு மார்பினிலே முப்புரிநூல் விளங்க!

அரவங்கள் யாவும்நவ ரத்தினங்க ளாக
இடைகொண்ட புலித்தோலும் பட்டாடையாக
எரிக்கின்ற விழிகூட அருட்புனலாய் மாற
வருகின்றான் எந்தை எழில் மாப்பிள்ளையாக!

மீனாளின் முடிமீதில் மணிக்கிரீடம் ஒளிர
தேனான இதழ்மீதில் பனிமுறுவல் தவழ
காடன்ன கருங்கூந்தல் கால்தொட்டு புரள
காற்றன்ன மெல்லிடையை செம்பட்டு தழுவ!

முத்துமணி ஆரங்கள் மார்மீது தவழ
சுற்றிவரும் வண்டுகள்போல் கருவிழிகள் சுழல
கைவளைகள் கலகலத்துக் கத்திக்கதை பேச
பைங்கிளியாம் எந்தாயும் நிலம்பார்த்து வந்தாள்!

வானவில் தான்வந்து தோரணங்கள் அமைக்க
வண்ண எழிற் கோலங்கள் வீதிஅலங் கரிக்க
உற்சவக் காலம்போல் ஊரெல்லாம் சிறக்க
நற்சுவைப் பண்டங்கள் நகரெல்லாம் மணக்க!

மத்தள மேளங்கள் கொட்டியே முழங்க
வித்தகரின் வாத்யங்கள் திசையெல்லாம் தழங்க
கந்தர்வ கானங்கள் மழையாகப் பொழிய
கன்னியரின் நடனங்கள் விருந்தினரைக் கவர!

நாமகளும் பூமகளும் தோழியராய் இருக்க
நான்முகனும் நான்மறையை நலமுடனே ஒலிக்க
நாரணனும் தங்கையவள் கரம்பிடித்துக் கொடுக்க
நல்லுலகம் போற்றிடவே சிவசக்தி சேர!

அழகுக்கே இலக்கணமாய் மணமக்கள் ஜொலிக்க
அன்பிற்கே இலக்கணமாய் உலகிற்கருள் கொடுக்க
அருகருகே வீற்றிருந்து காதலிலே களிக்க
அன்னவரின் பொற்பதங்கள் பணிந்தேற்றி மகிழ்வோம்!


--கவிநயா

Friday, February 10, 2012

மகாலட்சுமி!வந்தருள்வாய்!

மகாலட்சுமி!வந்தருள்வாய்!


முராரிமார்புறை மகாலட்சுமி!
எங்கள் இல்லம் வருவாய் நீ!

மங்களம் பொங்கிட அருள்வாய் நீ!
திருமணத்திற்காகப் பொருள்கேட்ட
இளைஞனின் ஏழ்மை கண்டிரங்கி

தேசிகருன்மேல் ஸ்ரீஸ்துதி பாட -வேதாந்த
தேசிகருன்மேல் ஸ்ரீஸ்துதி பாட
தங்கமழை பொழிந்த ஸ்ரீதேவி!

முராரிமார்புறை மகாலட்சுமி!
எங்கள் இல்லம் வருவாய் நீ!

மங்களம் பொங்கிட அருள்வாய் நீ!

பிக்ஷையாய் அழுகிய நெல்லி தந்த
பெண்ணின் வறுமை கண்டிறங்கி
உன்னை சங்கரர் துதிபாட -ஆதி

சங்கரர் உன்னைத்துதி பாட
பொன்நெல்லி மழை பொழிந்தவளே!

முராரிமார்புறை மகாலட்சுமி!
எங்கள் இல்லம் வருவாய் நீ!

மங்களம் பொங்கிட அருள்வாய் நீ!

வித்யாரண்யர்முன் பொன்சொரிந்த
உத்தமி!உன்னருளாலவரும்
இடையரை அரசராய் அமர்த்திடவும்,
வித்யாநகரம் உருவானதன்றோ?
விஜயநகரம் உருவானதன்றோ?

முராரிமார்புறை மகாலட்சுமி!
எங்கள் இல்லம் வருவாய் நீ!

மங்களம் பொங்கிட அருள்வாய் நீ!

Monday, February 6, 2012

ஆதரவு யாரெனக்கு?


உன்னை விட்டால் யாரெனக்கு தாயே - என்
கண்ணீரைத் துடைத்தெறிய வாயேன்!
கண்ணோடும் மனதோடும் தாயே - உன்னை
சேர்த்தணைத்துப் பாடுகிறேன் வாயேன்!

ஆதரவு யாரெனக்கு
மாதரசி உன்னை யன்றி?
வேதனைகள் எதுவரினும்
வென்றிடுவேன் உன்னை அண்டி!

நெஞ்சமெல்லாம் இனிக்கச் செய்யும்
நினைவெது உன்னை யன்றி?
தஞ்சமென்று நான் அடைந்தேன்
தங்கத்தாய் உன்னை அண்டி!


--கவிநயா

படத்துக்கு நன்றி: தினமலர்

Thursday, February 2, 2012

தாயே!நான் உன் சேய்!

 

தாயே!நான் உன் சேய்!
(சென்ற ஆண்டு  எனது 'சர்வம் நீயே'வலையில் கலாவின்
குரலில் அளித்த 'அன்னை'பாட்டு மீண்டும் 'அம்மன் பாட்டு '
அன்பர்களுக்காக கீழே!)


தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!

பிறவிக்கடலில் மூழ்கக் கண்டும்
பாராமுகம் ஏனம்மா?
புகல் வேண்டிக் கதறும் பிள்ளைக்கு
பெற்றவள் பதில் 'மௌனமா?'

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

முன்வினைப் பயன் தந்தபின்னும்
சினம் ஏன் தணியவில்லையோ?
திருந்தி வருந்தும் குழந்தை கண்டு
இதயம் இளகவில்லையோ?

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

துட்டப்பிள்ளையைத் திட்டியடித்துத்
திருத்தும் உரிமை உனக்குத்தான்!
தாயுன் மடியில் புகுந்து கொஞ்சும்
உரிமை எனக்கே எனக்குத்தான்!

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]